அக்டோபர் 1-ம் தேதி முதல் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் விருப்பப்பட்டால் பள்ளிகளுக்கு செல்லவும், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் முதற்கட்டமாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் விருப்பத்தின் பேரில் ஆலோசனைகளைப் பெற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளுக்கு வந்து செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து, முதல் பிரிவு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும் 2-ம் பிரிவு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களிலும் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களைப் போல், ஆசிரியர்களையும் இரு பிரிவுகளாக பிரித்து சுழற்சி அடிப்படையில் பணியாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தினசரி 50 சதவீத மாணவர்கள், 50 சதவீத ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்படவும், பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பும் முன் பெற்றோர் தங்களது கைப்பட உறுதி மொழிப்படிவத்தை எழுதி ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்படாது என்றும், கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை என்றும், செல்போன் மூலம் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல், 6 அடி தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், கூட்டம் சேரக் கூடாது, AC பயன்படுத்தக் கூடாது, கிருமிநாசினி கொண்டு அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்த வேண்டும், பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கூடாது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பருவநிலை சரியாக இருந்தால் வகுப்பறைக்கு வெளியே பாடங்களை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.