மகிழ்ச்சியளிக்கும் தமிழக கல்வி தரம்! - தினத்தந்தி தலையங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 20, 2020

Comments:0

மகிழ்ச்சியளிக்கும் தமிழக கல்வி தரம்! - தினத்தந்தி தலையங்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடந்தது.
2017-ம் ஆண்டு முதல் நாடு முழுவதுக்கும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வு கொண்டுவரப்பட்டது. “ ‘நீட்’ தேர்வு வினாத்தாள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது, மாநில கல்வித் திட்டத்தில் படித்தவர்களால், இந்த தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. எனவே, ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. ‘நீட்’ தேர்வு அச்சத்தால் இதுவரை 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே, இந்த ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டுக்கு வேண்டவே வேண்டாம் என்று விடப்படும் கோரிக்கையை ஒருபோதும் மறுப்பதற்கு இல்லை. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையான அளவு மாநில பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகளை ஏற்று கல்வித்துறை 2018-2019-ம் ஆண்டு பிளஸ்-1, 2019-2020-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களையும் மாற்றியமைத்தது. இந்த புதிய பாடத்திட்டம் எதற்கும் சளைத்ததல்ல என்பதை கடந்த 13-ந்தேதி நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு வினாத்தாள் நிரூபித்து காட்டியுள்ளது. ‘நீட்’ தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 97 சதவீத கேள்விகள் தமிழ்நாட்டில் இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகங்களில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 180 கேள்விகளில், 174 கேள்விகளுக்கான பதில் பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகத்திலேயே இடம்பெற்றுள்ளன. 2017-ம் ஆண்டு ‘நீட்’ தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 60 சதவீத கேள்விகள்தான், பழைய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்தன. ஆனால், தற்போது நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வில், உயிரியல் பாடத்தில் கேட்கப்பட்ட 90 கேள்விகளில் 87 கேள்விகளுக்கான விடைகள் மாநில பாடத்திட்டத்திலேயே இருக்கிறது. அதில், 54 சதவீத கேள்விகள் பிளஸ்-1 பாடப்புத்தகத்தில் இருந்தும், 46 சதவீத கேள்விகள் பிளஸ்-2 பாடப்புத்தகத்தில் இருந்தும் கேட்கப்பட்டிருந்தன. வேதியியல், இயற்பியல் பாடங்களின் வினாக்களும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகங்களில் இருந்து ஏறத்தாழ சரிசமமாக கேட்கப்பட்டிருந்தன. முன்பெல்லாம் பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக, பிளஸ்-1 பாடப்புத்தகங்களில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. பள்ளிக்கூடங்களிலும் பிளஸ்-1 வகுப்பிலேயே பிளஸ்-2 பாடத்தை நடத்த தொடங்கி விடுவார்கள். இதனால், பிளஸ்-1 பாடங்கள் குறித்த கல்வியறிவு மாணவர்களுக்கு குறைவாகவே இருந்தது. உயர் படிப்புகளுக்கு, குறிப்பாக என்ஜினீயரிங் படிப்புகளுக்கு மாணவர்கள் செல்லும்போது, தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டனர். இதற்கிடையே, கடந்த 2018-ம் ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதனால், ஆசிரியர்களும் பிளஸ்-2 வகுப்புக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பிளஸ்-1 வகுப்புக்கும் கொடுக்கத் தொடங்கினார்கள். அதற்கான பலன் தற்போதைய ‘நீட்’ தேர்வில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த ‘நீட்’ தேர்வில் பிளஸ்-1 பாடங்களில் இருந்தும் சரிசமமாக கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இனி பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளை ஏற்ற இறக்கத்துடன் பார்க்கக் கூடாது என்பதை இந்த ‘நீட்’ தேர்வு உணர்த்தியுள்ளது. இதையெல்லாம் வைத்துக்கொண்டு, நமது மாணவர்களால் தான் இனி ‘நீட்’ தேர்வு எழுதக்கூடிய அளவுக்கு அறிவு இருக்குமே, பிறகு ஏன் இந்த தேர்வை நடத்தக்கூடாது? என்று வாதம் செய்வதில் பொருள் இல்லை. ‘நீட்’ தேர்வில் கலந்துகொள்வதற்கு சமமான கற்றல் வாய்ப்பு, சமமான ஆடுகளம் வேண்டும். தேர்வை எதிர்கொள்ள தொழில்நுட்ப ஆற்றலும் வேண்டும். அதற்கெல்லாம் தனியாக பயிற்சி மையங்களில் படித்தால் தான் முடியும். அந்த அளவு வசதி, வாய்ப்புகள் தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு கிடையாது. எனவே, சிறந்த கல்வித்தரத்துடன் கூடிய பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews