மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களை திருத்த மறுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் என்ற தகுதியை தானாகவே இழந்துவிடுவர் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக தேவசாந்தினி என்பவர் பணியாற்றியபோது, 1997-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சில நாட்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடவில்லை. இதையடுத்து அவரை பணியிடைநீக்கம் செய்து ரோமன் கத்தோலிக்க பள்ளிகளின் மறைமாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. பின்னர் ஆசிரியை அளித்த விளக்கத்தை ஏற்று, தண்டனை எதுவும் வழங்காமல், பணியில் சேர அனுமதித்தது. பணியிடைநீக்க காலத்தை விடுப்பாக கருதுவதாகக் கூறி, விடுப்பு கடிதம் கேட்டு தேவசாந்தினிக்கு நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், அவர் விடுப்பு கடிதம் வழங்க மறுத்துவிட்டார். இதனால், ஊதிய உயர்வும், பணியிடைநீக்க காலத்துக்குரிய ஊதியமும் வழங்கப்படவில்லை.
இதன்பின்னர், அதே மாவட்டத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளிக்கு 1998-ம் ஆண்டு தேவசாந்தினி மாற்றப்பட்டார். அங்கு 31-7-2013 அன்று அவர் ஓய்வுபெற்றார். தமிழக அரசின் அரசாணையின்படி, அவர் அந்த கல்வியாண்டு முழுவதும் பணியாற்ற மறுநியமனம் செய்யப்பட்டார். அப்போது, பிளஸ்-2 மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணிக்குச் செல்ல தேவசாந்தினி மறுத்ததால், அவரது மறுநியமனத்தை ரத்து செய்து, 2014-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் 1997-ம் ஆண்டு பணியிடைநீக்க காலத்துக்கு விடுப்பு கடிதம் வழங்கப்படாததால், அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் 2 வழக்குகளை தேவசாந்தினி தொடர்ந்தார்.
இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாதது, அதனால் மனுதாரரை பணியிடைநீக்கம் செய்தது ஆகிய விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் கூறும் காரணங்களை ஏற்கமுடியாது. அந்தக் காலத்தை அவர் பணியில் இருந்ததாக கருதவேண்டும். அவருக்கு வழங்கவேண்டிய ஊதிய உயர்வையும், ஓய்வூதியத்தையும் 8 வாரத்துக்குள் வழங்க வேண்டும்.
அதேநேரம், மனுதாரர் விடைத்தாள் திருத்தச் செல்லவில்லை என்பதால், அவரது மறு நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆசிரியப் பணி என்பது புனிதமான பணி. கற்பித்தல் மட்டுமல்லாமல், பிழையைத் திருத்துவதும் அவர்களது பணிதான். அதாவது, மாணவர்கள் செய்யும் பிழையைத் திருத்துவது கற்பித்தலில் ஒரு அங்கம் ஆகும். மாணவர்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை திருத்த மறுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் என்ற தகுதியை தானாகவே இழந்துவிடுவர்.
எனவே, விடைத்தாளை திருத்த மறுத்த மனுதாரரின் மறு பணிநியமன உத்தரவை ரத்து செய்தது சரிதான். இதில் தவறு இல்லை என்பதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
Search This Blog
Monday, January 25, 2021
Comments:0
Home
Unlabelled
விடைத்தாளை திருத்த மறுத்தால் ஆசிரியர் என்ற தகுதி தானாக இழப்பு- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
விடைத்தாளை திருத்த மறுத்தால் ஆசிரியர் என்ற தகுதி தானாக இழப்பு- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.