கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 06, 2021

Comments:0

கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் காய்கறி, பலசரக்கு கடைகள் அனைத்தும் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. அரசு உத்தரவை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு தொற்று எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நோய் தொற்றின் தீவிரம் அதிகமாக இருப்பதால் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது, பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது, தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுள்ளது. மற்ற இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் விநியோகம், பத்திரிகை விற்பனை போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்படும். அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது. திரையரங்குகள் செயல்படாது. மாநிலம் முழுவதும் உள்ள அழகு நிலையங்கள் இயங்க தடைவிதிக்கப்படுகிறது.அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமானநிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால்விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும். ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற் சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டில் இருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், இரவு நேரப் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும். இந்து புதிய முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன்கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்ற இறைச்சி கடைகள் செயல்படஅனுமதி இல்லை. அரசின் இந்த புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரட்சி அதிகாரிகளுடன் போலீசார் கண்காணிப்பாளர்கள். அரசு உத்தரவை மீறி யாரேனும் கடைகளை திருந்து வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட கடை மூடி சீல் வைத்து உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews