அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 14 மாதங்களாக தரப்படாத ஊதியம், ஓய்வூதியம் தர துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சிறப்பாக செயல்பட சட்டத்திருத்தங்கள் கொண்டு வரவும் மறு ஆய்வு செய்யவும் அனுமதி தரப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் மொத்தம் 32 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஊழியர்கள் என 450 பேர் பணிபுரிகின்றனர். ஓய்வூதியர்கள் 350 பேர் உள்ளனர். மொத்தம் 800 குடும்பத்தினருக்கு ஊதியம், ஓய்வூதியம் கடந்த 14 மாதங்களாக தரப்படவில்லை. இதுதொடர்பான கோப்பு உயர் அதிகாரிகளால் பலமுறை திருப்பி அனுப்பப்பட்டது. அப்போதைய ஆளுநர் கிரண்பேடியும் கோப்பினை திருப்பி அனுப்பினார். இதனால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை, அவர்களை அழைத்து பேசினார். அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தரப்படும் நிதியுதவி பற்றி துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் தலைமைச்செயலர் அஸ்வனிகுமார், ஆளுநரின் ஆலோசகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ”புதுச்சேரி பள்ளிக்கல்வி சட்டத்தையும் அதன் விதிகளையும் ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியங்கள் கடந்த 14 மாதங்களாக தரப்படவில்லை என்ற நிலையை கருத்தில் கொண்டு அதற்கு விரைவில் தீர்வு காண அது தொடர்பான கோப்பு மற்றும் குழுவின் வரைவு அறிக்கை ஆளுநரின் உத்தரவுப்படி சமர்ப்பிக்கப்பட்டது.
ஏற்கெனவே நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தை அவ்வரையரை படி உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியங்கள் தர அனுமதி தந்துள்ளார். அரசு உதவி பெறும் பள்ளிகள் சிறப்பாகவும், பொறுப்புணர்வுடன் செயல்பட குழுவின் வரைவு அறிக்கையில் தேவையான சட்டத்திருத்தங்களை கொண்டு வரவும், மறு ஆய்வு செய்யவும் அனுமதி தந்துள்ளார். தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவுக்கு வந்தவுடன் இக்குழுவின் அறிக்கை அரசின் இறுதி முடிவுக்கு சமர்ப்பிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.