கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படும் வரையில் 9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வகுப்பறையில் 25 மாணவர்கள் வீதம், முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க அரசு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக திங்கட்கிழமை தலைமை செயலகத்தில் ஆலோசனை செய்வதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பனிடம் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:-
10 மாதங்களுக்கு பிறகு இப்போது தான் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளது. வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் 1000 பேர் உள்ள பள்ளியில் 40 வகுப்புகளாக பிரிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. 10-ம் வகுப்புக்கு 20 வகுப்பறைகளும், 12-ம் வகுப்பிற்கு 20 வகுப்பறைகளும் தனித்தனியாக பிரித்து வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் 10, 20 வகுப்புகள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நெருக்கடி இல்லாமல் காற்றோட்டமாக கல்வி கற்க ஏதுவாக வகுப்பு அறைகள் பல கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் 9, 11-ம் வகுப்புகளுக்கு இப்போது வகுப்புகளை தொடங்க வாய்ப்பு இல்லை. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கே இடம் நெருக்கடி ஏற்படுகின்ற நிலையில் அவர்கள் ஒரு பள்ளிக்கு 300, 500 பேர் வந்தால் பாதிப்பு ஏற்படும்.
அதனால் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படும் வரையில் 9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
மாணவர்கள் நலன் முக்கியம், கூடுதலாக மாணவர்களை அனுமதித்தால் பள்ளிகளில் இட நெருக்கடி ஏற்பட்டு நோய் தொற்றிற்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பணிகளை உரிய விதிகளை பின்பற்றி மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை கூட்டம் சேராத வகையில் தனித்தனியாக வரவழைத்து சேகரிக்க வேண்டும், தேர்வு கட்டணத்தை பெற்றுக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
11 public Cancel or not
ReplyDelete