கரோனாவால் குழந்தைகளின் படிப்பு பறிபோகும் அபாயம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 21, 2020

Comments:0

கரோனாவால் குழந்தைகளின் படிப்பு பறிபோகும் அபாயம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உலக வரலாற்றில் முதன்முறையாக உலகின் ஒட்டுமொத்த மாணவர்களின் படிப்பும் ஒரே நேரத்தில் தடைப்பட்டிருப்பது இப்போதுதான். கரோனா ஊரடங்கு காரணமாக உலக அளவில் சுமார் ஒரு கோடி குழந்தைகளின் பள்ளிப் படிப்பு நிரந்தரமாகவே பறிபோகும் அபாயம் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
வறுமையே வாழ்க்கையாக உள்ள குடும்பங்கள், கரோனா ஊரடங்கு காரணமாக மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர 12 கோடி குழந்தைகள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கரோனா காலத்துக்கு முன்பு பள்ளிக்குச் சென்றுவந்த குழந்தைகள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவதால் பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இடைநிற்றல் அதிகரிப்பு, மாணவர் சேர்க்கை குறைவு போன்ற தொடர் நிகழ்வுகளுக்கு இவை காரணமாக உள்ளன. மேலும், குடும்ப வறுமை குழந்தைகளை வேலைக்கு விரட்டுகிறது. புத்தகப் பையைச் சுமப்பதற்குப் பதில் குடும்ப வறுமையைக் குழந்தைகள் சுமக்கும் நிலை உருவாகியுள்ளது. பெண் குழந்தைகளுக்குக் குழந்தைத் திருமணம் செய்துவைக்கும் நிலை அதிகரிக்கும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பள்ளி இடைநிற்றல்
கரோனாவால் வாழ்விழந்துள்ள பெரும்பகுதி இந்தியக் குழந்தைகளின் படிப்பு குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய நிலையில் இருக்கிறோம். ஏனெனில், 2018 ஆம் ஆண்டின் தரவின்படியே இந்தியாவில் பள்ளியில் சேரும் குழந்தைகளில் 30 சதவீதத்தினர் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்தியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் தற்போதைய பாதிப்பு இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்தும் ஆபத்துள்ளது. பள்ளி இடைநிற்றலில் குறிப்பாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகப் பழங்குடியின மாணவர்களில் 39 சதவீதத்தினர் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளனர். வறுமையும் பின்தங்கிய வாழ்நிலையுமே இதற்கு முக்கியக் காரணம். புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகளின் கல்வி

கரோனா ஊரடங்கு திடீரென அறிவிக்கப்பட்டபோது பெரும்பகுதி புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊருக்குப் பல இன்னல்களுடன் சென்றனர். முன்பு இக்குடும்பங்கள் வசித்து, வேலை செய்துவந்த மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் அவர்களின் குழந்தைகள் படித்துவந்திருப்பார்கள். ஊரடங்கால் எந்தக் குழந்தையின் பெற்றோரும் கல்வி மாற்றுச் சான்றிதழ் வாங்கியிருக்க முடியாது. மாற்றுச் சான்றிதழ் இல்லை என்பதாலேயே இவர்களின் படிப்பு கேள்விக்குரியதாக மாறிவிடக் கூடாது என்பதற்காக மத்திய மனிதவளத் துறை, புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் தற்போது இருக்கும் இடத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்து பயில மாற்றுச் சான்றிதழ் அவசியமில்லை என்று அறிவித்துள்ளது.
அவர்களின் வயது, பயிலும் திறனை அடிப்படையாகக்கொண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். மாநில அரசுகள் இதை அமலாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டுமென்று அறிவுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. பிஹார் மாநில அரசு இதை அமலாக்கும்படி மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. கல்விக்கு உதவும் கேரளா

கல்வி உரிமைச் சட்டத்தின்படி புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் அல்லாத குழந்தைகளும் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் பள்ளிகளில் அவர்களின் வயதின் அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இதை கேரள அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு செயலாற்றியுள்ளது. குறிப்பாக, கரோனாவின் தாக்கத்தால் வேலையிழந்து வருமானம் இல்லாத பெற்றோரால் முன்புபோல் தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல தனியார் பள்ளிகள் மாற்றுச் சான்றிதழை வழங்க மறுக்கும் நிலை உள்ளது. கட்டணமும் செலுத்த முடியாமல், மாற்றுச் சான்றிதழும் பெறமுடியாமல் பெற்றோரும் குழந்தைகளும் பரிதவிக்கின்றனர்.
இதைப் போக்கும் வகையில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்பதாம் வகுப்புவரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இதன் விளைவாகத் தற்போது கேரள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். வருமானம் இல்லாமல் கல்விக் கட்டணம் செலுத்த முடியுமா?

கரோனா ஊரடங்கால் தமிழகத்தின் பொருளாதாரமே பின்தங்கியுள்ளது. இது தனிநபரின் வருமானத்தையும் பாதித்திருக்கும் நிலையில் தினசரி வருமானத்தை நம்பியிருந்த பல குடும்பங்கள் தங்களிடம் உள்ள நகைகளை அடகுவைத்துதான் நாட்களைக் கழிக்கிறார்கள். வேலையில்லாத நிலையில் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் மூன்று வேளை பசியாறுவதே சந்தேகம். வருமானத்துக்கு வழியில்லாத நிலையிலும் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தைத் தற்போது வசூலிக்கலாம் என்று நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது.
ஆனால், வருமானம் இல்லாத நிலையில் தங்கள் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில் பெற்றோர் பலர் இருப்பார்கள். மேலும், ஆசிரியர்கள் சம்பளம் உயர்வு கேட்கக் கூடாது எனத் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது. இதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பல லட்சங்கள் சம்பாதித்த பள்ளிகளிலேயே ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லை என்கிறபோது வேலையிழந்துள்ள பெற்றோரால் மட்டும் எவ்வாறு பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியும்?
எனவே, கேரள அரசு அறிவித்துள்ளதுபோல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவிப்பது, தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் இருக்கும் குழந்தைகளின் கல்வியைப் பாதுகாக்க உதவும். அதேபோல் சொந்த ஊர் திரும்பியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் படிப்பும் இதன்மூலம் தடைப்படாமல் தொடரும். கல்விக்கான செலவு எதிர்காலத்துக்கான முதலீடு

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி, குழந்தைகளின் கல்வியைப் பாதுகாக்க இந்த நெருக்கடியான காலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கல்விக்கான செலவென்பது எதிர்கால சமூகத்துக்கான முதலீடு என்கிற வகையில் கூடுதல் சிரத்தையோடு செய்ய வேண்டிய பணி இது. கரோனாவை எதிர்கொள்ள ஊரடங்கு என்றனர். ஊரடங்கால் எழும் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறோம் என்பதே அடுத்து நாம் எதிர்கொள்ள வேண்டிய கேள்வி.
தொடர்புக்கு: renugadevi.l@hindutamil.co.in 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews