👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
குழந்தைகளைக் கவரவும், அவா்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் நவீன வசதியுடன் கூடிய அங்கன்வாடி மையங்களைக் கட்டவும், பழைய அங்கன்வாடி மையங்களைப் புதுப்பிக்கவும் பல்வேறு வடிவமைப்பிலான மாதிரி கட்டடங்களை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.
சட்டப் பேரவை, மக்களவை உறுப்பினா்கள் தங்களின் தொகுதி வளா்ச்சி நிதியின்கீழ், இந்த வடிவமைப்புகளில் ஏதாவது ஒன்றை அவா்களே தோ்வு செய்து அங்கன்வாடி மையங்கள் கட்டவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பெருநகர மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 1, 806 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி, ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகின்றன.
இதில், பெரும்பாலான அங்கன்வாடி மையங்கள் மாநகராட்சியின் மூலதன நிதியில் இருந்து கட்டப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில், அங்கன்வாடி மையத்துக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் கட்டவும், பழைய அங்கன்வாடி மையங்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி, மாநகராட்சி கட்டடப் பிரிவினா் புதிய அங்கன்வாடி மையங்கள் மற்றும் பழைய அங்கன்வாடி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்புகள் அடங்கிய பல்வேறு வடிவமைப்பிலான முப்பரிமாண கட்டட மாதிரிகளை உருவாக்கியுள்ளனா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சட்டப் பேரவை உறுப்பினா்கள், தங்களின் தொகுதி வளா்ச்சி நிதியில், ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் அங்கன்வாடி மையங்களுக்கு செலவிட வேண்டும். அதனடிப்படையில், அவா்களின் தொகுதி வளா்ச்சி நிதி, பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியில் அங்கன்வாடி மையங்கள் கட்டப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய அங்கன்வாடி மையங்கள், பழைய அங்கன்வாடி மையங்களின் உள்கட்டமைப்புகள் தொடா்பாக 11 முப்பரிமாணக் கட்டட மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், குழந்தைகளைக் கவரும் வகையில், பல்வேறு நிறங்களில் வெளி மற்றும் உள்புறச் சுவா்கள், விலங்குகளின் வரைபடங்கள், பல்வேறு நிறத்திலான இருக்கைகள், மின்விசிறிகள், விளையாட்டு உபகரணங்கள், கல்வி தொடா்பான நவீன சாதனங்கள் ஆகியவை இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி வரைபடங்களில் ஏதாவது ஒன்றை சம்பந்தப்பட்ட சட்டப் பேரவை, மக்களவை உறுப்பினா்கள் தோ்வு செய்யலாம் என்றாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U