அரசு பள்ளிக்கூடங்களை நோக்கி வரும் மாணவர்கள் - தினத்தந்தி தலையங்கம் (04.09.2020) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 04, 2020

அரசு பள்ளிக்கூடங்களை நோக்கி வரும் மாணவர்கள் - தினத்தந்தி தலையங்கம் (04.09.2020)

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள் 47,500-க்கும் மேல் இருக்கின்றன. இதுதவிர, ஆயிரக்கணக்கில் தனியார் பள்ளிக்கூடங்களும் இருக்கின்றன.
“கல்வி என்பது எதிர்காலத்துக்கான பாஸ்போர்ட்டை போன்றதாகும். ஏனெனில், நாளை என்பது இன்றே அதற்காக தங்களை தயார்படுத்திக்கொள்பவர்களுக்கே சொந்தமானது” என்று அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்பு மந்திரியாக இருந்து படுகொலை செய்யப்பட்ட மால்கம் எக்ஸ் என்ற அறிஞர் கல்வி பற்றி கூறிய முதுமொழியாகும். அந்தவகையில், எதிர்கால தமிழ்நாடு சிறப்பாக இருக்க வேண்டுமென்றால், கல்வி அறிவு இல்லாதவர்களே இல்லை என்றநிலை உருவாக்கப்படவேண்டும். தமிழக அரசு பள்ளிக்கூட கல்விக்காக ஆண்டுதோறும் ஏராளமாக நிதியை ஒதுக்குகிறது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள் 47,500-க்கும் மேல் இருக்கின்றன. இதுதவிர, ஆயிரக்கணக்கில் தனியார் பள்ளிக்கூடங்களும் இருக்கின்றன. அரசு பள்ளிக்கூடங்களில் மாநில கல்வித்திட்டத்தின் கீழ் பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. தனியார் பள்ளிக்கூடங்களிலும் மாநில கல்வித்திட்டத்தின்கீழும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. அதுபோல, சி.பி.எஸ்.இ. என்று கூறப்படும் மத்திய கல்வித்திட்டத்தின் கீழும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்க கடும் கிராக்கி இருக்கிறது. “என் பிள்ளை தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். ஆங்கிலத்தில் இந்த வயதிலேயே சரளமாக பேசுகிறான்” என்று சொல்வதை பெற்றோர் பெருமையாக கருதினர். வசதிபடைத்தவர்கள் மட்டுமல்லாமல், குறைந்த வருவாய் உள்ளவர்களும் தங்கள் பிள்ளை தனியார் பள்ளிக்கூடத்தில் படித்தால் அவனுடைய முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்று தங்கள் வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி பெரும் கஷ்டத்தில் தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்த்து வந்தார்கள். இதை உறுதிபடுத்துவதுபோல, ‘நீட்’ தேர்வில் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்த மாணவர்களால் ஜொலிக்க முடியவில்லை. தனியார் பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்று மருத்துவப் படிப்பிலும், என்ஜினீயரிங் போன்ற தொழில் கல்வி படிப்பிலும் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து வந்தார்கள். தற்போது கொரோனா பாதிப்பு மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கிப்போட்டுவிட்டது. ஏராளமானவர்கள் வேலையிழந்து, வருவாய் இழந்து, வருவாய் பெருமளவில் குறைந்து, தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டணம் கட்டி சேர்ந்து படிக்க முடியாத நிலையில், இந்த ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களையும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களையும் நோக்கி ஓடி வருகிறார்கள். இதுவரையில் 11 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் அனைத்து வகுப்புகளிலும் இந்த ஆண்டு சேர முன்வந்துள்ளனர் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்னும் மாணவர் சேர்க்கை வேகமாக நடந்துகொண்டு இருக்கிறது. எவ்வளவு மாணவர்கள் சேர வருகிறார்களோ, அவ்வளவு மாணவர்களையும் சேர்த்து, தேவைப்பட்டால் கூடுதல் வகுப்புகளை தொடங்க அரசு முன்வரவேண்டும். “வேறுவழியில்லாமல், நம் செல்வங்களை அரசு பள்ளிக்கூடங்களில் சேர்த்துவிட்டோமே” என்று அந்த மாணவர்களின் பெற்றோர் கவலைப்படாத வகையில், “நாம் நல்ல முடிவைத்தான் எடுத்தோம். அரசு பள்ளிக்கூடங்களில் படித்ததால் தரமான கல்வி கிடைத்தது, எங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் பெற்றார்கள்” என்ற பூரிப்பை பெற்றோர் அடையும் வகையில், அரசு பள்ளிக்கூடங்களின் தரம் உயர்த்தப்படவேண்டும். “என்னிடம் சொன்னதை நான் மறந்துவிடக்கூடும். என்னிடம் காண்பித்ததை நான் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடும். என்னை ஈடுபடுத்தினால் நான் புரிந்துகொள்வேன்” என்ற சீன பழமொழிக்கேற்ப, தனியார் பள்ளிக்கூடங்களில் உபகரணங்கள், ஆடியோ, வீடியோ காட்டி மாணவர்களை அந்த பாடங்களில் ஈடுபடுத்திக்கொள்ளும் முறையை கையாள்வதுபோல, அரசு பள்ளிக்கூடங்களிலும் நவீன கற்பித்தல் முறையை கையாளவேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளை இன்னும் மேம்படுத்தவேண்டும். அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களும் நம்மைத்தானே நம்பி இவ்வளவு லட்சம் மாணவர்கள் தேடிவந்திருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்தை உன்னதமாக்கும் கடைமையை நான் அர்ப்பணிப்புடன் செய்வேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும். மொத்தத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படும் கல்வி எதற்கும் சளைத்ததல்ல என்ற உணர்வை இந்த சமுதாயத்திற்கு காட்டும் பொறுப்பை அரசும், கல்வித்துறையும், ஆசிரியர் சமுதாயமும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றே சமுதாயம் எதிர்பார்க்கிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews