Search This Blog
Monday, May 18, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா மாற்றத்தைச் சுட்டிக்காட்டும் ஓட்டைகள் நிரம்பிய துறைகளில் ஒன்றாக வெளிக்காட்டுவதில் நம்முடைய கல்வித் துறையும் ஒன்று. குழந்தைகளின் சுகாதாரம், பாதுகாப்பைப் புதிய கோணத்தில் சிந்தித்து, நாம் பள்ளிக் கல்வியைச் சீரமைத்த பிறகே பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும். ஆனால், நம்முடைய ஒன்றிய - மாநில அரசுகள் காட்டும் அவசரத்தைப் பார்த்தால், அவர்கள் கரோனாவிடமிருந்து ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லையோ என்று சந்தேகப்படத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டை மட்டுமே எடுத்துக் கொண்டாலும் மொத்தமாக மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தொடும்; இதில் கணிசமான எண்ணிக்கை பள்ளி மாணவர்களுடையது. நாம் வெளியே பேசிக்கொண்டிருக்கும் தனிநபர் இடை வெளியைப் பராமரித்து ஒரு பள்ளிக்கூடம்கூட நடத்த முடியாது. காரணம், மிக நெருக்கமான சூழலிலேயே நம் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வகுப்பறைகளில் ஒருவரையொருவர் ஒட்டியபடியே மாணவர்கள் அமர்ந்திருக்கின்றனர். அப்படியென்றால், எப்படி நம் பள்ளிக்கூடங்களையும் பள்ளிக்கல்வியையும் சீரமைப்பது?
பள்ளிக்கல்விக்கு மாற்றாக இணையதள உதவியோடும், கற்றல் செயலிகள் மூலமும் வீட்டுக்கே கல்வியைக் கொண்டுவர வேண்டும் என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஸூம், கூகுள் வகுப்பறைகள், வாட்ஸ்அப் காணொலிகளை ஒரு வழிமுறையாகப் பேசுவோரை ஒரு ஆசிரியராக நகைப்புடனேயே கடக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், லட்சக்கணக்கான ஏழைச் சிறார்கள் உணவுக்கே தத்தளிக்கும் நாட்டில், இணையக் கல்வி தொடர்பில் பேசுவது ஒரு குரூர நகைச்சுவை. மேலும், இணைய வசதியைக் கல்விக்கான ஒரு சாதனமாகப் பயன்படுத்த முடியுமே தவிர, அதையே கல்வித்தளமாகச் சுருக்கிவிட முடியாது.
மேலும், சுயமாகக் கற்றல் என்பது கல்லூரி மாணவர்களுக்கே ஓரளவு பொருந்தும். கணினியிலோ செல்பேசியிலோ வகுப்பை எதிர்கொள்ளும் மனநிலையானது, பள்ளிக் குழந்தைகளுக்குப் பொருந்தாது; குழந்தை உளவியலையோ, ஆசிரிய அனுபவத்தையோ கொஞ்சமேனும் அறிந்தவர்கள் இப்படிப் பேசத் துணிய மாட்டார்கள். வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தை இப்படிப் பயன்படுத்துவது வேறு; அதையே தீர்வாகக் கருதிடல் அபத்தம்.
எப்படியும் நாம் பள்ளிக்கூடங்களை நோக்கியே செல்ல வேண்டும். அப்படியென்றால், எப்படி அதற்கு நாம் தயாராவது? எப்படியும் அடுத்த சில மாதங்களுக்கேனும் கரோனா நீடிக்கலாம் என்பதையே எல்லாத் தரப்பினரும் கூறுகிறார்கள். ஆக, எதிர்வரும் கல்வியாண்டு முழுமையுமே கணக்கில் கொண்டு நாம் தயாராக வேண்டும். அதில் அதீதப் பரவலுக்கு வாய்ப்புள்ள மாதங்களாகக் கருதப்படும் மே, ஜூன் மாதங்களைக் கடந்தே பள்ளிக்கூட மறுதிறப்பை நாம் திட்டமிட வேண்டும்.
மிக அடிப்படையான அம்சம். பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் காட்டவே கூடாது. குறிப்பாக, பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பாகவே எஞ்சியிருக்கும் தேர்வுகளை நடத்தி முடித்திட வேண்டும் என்ற எண்ணம் கூடவே கூடாது.
கல்விக்கு மிக அடிப்படையான அம்சம் மாணவர்களின் மனநிலை. லட்சக்கணக்கான குழந்தைகள் சாமானியர்களுடையவை. ஒரு மாதத்துக்கும் மேலாக வருமான இழப்பையும் அது சார்ந்த நெருக்கடிகளையும், குடும்ப கஷ்டத்தையும் வீட்டுக்குள்ளேயே முடங்கி எதிர்கொண்டுவரும் குழந்தைகள் எப்படித் தேர்வுக்குத் தயாராக முடியும்? பத்தாம் வகுப்புத் தேர்வு என்று வைத்துக்கொண்டாலேகூட சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் தேர்வு இது. மே, ஜூன் மாதங்கள் தமிழ்நாட்டில் கரோனா பரவலில் உச்சம் தொடும் மாதங்களாக நிபுணர்களால் கணிக்கப்படும் நாட்களில், இவ்வளவு பேர் கூடும் அபாயத்தை ஏன் அரசே முன்னின்று செய்ய முற்படுகிறது? கோயம்பேடு சந்தைபோல கொத்துக்கொத்தான தொற்றுப்பரவல் மையங்கள் உருவாகவே இது வழிவகுக்கும். குறைந்தது ஒரு மாதம் தேர்வுகளைத் தள்ளிப்போடுவதில் என்ன சிக்கல்? ஏன் இவ்வளவு அவசரம்?
ஜூனில் சூழலைப் பார்த்துக்கொண்டு, கிருமிப் பரவல் நம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் பள்ளி தொடங்குவதையும், தேர்வுகள் நடத்துவதையும் அரசு யோசிக்கலாம். அப்படித் தொடங்கும்போது, அருகமைந்த பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க பெற்றோர்களுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும். வீட்டிலிருந்து பாதுகாப்பாக நடக்கும் தூரத்தில் உள்ள பள்ளிகளே பாதுகாப்பானவை; எல்லா வகையிலும் சிறந்தவை என்பதை கரோனாவும் நமக்கு வலியுறுத்துகிறது.
பள்ளிச் சீருடையில் அங்கமாக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது: முகக்கவசம். குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் விலையின்றி முகக்கவசத்தை அரசே வழங்க வேண்டும். இதற்கான தயாரிப்பு வேலைகளை இப்போதே கேரளம் தொடங்கிவிட்டதை இங்கே சுட்டிக்காட்டலாம்.
சுதந்திர இந்தியாவில் சீர்மிகு கல்வித் துறையைச் சிந்தித்த முன்னோடி குழுவான கோத்தாரி கல்விக் குழு முன்வைத்த 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற விகிதாச்சாரம் சட்டம் இயற்றப்படாமலேயே இப்போது தானாக நடைமுறைக்கு வரப்போகிறது. ஒரு வகுப்பில் தற்போது பொதுத் தேர்வுக்கு உட்கார வைப்பதுபோல 20 மாணவர்கள் மட்டுமே தள்ளித் தள்ளி (ஒரு மேசைக்கு இரண்டு பேர் வீதம்) அமர வைக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான குறைந்தபட்ச இடைவெளி நான்கு அடி இருக்க வேண்டும் என்றால், வகுப்பறை நாற்பதடிக்கு நாற்பதடி எனும் அளவீட்டில் இருக்க வேண்டும். பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும்; அவ்விதமான வகுப்பறை இல்லாத பள்ளிகளில் அதற்கு ஏற்றபடி மாணவர்களை அமர்த்த வேண்டும். சரி, கூடுதல் ஆசிரியர்களுக்கு என்ன செய்வது? தற்போதைய ஆசிரியர் எண்ணிக்கைப்படியே பள்ளிகளை இரண்டு பணிவேளைகளாகப் பிரிக்கலாம். சில வகுப்புகளுக்குக் காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், ஏனைய வகுப்புகளுக்கு மதியம் 1.00 மணி முதல் 4.30 மணி வரையிலுமாகப் பிரிக்கலாம். அதேபோல, ஒற்றைப்படை வகுப்புகள் (ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு… இப்படி) ஒரு நாளும், இரட்டைப்படை வகுப்புகள் மறுநாளும் என்று பள்ளிகள் செயல்படலாம். அதேசமயம், கடுமையான பணிச்சுமையைக் கொஞ்சமேனும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளத்தக்க அளவுக்குப் புதிய பணி நியமனங்களும் நடக்க வேண்டும்.
பள்ளிகளின் நெருக்கடிகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். கழிப்பறை நேரமும், உணவு இடைவேளை நேரமும்தான் கூட்டம்கூட வாய்ப்பு அதிகம். எனவே, வகுப்புவாரியாகக் கால அவகாசம் கொடுத்து இரண்டு, மூன்று தவணைகள் கொண்டதாக இந்த இடைவேளைகளை மாற்றி அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு பள்ளி வளாகத்தில் இரண்டு நுழைவாயில்கள் இருப்பதை உறுதிசெய்யலாம். கணினி அறை ஆய்வகங்களை நான்கு அடி இடைவெளி விட்டு மாற்றி வைக்க வேண்டும்.
வாரம் ஒரு முறை மருத்துவச் சோதனை, சுகாதார நடவடிக்கைகளைப் பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும்.
1920-களில் பிளேக் பரவிய காலத்தில் பள்ளி மாணவர்களைப் பேணிட, புத்தகப் பையைப் பள்ளியிலேயே விட்டுச் சென்றுவிட உத்தரவிட்டது ஆங்கிலேய அரசு. அத்தோடு, வீட்டில் சிலேட் மற்றும் பல்பம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவித்தது (தொற்றுநோய் தடுப்புச் சட்டம் 1896). சிலேட் எனும் எழுதுபொருளின் தோற்றமே இந்தியாவில் இப்படித்தான் பரவலானது. மீண்டும் அதற்கான தருணம் ஏற்பட்டிருக்கிறது. புத்தகப் பையைச் சுமப்பதிலிருந்தே நம் குழந்தைகளுக்கு விடுதலை தருவதற்கு இந்த ஒரு கல்வியாண்டு முழுவதையுமே பரிசோதனைக் காலமாகப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
கரோனா தொற்றைத் தடுக்க நம் பள்ளித்தலம் அனைத்தும் இனிய பாதுகாப்பான மருத்துவக் குடில்களாகவே மாற வேண்டியுள்ளது. பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு ஆரூடங்களை வெளியிட்டுக்கொண்டிருக்காமல், பள்ளிகளில் நாம் செயல்படுத்த வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய வேண்டும். அதற்காக ஒரு வல்லுநர் குழுவை உடனே அமைக்க வேண்டும்.
- ஆயிஷா இரா.நடராசன், பள்ளித் தலைமையாசிரியர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
பள்ளிக்கூடங்களை எப்படி, எப்போது திறக்க வேண்டும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.