உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து முதலாவது உலகத் தமிழ் இசை மாநாட்டினை மதுரையில் டிசம்பர் 14, 15 ஆகிய இரு நாட்களில் நடத்தின.
100 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அளவில் நடைபெறும் முதல் தமிழ் இசை மாநாடு என்பது இந்த மாநாட்டின் சிறப்பு. மூன்று இணை அமர்வுகளாக நடத்தப்பட்ட மாநாட்டில், ஒரு அரங்கத்தில் பன்னாட்டுத் தமிழிசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தினர்.
இன்னொரு அரங்கத்தில் பன்னாட்டுத் தமிழிசை ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அளித்தனர். மூன்றாவது அரங்கில் தொல்லிசைக் கருவிகள் கண்காட்சி நடைபெற்றது. அந்த அரங்கில் பார்வையாளர்கள் பழமையான இசைக் கருவிகளை வாசித்து மகிழ்ந்தனர்.
மாநாட்டின் தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் இசைத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கும், மாநாட்டுக்காகப் பல்வேறு வகையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த மாநாடு தொடர்ந்து நடைபெறுவதற்காக உலகத் தமிழ் இசை ஆராய்ச்சி சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சங்கத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்றனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள்:
* தமிழ் இசையை இளைய சமுதாயத்திற்குக் கொண்டு சேர்ப்பதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் இசை ஒரு பாடமாக்கப்பட வேண்டும். அதனைப் பயிற்றுவிப்பதற்கு முறையாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
* இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ உலகத் தமிழிசை மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்.
* தமிழ் இசை சார்ந்த முயற்சிகளை ஆவணப்படுத்துவதற்கு இசை ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
* பழங்குடி மக்களின் இசையைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* இசைக் கருவிகளை உருவாக்கும் தொழிலாளர்கள் வாழ்வு மேம்படுவதற்கு ஒரு நல வாரியத்தை ஏற்படுத்த வேண்டும்.
* இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இசை அறிஞர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்பட வேண்டும்.
* இரண்டாவது உலகத் தமிழ் இசை மாநாட்டினை புதுச்சேரியில் நடத்த வேண்டும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.