அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கை: வாய்ப்புகளைத் தவறவிடும் மாணவர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 07, 2019

Comments:0

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கை: வாய்ப்புகளைத் தவறவிடும் மாணவர்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாமக்கல்: கைத்தொழில் ஒன்று இருந்தால், எங்கும் பிழைத்துக் கொள்ள முடியும் என்பதற்கேற்ப, கல்வியில் அதிக நாட்டமில்லாத, சுமாராக பயிலும் மாணவர்களுக்காக கொண்டு வரப்பட்டது தான் தொழிற்கல்வி முறை. கடந்த 1962-ஆம் ஆண்டில் காலகட்டத்தில்தான் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாகத் தொடங்கின. தற்போது, 10, 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் உயர்கல்வியை நாடி பலர் செல்வதைக் காண முடிகிறது. ஆனால், அப்போது, தொழிற்கல்விக்குத் தான் மாணவர்களும் சரி, அவர்களது பெற்றோரும் சரி அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். தமிழகத்தில் அப்போதைய கால சூழலில், 20, 30 எண்ணிக்கையிலேயே தொழிற்பயிற்சி நிலையங்கள் இருந்தன. தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் அதிகம் இல்லை.
சென்னை கிண்டி, அம்பத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள் பழைமையானவை. வெல்டர், பிட்டர், வயர்மேன், டர்னர், மோட்டார் வாகனப் பழுது பார்ப்பவர் போன்ற ஓரிரு பிரிவுகள் மட்டுமே இருந்தன. பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்காக, இப்போது போராடுவதுபோல், அப்போது அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்காக மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். சொந்த மாவட்டங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை கிடைக்காமல், வெளி மாவட்டங்களில் உள்ள பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயின்றவர்கள் ஏராளம். காலம் செல்லச் செல்ல, பல்தொழில்நுட்பக் கல்லுரி (பாலிடெக்னிக்) மீதான மோகம் மாணவர்களிடையே அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கையானது குறையத் தொடங்கியது. 1962 முதல் 2002 வரையில் அதிக சேர்க்கையுடன் விளங்கிய தொழிற்பயிற்சி நிலையங்களில் கூட சேர்க்கை மந்தமடைந்தது. பொறியியல், மருத்துவம், வேளாண், நர்சிங் என மாணவர்கள் பல்வேறு படிப்புகளை நாடிச் செல்லத் தொடங்கினர். 10, 12-ஆம் வகுப்பில் தோல்வியுற்றவர்கள் கூட, தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை பெறுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. தற்போதைய நிலையில் ஒவ்வோர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலும், ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே சேர்க்கை நடைபெறுகிறது. அதிலும் 20 தொழிற்பிரிவுகளில், குறிப்பிட்ட ஓரிரு பிரிவுகளில் மட்டுமே மாணவர்கள் சேருகின்றனர். மற்ற பிரிவுகள் காலியாகக் கிடக்கின்றன.
அவற்றில் சேர்க்கையை அதிகப்படுத்த கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் கடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் மாதம் பயிற்சி தொடங்க வேண்டிய நிலையில், செப்டம்பர் வரையிலும் சேர்க்கை இல்லாததால், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஒருவர் கூறியது; தமிழகத்தில் மொத்தம் 90 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, நெல்லை போன்ற இடங்களில் உள்ள பழைமையான நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. சிறிய மாவட்டங்களில் ஐந்து முதல் 10 வரையிலான பிரிவுகளே இருக்கின்றன. இத் தொழிற்பயிற்சி கல்வி முறையில் மாணவர்கள் மட்டுமே சேர்க்கை பெற்று வந்தனர். தற்போது மாணவியரும் சேருகின்றனர். அவர்களுக்கு கணினி வழியிலான பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. அப்போது இருந்த ஆர்வம் மாணவர்களிடத்தில் தற்போது இல்லை. அரசு வழங்கும் சைக்கிள், பேருந்து அட்டை, உதவித்தொகை, மடிக்கணினி என அனைத்து சலுகைகளையும் வழங்குகிறோம். ஆனாலும் மாணவர்கள் சேர்க்கை என்பது ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதம், அறிவியல் பாடத்தில் உள்ள மதிப்பெண்களைக் கூட்டி சதவீத அடிப்படையில் சேர்க்கை நடத்தப்பட்டது.
ஆனால், தற்போது 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 10-ஆம் வகுப்பில் தோல்வியடைந்திருந்தாலும் சேர்க்கையை வழங்குகிறோம். அவ்வாறு இருந்தும் முழுமையாக சேர்க்கை நிறைவடைவதில்லை. 30 சதவீதம் மட்டுமே மாணவர்கள் உள்ளனர். மீதமுள்ள 70 சதவீதத்தைச் சேர்ப்பதற்குள் அடுத்த ஆண்டு வந்துவிடும் போல் உள்ளது. அரசுத் தரப்பில் தொழிற்பயிற்சி நிலையங்கள் குறித்து விளம்பரப்படுத்த நிதி ஒதுக்கீடு இல்லை. ஒரு முதல்வர், 15 ஆசிரியர்கள் உள்ள நிலையில், மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது கவலையளிக்கிறது. வரும் காலங்களில் இதே நிலை நீடித்தால் என்னவாகும் என்று சொல்வதற்கில்லை. பொறியியல், மருத்துவம் மட்டும் படிப்பல்ல, தொழிற்பயிற்சியும் ஒரு படிப்புதான். வாழ்க்கையில் இறுதி வரை நமக்கு துணை புரிவது கைத்தொழில் மட்டுமே. அதனைப் பயில மாணவரானாலும், மாணவியரானாலும் விரும்பி வர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை. இங்குள்ள ஓரிரு பிரிவுகள் வேண்டுமானால் நீக்கப்படலாம் என்றார். - எம்.மாரியப்பன்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews