ஒரு பள்ளி ஆசிரியர் பாடலாசிரியர் ஆன கதை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 05, 2020

Comments:0

ஒரு பள்ளி ஆசிரியர் பாடலாசிரியர் ஆன கதை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காலவோட்டத்தில் மாறாத கலையோ பண்பாடோ இருக்க முடியாது. திரையிசையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இன்றைய திரையிசை எல்லாவிதங்களிலும் மாறிப்போய்விட்டாலும், 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பல பாடல்கள் இன்றைய தலைமுறையைக் கவர்ந்துகொள்வதுதான் ஆச்சரியம்! அப்படியொரு பாடல் ‘கண்ணாலே பேசிப்.. பேசிக்.. கொல்லாதே..’. 1960-ல் வெளியான ‘அடுத்த வீட்டுப்பெண்’ படத்துக்காக ‘அமரகவி’ தஞ்சை ராமையா தாஸ் எழுதிய பாடல். அந்தப் படத்தின் கதாநாயகி அஞ்சலிதேவி சொந்தமாகத் தயாரித்த ‘ரொமாண்டிக் காமெடி’ வகைத் திரைப்படம் அது. திரையுலகில் புகழின் உச்சியில் இருந்தபோது, தஞ்சை ராமையா தாஸ் வசனம், பாடல்கள் எழுதிய படம். அதில், அடுத்த வீட்டுப்பெண்ணாக இருக்கும் அஞ்சலி தேவியின் மனத்தை வெல்வதற்காக, பாடத் தெரியாத கதாநாயகன் டி.ஆர்.ராமச்சந்திரன் ஒரு வேடிக்கையான தந்திரத்தைக் கையாள்வார். ‘வாத்திய கோஷ்டி’ நடத்தும் பாடகர் கே.ஏ.தங்கவேலுவை அழைத்து வந்து, அவரைத் தனது அறைக்குள் ஒளித்துவைத்து இந்தப் பாடலைப் பாடச் செய்வார். ஆனால், தான் பாடுவதுபோல, தனது முட்டைக் கண்களை உருட்டியபடி, வாயை மட்டும் ராமச்சந்திரன் அசைப்பார். அந்தக் காட்சியில் நிரம்பி வழிந்த காதல் நகைச்சுவையால் திரையரங்கம் தெறித்தது. அந்தப் பாடல் காட்சியில் நடிகர்களின் பகீரத நடிப்பு முயற்சிக்குக் கிடைத்த வரவேற்புக்கு இணையாக, ஆதி நாராயண ராவ் இசையில், பி.பி. னிவாஸ் குரலில், ராமையா தாஸின் வரிகளில் இழைந்த காதலின் கிறக்கம் ரசிகர்களைச் சொக்க வைத்தது. அன்றைக்கு மட்டுமல்ல; இன்றைய தலைமுறையினரை விதவிதமான ‘கவர் வெர்சன்’களை உருவாக்க வைத்துவிட்டது! இந்தப் பாடல் இடம்பெறாத சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளும் இல்லை. ரசனைக்குரிய தற்காலத்தின் இசையமைப்பாளர் ஒருவர், இப்பாடலை அதிக சிரச்சேதம் செய்யாமல் ரீமிக்ஸ் செய்ய, அதுவும் 40 ஆண்டுகள் கழித்து மெகா ஹிட் அடித்துவிட்டது. தஞ்சை ராமையா தாஸ் எழுதிய ஓராயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்களில் இன்றைக்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் பல பாடல்களை இப்படி உதாரணம் காட்டிக்கொண்டே செல்லமுடியும். அத்தனை அமரத்துவம் வாய்ந்த பாடல்களை எழுதியதால்தானோ என்னவோ அவரை ‘அமரகவி’ என்ற பட்டம் தேடி வந்து ஒட்டிக்கொண்டது. குழப்பத்தை ஏற்படுத்தும் கவிஞர்கள் மூவர் அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஆறு புகழ்பெற்ற பாடலாசிரியர்கள் தோன்றினார்கள். பாடலாசிரியராக பாபநாசம் சிவனின் பங்களிப்பு என்பது இசையாக்கம், சாஸ்த்ரீய சங்கீதம், அவரது சம்ஸ்கிருதத் தமிழ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. கவி. கா.மு.ஷெரீஃப், உவமைக் கவிஞர் சுரதா ஆகிய இருவரும் குறைவான படங்களுக்கு எழுதியவர்கள் என்றாலும், அவர்களது பல பாடல்கள் நீடித்த வாழ்வைக் கொண்டிருக்கின்றன. இம்மூவருக்கும் அப்பால், பெரும்புகழ் எய்திய மேலும் மற்ற மூன்று பாடலாசிரியர்களிடம் சில ஒற்றுமைகளும் சாதனைத் தடங்களும் உண்டு. தமிழ் சினிமாவில் 1940-களிலேயே தனது பயணத்தைத் தொடங்கிய தஞ்சை ராமையா தாஸ், 60-களில் நுழைந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், 50-களில் எழுதத் தொடங்கிய மருதகாசி ஆகிய மூவரும் உழைக்கும் மக்களின் நிலையிலிருந்து ஜனநாயகப்படுத்தப்பட்ட எளிய மொழியில் புகழ்பெற்ற பாடல்களை எழுதியிருக்கிறார்கள். இவர்கள் எழுதிய பல பாடல்களை மாற்றி மாற்றித் தவறாகக் குறிப்பிடும் நிலை இருப்பதற்கு, இவர்கள் மக்களின் கவிஞர்களாக, பாடலாசிரியர்களாக இருந்திருப்பதும் ஒரு காரணம். ஆனால், தஞ்சை ராமையா தாஸ், திரைப்பாடலின் பலவித வகைமையில் செய்து காட்டிய முழுமைக்கு அவரே முன்னோடியாகத் திகழ்கிறார். முதல் படமும் முத்திரைப் பாடல்களும் முதன்முதலில் மாடர்ன் தியேட்டர்ஸுக்காக ‘மாரியம்மன்’ (1947) என்ற படத்துக்குக் கதை, வசனம், பாடல்களை எழுதினார். ஆனால், அந்தப் படம் உருவாகி வந்த வேகத்தை முந்திக்கொண்டது, அதே நிறுவனத்துக்கு அவர் இரண்டாவதாக பாடல் எழுதிய '1000 தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’. அப்படம் அதே ஆண்டில் முன்னதாக வெளியாகிவிட்டது. அந்தப் படத்தில், ஜி.ராமநாதன் இசையில், காளி என் ரத்னத்துக்கு ஜோடியாக நடித்த சி.டி. ராஜகாந்தம், பாடிய அந்தப் நகைச்சுவைப் பாடல் ‘வச்சேன்னா வச்சதுதான் புள்ளி’. அதேபோன்ற பாடல்களையே எழுதும்படி ராமையா தாஸை நச்சரிக்கத் தொடங்கியது திரையுலகம். நகைச்சுவைப் பாடலாசிரியர் என்று முத்திரை குத்திவிட்டார்களே என்றெல்லாம் பேனாவை வீசிவிட்டு ஓடிவிட வில்லை அவர். நகைச்சுவைப் பாடல்களே சாமானிய மக்களின் பொழுதுபோக்கு ரசனைக்கு ஊட்டம் தருபவை என்ற வெகுஜன ரசனையின் நாடித்துடிப்பை அறிந்து வைத்திருந்தார் நாடக வாத்தியரான ராமையா தாஸ். அதனால்தான், ‘ஊசிப்பட்டாசே வேடிக்கையாய் தீ வச்சாலே வெடி டபார்.. டபார்..’, ‘சொக்கா போட்ட நவாபு.. செல்லாதுங்க ஜவாபு..’, ‘மாப்பிள்ளை டோய்.. மாப்பிள்ளை டோய்..’, ‘கல்யாண சமையல் சாதம்’, ‘ஜாலிலோ ஜிம்கானா’ என ஜிகினா வார்த்தைகளைப் பயன்படுத்தி பாடல்களை எழுதிக் குவித்த முன்னோடி ஆனார். ஜிகினா வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அவற்றிலும் தரமான நகைச்சுவைப் பாடல்களாக அவை அமைந்ததுடன், இத்தகைய பாடல்களை எழுதித்தர புகழின் உச்சியில் இருந்தபோது கூட அவர் தயங்கவில்லை. அதேநேரம் சந்தம் விளையாடும் உயர்ந்த தமிழில் எழுதக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் உச்சபட்ச சாதனைகளை நிகழ்த்திச் சென்றுவிட்டார். உதாரணத்துக்கு அரசியல், சமூக விமர்சனத்தை, 'மலைக்கள்ளன்' படத்துக்காக எழுதிய ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..’ பாடல் சவுக்கைச் சுழற்றும் கோபத்துடன் பளிச்சென்று சொல்லும். மணமாகிச்செல்லும் எல்லாப் பெண்களுக்கும் அண்ணன்கள் அறிவுரைகூறி அனுப்பும் தொனியில், பேச்சுவழக்குச் சொற்கள் இருக்குமாறு எழுதிய ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே.. தங்கச்சிகண்ணே..!’ (பானை பிடித்தவள் பாக்கியசாலி) பாடல், இன்றைக்கும் கிராமப்புறத் திருமண வீடுகளில் ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது. ‘குலேபகாவலி’யில் இடம்பெற்ற ‘மயக்கும் மாலை பொழுதே நீ போ.. போ..’ இயற்கையுடன் பின்னிப் பிணைத்த காதலின் ஆற்றாமையைக் கடத்தும் பாடல். அதேபோல், காதலின் வசீகரத்தை எடுத்துக்காட்டிய எண்ணற்றப் பாடல்களை எழுதிய தஞ்சை ராமையா தாஸ், தனக்கு இசையும் நன்கு தெரியும் என்பதைச் சொல்லும் இணையற்றப் பாடல்களை எழுதினார். அவற்றில், ‘தேசுலாவுதே தேன்மலராலே’ (மணாளனே மங்கையின் பாக்கியம்) ஓர் அமுத கானம். காதலுக்கான இவரது கானப் பட்டியல் காதுகள் கொள்ளாமல் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது. ராமையா தாஸை மாடர்ன் தியேட்டர்ஸ் அறிமுகப்படுத்தினாலும் ஒரு கட்டத்தில் விஜயா - வாஹினி ஸ்டுடியோவின் படங்களுக்கு ஆஸ்தான கதை, வசனப் பாடலாசிரியர் ஆன பின்பே காதல் பாடல்களில் தனியிடம் பிடித்தார். நாடக ஆசிரியர் ஆன பள்ளி ஆசிரியர் 1914 ஜூன் 5 அன்று தஞ்சாவூரின் மானம்பூச்சாவடியில் பிறந்து அங்குள்ள புனித பீட்டர் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் தஞ்சை கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து புலவர் பட்டம் பெற்றார். தஞ்சை ஆட்டு மந்தைத் தெருவில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் ஆசியராகப் பணிக்குச் சேர்ந்தார். ஆனால், மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஆசிரியர் பணியிலிருந்து விலகி, ஜெயலட்சுமி கானசபா என்ற பெயரில் தனது நாடகக் குழுவைத் தொடங்கினார். ஐந்தே வருடங்களில் அவரது குழு தமிழகம் முழுவதும் புகழ்பெற்றது. அவரது ‘மச்சரேகை’என்ற நாடகம் புகழ்பெற்று விளங்கியது. சேலத்தில் தஞ்சை ராமையா தாஸின் நாடகக்குழு முகாமிட்டு அந்த நாடகத்தை நடத்தி வந்தது. அதன் பாடல்களைப் பற்றிக் கேள்விப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம், அந்த நாடகத்தைக் காண மாறுவேடத்தில் சென்று பார்த்துத் திரும்பினார். வெகுவிரைவில் அவர் ராமையாதாஸை அழைத்துக்கொண்டார். சேலத்தில் ராமையாதாஸ் முதல்முறை முகாமிட்டபோது அவரைச் சந்தித்தார் நாகு என்ற இளைஞர். அவரைத் தனது குழுவுடன் சேர்த்துக் கொண்டதுடன் பள்ளியே சென்றறியாத அவருக்குத் தமிழ் பயிற்றுவைத்து தனது நாடகங்களில் வில்லனாக நடிக்கவைத்து உயர்த்தினார். அவர்தான் அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜன் எனும் ஏ.பி. நாகராஜனாக பின்னர் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டினார். அதேபோல் தெலுங்கில் வெற்றிபெறும் படங்களைத் தமிழில் மொழிமாற்றி, அவற்றுக்கு வசனமும் பாடல்களும் எழுதும் கலையில் முன்னோடியாக விளங்கியவரும் தஞ்சைராமையாதாஸ் தான். திருவாரூரிலிருந்து தன்னிடம்வந்துசேர்ந்த யேசுதாஸ் என்ற இளைஞருக்குக் கதை, வசனக் கலையைக் கற்றுக் கொடுத்ததுடன் பல படங்களில் எழுதவைத்து மொழிமாற்றுறு சினிமா கலையையும் கற்றுக் கொடுத்தார். அவர்தான் பின்னாளில் சாதனைகள் பல படைத்த கதாசிரியர் ஆரூர்தாஸ். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews