முதல் அலையை விட கொடூரமானது 2வது அலை.. 4 மாதங்களில் 719 டாக்டர்கள் பலி.. தமிழகத்தில் எத்தனை பேர் தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 12, 2021

Comments:0

முதல் அலையை விட கொடூரமானது 2வது அலை.. 4 மாதங்களில் 719 டாக்டர்கள் பலி.. தமிழகத்தில் எத்தனை பேர் தெரியுமா?

கொரோனா 2வது அலையில் நாடு முழுவதும் 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தகவல்.
அதிகபட்சமாக பீஹாரில் 111 பேரும், டெல்லியில் 109 பேரும் பலி. தமிழகத்தில் 32 மருத்துவர்கள் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா 2வது அலையில் சிக்கி இதுவரை 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக என இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. அதில், அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 111 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதில், தினசரி பாதிப்பு 4 லட்சத்தையும், உயிரிழப்பு புதிய உச்சத்தையும் எட்டியது. அப்போது, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராமல் எப்போதும் மருத்துவர்கள் பிபிஇ கிட் அணிந்துகொண்டு மக்களைக் காப்பாற்ற அயராது உழைத்தனர். அவர்கள் இல்லை என்றால் இந்த நிலையை விட மிக மோசமான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கும். கொரோனா நோயாளிகளிடமிருந்து நமக்கு தொற்று பரவ கூடாது என்று அறிவுரை கூறும் அவர்கள், 24 மணி நேரமும் கொரோனா நோயாளிகளுடனே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் கொஞ்சம் கவனமாக இல்லாவிட்டாலும் கொரோனாவால் எளிதில் தாக்கப்படுவார்கள். அதேபோல முன்பை விட கூடுதல் பணிச்சுமையால் அவர்களுக்கு மன அழுத்தமும் அதிகரிக்கும். இதையெல்லாம் தாண்டியே நமக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் எளிதில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரையும் இழக்கின்றனர்.
இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் இந்தியா முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா 2ம் அலையில் தொற்று பாதித்து 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக பீகாரில் 111 மருத்துவர்களும், டெல்லியில் 109 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 79 பேரும், மேற்கு வங்கத்தில் 63 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும், ஜார்கண்ட் 39 பேரும், ஆந்திராவில் 35 பேரும், தெலங்கானாவில் 36 பேரும், குஜராத்தில் 37 பேரும், ஒடிசாவில் 28 பேரும், மகாராஷ்டிராவில் 23 பேரும், தமிழகத்தில் 32, மத்திய பிரதேசத்தில் 16, அசாம் 8, கர்நாடகாவில் 9, கேரளாவில் 24, மணிப்பூர், சத்தீஸ்கரில் தலா 5, அரியானா, பஞ்சாப், காஷ்மீரில் தலா 3 பேர், கோவா, திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 2 பேரும், பாண்டிச்சேரி ஒருவர் என மொத்தம் 719 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு சுமார் 8 மாதங்கள் நீடித்த கொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்தனர். ஆனால் 4 மாதங்கள் வரை மட்டுமே நீடித்திருக்கும் 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews