பாடப் பிரிவுகளில் உயர்வு தாழ்வு பார்ப்பது ஏன்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 28, 2020

Comments:0

பாடப் பிரிவுகளில் உயர்வு தாழ்வு பார்ப்பது ஏன்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொழில்நுட்பம் மட்டுமே போதாது. தொழில்நுட்பத்துக்கும் தாராளக் கலைகளுக்கும் மனிதவியலுக்கும் இடையில் நடைபெறும் திருமணம்தான் இதயத்திலிருந்து நம்மை உல்லாசமாகப் பாட வைக்கும் என்றார் கணினி உலக ஜாம்பவான் ஸ்டீவ் ஜாப்ஸ். இன்றைய காலகட்டத்துக்கு அவருடைய கூற்று கச்சிதமாகப் பொருந்தும். அதுவும் பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெறாமல் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தற்போது தெரிவித்துள்ளது. இதையடுத்து மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி பாடத் தொகுப்பைத் தேர்வு செய்யப் பள்ளிகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறது. பத்தாம் வகுப்பு முடித்து பிளஸ் 1-ல் பாடத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்கக் காத்திருக்கும் மாணவர்கள் இந்தக் கால அவகாசத்தை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு முன்னதாக கல்வி தொடர்பாக நம்முடைய சமூகத்தில் வேரூன்றி இருக்கும் சில தவறான கற்பிதங்களைக் களைய வேண்டி இருக்கிறது. மாயை விலகட்டும்

முதலாவதாக மருத்துவம், பொறியியல் ஆகிய தொழிற்துறை படிப்புகள்தாம் உயர்ந்தவை. கலை மற்றும் அறிவியல் படிப்புகள் அவற்றுக்கு ஒருபடி கீழானவை என்கிற கல்விப் புலம் சார்ந்த ஏற்றத்தாழ்வை அப்புறப்படுத்த வேண்டும். இந்த எண்ணத்தினால்தான் பத்தாம் வகுப்பில் உயர் மதிப்பெண்கள் குவிக்கும் மாணவர்கள் கண்ணை மூடிக்கொண்டு உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் கணினி அறிவியல் படிப்புகளுக்கு முந்தியடிக்கும் வழக்கம் இன்றுவரை நீடிக்கிறது. பள்ளிப் படிப்பில் எடுக்கும் மதிப்பெண்களுக்கும் எதிர்காலத்தில் சாதனையாளராக உருவெடுப்பதற்கும் நேரடியான தொடர்பு இருக்கிறதா என்கிற கேள்வியை எழுப்ப வேண்டி இருக்கிறது. நல்ல வேளையாக மாநில அளவில் முதல் இடம், இரண்டாம் இடம் என ரேங்க் அறிவிக்கும் முறை 2017-ம் ஆண்டில் கைவிடப்பட்டது. இருந்தாலும் அதற்கு முன்புவரை மாநில அளவில் முதலாவது இடத்தைப் பிடித்தவர்கள் உலகம் அறிந்த பிரபலங்களாக அறியப்பட்டு இருக்க வேண்டும் இல்லையா! ஆனால், அப்படி ஏதும் இதுவரை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. நகைமுரண் ஏன்?

இதை விடவும் தவறான ஒன்று, மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவர்களுக்கு அறிவியல், கணிதம், கணினி அறிவியல் பாடப் பிரிவுகள் மறுக்கப்படுவதாகும். அது மட்டுமின்றி பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் உயரிய மதிப்பெண்கள் எடுத்ததற்காகவே மேல்நிலை வகுப்பில் மூன்றாம் அல்லது நான்காம் பிரிவு படிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தும் ஆசிரியர்களும் பெற்றோரும் இருக்கவே செய்கிறார்கள். பிரிவு 1, பிரிவு 2, பிரிவு 3 என்பதை நேர்க்கோட்டில் பார்க்காமல் மேலிருந்து கீழாகப் பார்ப்பது சரிதானா? எந்த விதத்தில் பொருளியல், வரலாறு படிக்கும் மாணவர்கள் உயிரியல், கணிதம் படிப்பவர்களைக் காட்டிலும் புத்திக்கூர்மையில் குறைவானவர்கள்? சொல்லப்போனால் நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில் பொருளாதார வல்லுநர்களுக்கே முக்கியப் பங்குள்ளது. வரலாறு இன்றி எதுவும் இல்லை. அது மட்டுமின்றி நாட்டின் உயரிய பணி வாழ்க்கையாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளில் சேர இளையோரின் முதல் தேர்வு கலைப் படிப்புகளாகத்தான் இருந்து வருகிறது. ஆட்சியராகவும் ஆணையராகவும் ஆக கலைப் படிப்புகள் பிரதானமாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிலை ஒரு புறம் இருக்க மறுபுறம் கலை, மனிதவியல் படிப்புகளைப் படிப்பது தரமும் அறிவும் தாழ்ந்த காரியமாகப் பார்க்கப்படுவது நகைமுரணாகும். ஆகையால் தனக்கு நாட்டமும் திறனும் எதில் உள்ளது என்பதை மையப்படுத்தியே மேல்நிலைக் கல்வியை மாணவர்கள் தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும். இங்கு நாட்டம், திறன், தீர்மானிப்பது ஆகிய மூன்று விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. பன்முக அறிவுத் திறன்கள்

தொழில்நுட்ப அறிவு, கணிதத் திறன், ஆங்கிலப் புலமை ஆகியவை எப்படி அறிவுத் திறன்களாகப் பார்க்கப்படுகின்றனவோ அதே போல பாடுவது, இசைக் கருவி இசைத்தல், நடனம் ஆடுதல், விளையாடுதல், இயற்கையை நேசித்தல், மனிதர்களோடு சிறப்பாகத் தொடர்பு கொள்ளுதல், சிந்தனைத் திறன் வாய்ந்தவராக இருத்தல் ஆகியவையும் அதே தரவரிசைப் பட்டியலில் இடம்பிடிக்கத்தகவை என்பதைப் பல்வேறு ஆய்வுகளின் வழியாக உலகுக்கு நிரூபித்துக் காட்டினார் அமெரிக்க உளவியர் நிபுணர் ஹாவர்ட் கார்டனர். கணித அறிவும் மொழியியலும் சிறப்பாக இருப்பவர்கள் மட்டுமே அறிவுஜீவி. இவற்றில் சிறந்து விளங்காமல் வேறு திறன்கள் கொண்டவர்களைக் குறைவாகக் கருதுவது குறுகலான பார்வை என்று 80-களியே உலகத்துக்கு சுட்டிக்காட்டினார் கார்ட்னர். அவர் முன்வைத்த பன்முக அறிவுத் திறன்கள் கோட்பாட்டை உலக நாடுகள் பல ஏற்றுக்கொண்டு பின்பற்றத் தொடங்கிவிட்டன. இந்தியாவிலும் சர்வதேசப் பள்ளிகள் என்ற பதாகை ஏந்தும் தனியார் பள்ளிகள் பல, இந்தச் சிந்தனையை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தக் கோணத்தில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் பாடப் பிரிவுகள் கொண்டுவரப்பட வேண்டும். அவற்றை மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும். தாராள கலைப் படிப்புகள்

இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு நெடுங்காலமாக ஒரு மூடநம்பிக்கை நிலவுகிறது. அது கலையும் அறிவியலும் கைகோக்க முடியாது என்கிற கெட்டித்தட்டிப் போன எண்ணமாகும். ஆனால், இன்று உயர்கல்வியில் பிரபலமடைந்து வரும் கல்விப் பிரிவுகளில் ஒன்று தாராளக் கலை (Liberal Arts) படிப்பாகும். அறிவியல், மனிதவியல், வணிகவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு படிப்புத் துறைகளை இணைத்துப் படிக்கும் பல்துறை சார் (Multidisciplinary) முறை இது. இத்தகைய படிப்புகளுக்கே எதிர்கால பணிச்சூழலிலும் அதிக வரவேற்பு இருக்கப்போவதாக தொழிற்துறைசார் வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள். தாராள கலைப் படிப்பில் பல்துறை சார் பாடப் பிரிவுகள் காணப்படுகின்றன. அரசியல், தத்துவம் மற்றும் பொருளியல்; கணினி அறிவியல் மற்றும் தொழில்முனைவோர் தலைமைப் பண்பு; ஆங்கிலம் மற்றும் படைப்பாற்றல் இலக்கிய எழுத்து; அரசியல் மற்றும் சமூகம், வரலாறு மற்றும் சர்வதேச விவகாரம்; ஆங்கிலம் மற்றும் ஊடகவியல் ஆகியவை மேஜர் பாடங்களாகக் கற்பிக்கப்படுகின்றன. நிகழ்த்துக் கலைகள், திரைப்படக் கலை, தொழில்முனைவு, சூழலியல், சர்வதேச உறவுகள், ஊடகவியல், படைப்பூக்க எழுத்து ஆகியன மைனர் பாடங்களாகக் கற்பிக்கப்படுகின்றன. இதுபோக 'ஃபவுன்டேஷன் கோர்ஸ்' (Foundation Course) பிரிவில் சூழலியல், தலைசிறந்த புத்தகங்கள், இந்திய நாகரிகம், கணிதவியல் சிந்தனை ஓர் அறிமுகம், இலக்கியமும் உலகமும், மனமும் நடத்தை சார் உளவியலும், அறிவியல் கோட்பாடுகள், சமூக மற்றும் அரசியல் உருவாக்கம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் இருந்து ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்தும் படிக்கலாம். பாடப் பகுதிகளுக்கு அப்பால் சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன், விமர்சனப் பார்வை, சமூக அக்கறை, அறவியல் உள்ளிட்டவை இத்தகைய கல்விப் புலத்தில் போதிக்கப்படுகிறது. ஆகையால் இவற்றுக்கான வேலைவாய்ப்பும் ஓரிரு துறை சார்ந்து இல்லாமல் மக்கள் தொடர்புத் துறை, விளம்பரத் துறை, சமூகவியல் பணிகள், தொல்லியல் துறை, சர்வதேச விவகாரப் பிரிவு, கல்விப் புலம், குடிமைப் பணி, இதழியல், ஊடகத் துறை, கார்ப்பரேட் நிறுவப் பணிகள், ஆராய்ச்சி மற்றும் எழுத்துப் பணி உள்ளிட்ட பல துறைகளில் பிரகாசமாக உள்ளது. ஆகையால் இனியேனும் கணிதம், உயிரியல், கணினி அறிவியல் படித்தால் பெருமை. கலைப் பாடப் பிரிவுகளைப் படித்தால் சிறுமை என்கிற மாயை விலகட்டும். நாளைய விஞ்ஞானி, கலைஞர், ஆசிரியர், பொறியாளர், ஃபேஷன் வடிவமைப்பாளர், மருத்துவர், கணிதவியலாளர், பொருளியல் அறிஞர், ஊடகவியலாளர் ஆகிய அனைவரும் ஏற்றத்தாழ்வின்றி நம்முடைய பள்ளி வகுப்பறைகளில் சமமாக உருவெடுக்கட்டும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews