அறிவுமிக்க சமுதாயத்தை உருவாக்க அரும்பாடு படுபவர்கள் ஆசிரியர்கள்: ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 04, 2020

அறிவுமிக்க சமுதாயத்தை உருவாக்க அரும்பாடு படுபவர்கள் ஆசிரியர்கள்: ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அறிவுமிக்க சமுதாயத்தை உருவாக்க அரும்பாடு படுபவர்கள் ஆசிரியர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செப். 4) வெளியிட்ட ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி:
"சிந்தனை - லட்சியங்கள் நிரம்பிய அறிவுமிக்க சமுதாயத்தை உருவாக்கும் மிக உன்னதமான பணி ஆசிரியர் பணி. நாட்டை அறிவுக் களஞ்சியமாக மாற்றும் அரிய பணியில் ஒவ்வொரு ஆசிரியரும் போற்றத்தக்க மெச்சத்தக்க சேவையாற்றி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களில் ஒருவராக இருந்து இந்தியாவுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகி பிறகு அதே அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்கும் குடியரசுத் தலைவராகி, சாதனை மிக்க வரலாறு படைத்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். 'மன்னர்களிடையே ஒரு தத்துவ ஞானியாகவும், தத்துவ ஞானிகளிடையே ஒரு மன்னராகவும் திகழ்ந்து', இந்தியத் திருநாட்டுக்குப் பெருமைச் சேர்த்த, அவருடைய பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாளன்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை, ஆசிரியர்கள், மாணவர்கள் என்று அனைவருடனும் ஒட்டுமொத்த சமுதாயமே எழுச்சியுடன் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. வகுப்பறைகளில் தங்கள் வாழ்நாளைக் கழித்து, ஓய்வுபெற்ற பிறகும் கூட நல்லொழுக்கம், பண்புகளைப் போற்றி வளர்க்கும் சமுதாயத்தை உருவாக்குவதில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள். அதனால்தான் அந்த ஆசிரியர்களுக்கு ஆட்சியிலிருந்த போதெல்லாம் திமுக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தியிருக்கிறது. எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் நல்லாசிரியர் விருதை, 1997-ல் ஆட்சியில் இருந்தபோது, கருணாநிதி, 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்று பெயர் மாற்றம் செய்தார். அந்த விருதுகளை வழங்கி ஆசிரியர்களைக் கவுரவித்தார். திமுக ஆட்சியில்தான் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் அளிக்கப்பட்டது. ஈட்டிய விடுப்பு நாட்களைச் சரண் செய்திடும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வு நிலை ஊதியம், 20 ஆண்டுகள் பணி முடித்தால் சிறப்பு நிலை ஊதியம், தமிழாசிரியர்களிடையே இருநிலை நீக்கம், தமிழாசிரியர்களின் 'புலவர்' பட்டயம் 'பி.லிட்' பட்டமாக மாற்றம், தமிழாசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்கள், அகவிலைப் படிகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு, நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களாக்கியது, பதிவு மூப்பு அடிப்படையிலேயே பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்தது, தொகுப்பூதிய ஆசிரியர் நியமன முறையை அடியோடு ரத்து செய்தது என முத்தாய்ப்பான பல சலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்கியது திமுக அரசு என்பது ஆசிரியர்கள் மனதில் என்றைக்கும் நினைவிலிருக்கும். திமுக ஆட்சியில் இருந்த காலங்களில்தான் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர் நியமனங்கள் நடைபெற்றன என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்ளும் அதேவேளையில், புதிய கல்விக் கொள்கையில் ஆசிரியர் சமுதாயத்திற்கு எதிரான அம்சங்களை திமுக ஆணித்தரமாக எதிர்த்து வருகிறது. ஆசிரியர் சமுதாயத்திற்காகவும், அவர்களின் நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகளுக்காகவும் என்றைக்குமே திமுக பாதுகாப்பு அரணாகத் திகழும் என்று உறுதியளித்து, ஆசிரியர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறேன்". இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews