EMI மூன்றுமாதச் சலுகை முடியப்போகிறது, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 20, 2020

Comments:0

EMI மூன்றுமாதச் சலுகை முடியப்போகிறது, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி நாடு தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் அளித்த கடன்களுக்கான தவணைகளை மூன்று மாதம் நிறுத்திவைக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 27-ம் தேதி ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்தது. இந்த மூன்று மாத நிறுத்திவைப்பு என்பது மார்ச் மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 31ம் தேதி வரையிலான காலத்தில் செலுத்தவேண்டிய தவணைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்திய அரசு முதல் முதலில் மூன்று வார காலத்துக்கு மட்டுமே முடக்க நிலை அறிவித்தது. அந்நிலையில், மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் மூன்று வார காலத்துக்குப் பிறகு தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பில் மூன்று மாத கால தவணை நிறுத்திவைப்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து முடக்க நிலை நீட்டிக்கப்பட்டு, தற்போதைய நான்காவது முடக்க நிலை நடப்பு மே மாத இறுதி வரை தொடரும் நிலை உருவாகியுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் கடந்து அதிவேகத்தில் செல்லும் நிலையில், மே மாத இறுதியில்கூட அனைத்து வணிக நடவடிக்கைகளும் மீண்டும் முழு வேகத்தில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை உறுதியாக கூறமுடியாத நிலையே நிலவுகிறது.
ஒருவேளை முடக்க நிலை மே மாத இறுதியில் முழுமையாக முடிவுக்கு வருவதாக வைத்துக்கொண்டால்கூட மூன்று மாதம் முடங்கியிருந்த தொழில்கள் முழுவேகத்தில் செயல்படவும், பழைய நிலைக்குத் திரும்பவும் குறைந்தபட்சம் பல மாதங்கள் பிடிக்கலாம் என்ற கணிப்புகள் பரவலாக இருக்கின்றன. வேலையிழப்பும், ஊதியக் குறைப்பும் தொழிலாளர்களை, ஊழியர்களை கடுமையாகத் தாக்கும் நிலையே உள்ளது. இந்நிலையில் சிறு குறு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும், ஊழியர்களும் தங்கள் தவணைக் கடன்களை ஜூன் மாதம் முதல் கொண்டே செலுத்தும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில், தவணை நிறுத்திவைப்பை மேலும் பல மாதங்களுக்கு நீட்டிக்கவேண்டிய தேவை இருக்கிறது என்கிறார் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர். இப்படி நீட்டிப்பது என்பது கடன் பெற்றவர்களின் பிரச்சனை மட்டுமல்ல, கடன் அளிக்கும் நிறுவனங்களின் பிரச்சனையும் ஆகும் என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத அந்த ஓய்வு பெற்ற உயரதிகாரி. "எனக்குத் தெரிந்து பெரும்பாலான வங்கிகளின் மேலதிகாரிகள், இப்படிப்பட்ட நீட்டிப்பை அளிக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பெரும்பாலும் இன்னும் சில நாள்களில் செப்டம்பர் வரையில் இந்த நீட்டிப்பு அறிவிக்கப்படலாம்" என்கிறார் அவர். ஆனால், எல்லா தொழில்களுக்கும் ஒன்றுபோல தவணை நிறுத்திவைப்பு அறிவிப்பது பொருந்தாது. சில தொழில்கள் தங்கள் உற்பத்தியை, வணிகத்தை தொடங்க பல மாத கால அவகாசம் தேவைப்படலாம். அவற்றுக்கு, அவற்றின் இயல்புக்கு ஏற்ற முறையில் தவணை நிறுத்திவைப்பும், அவகாசமும் வழங்கப்படவேண்டியது அவசியம் என்கிறார் அவர்.
வங்கிகள் ஏன் தவணை நிறுத்திவைப்பை நீட்டிப்பதில் ஆர்வம் காட்டவேண்டும் என்று கேட்டபோது, "ஏற்கெனவே தவணை நிறுத்திவைப்பு அமலில் உள்ளதால், தவணை கட்டாத கணக்குகள் பற்றி கடன் மதிப்பீட்டு நிறுவனங்களுக்கு புகார் செல்லாது. இதனால், கடன் வாங்கியவர்களின் ரேட்டிங் பாதிக்கப்படாது. இந்த நிறுத்திவைப்பு முடிவுக்கு வந்த பிறகு தவணை கட்டாவிட்டால், கடன் பெற்றவர்கள் பற்றி மதிப்பீட்டு நிறுவனங்களுக்குப் புகார் செல்லும். அவர்களின் ரேட்டிங் குறையும். தவிர, ஏராளமான கடன் கணக்குகள் வாராக் கடன்களாக மாறும். இந்நிலையில், மொத்த நிதிக்கடன் அமைப்புமே குழப்பத்திலும், சிக்கலிலும் மூழ்கும்" என்று கூறும் அவர் எனவே இந்த நீட்டிப்பு வங்கிகளைக் காப்பாற்றவேகூட மிக அவசியம் என்கிறார். பேங்க் எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (பெஃபி) அகில இந்திய இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனும் நிச்சயமாக, மேலும் மூன்று மாதங்களுக்கு தவணை நிறுத்திவைப்பு நீட்டிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான இந்த ஆறு மாத காலத்துக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்பட்ட கடன்களுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதே தங்கள் சங்கத்தின் கோரிக்கை என்றும் அவர் தெரிவிக்கிறார்.
சில கேள்விகள், பதில்கள் கோவிட்-19 முறைப்படுத்தல் திட்டம் என்ற பெயரில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பை விளக்கி இந்திய வங்கிகள் சங்கத்தின் முதன்மை செயலதிகாரி சுனில் மேத்தா எழுதிய குறிப்புகள், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரபூர்வ தளத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த விளக்கங்களின் அடிப்படையில் கடன் தவணை நிறுத்திவைப்பு (மொரட்டாரியம்) தொடர்பான பொதுவான சில கேள்விகளுக்கு எளிமையான சில பதில்களை அளிக்கிறோம். (இந்த பதில்கள் மேலெழுந்தவாரியாக ஒரு புரிதலை ஏற்படுத்துவதற்காக தரப்படுகிறவை. வாசகர்கள் தங்கள் கடன் தொடர்பான குறிப்பான விளக்கங்களுக்கு தங்கள் வங்கியைத்தான் அணுகவேண்டும்)
தற்போதுள்ள அறிவிப்பின்படி தவணை நிறுத்திவைப்பு யாருக்கெல்லாம் பொருந்தும்? எல்லா வேளாண்மை உள்ளிட்ட எல்லாவிதமான தவணை காலமுறைக் கடன்கள், கடனட்டைகளில் (கிரடிட் கார்டுகள்) கீழ் பெற்ற கடன்கள், மேல் வரைப்பற்று (ஓவர் டிராஃப்ட்) ஆகியவற்றுக்கும் இந்த தவணை நிறுத்திவைப்பு பொருந்தும். நிறுத்திவைக்கப்பட்ட தவணைகளை எப்போது செலுத்தவேண்டும்? நிறுத்திவைப்புக் காலம் முடிந்த உடனே செலுத்தவேண்டுமா? இல்லை. ரிசர்வ் வங்கி அறிவித்த திட்டப்படி, கடனுக்கான ஒட்டுமொத்த காலமுறையுமே 90 நாள்கள் நீட்டிக்கப்படும். அதாவது எடுத்துக்காட்டாக 2020ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி கடைசி தவணை கட்டி முடிக்கப்படவேண்டிய ஒரு கடனுக்கான காலம், இந்த திட்டத்தின் மூலம் 2020 ஜூன் 1 வரையில் நீட்டிக்கப்பெறும். இ.எம்.ஐ. அடிப்படையிலான தவணைக் கடன்களின் காலம் மூன்று மாதம் நீட்டிக்கப்படும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews