இந்நிலையில், இன்று (அக்.,29) அதிகாலை 2.20 மணிக்கு வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறியதாவது: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் இருந்து இரவு 10.30 மணியளவிலிருந்து அழுகிய வாடை வந்தது. குழந்தையின் கை சிதைந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு , மருத்துவக் குழுவினரின் ஆய்வுக்கு பின் சுஜித் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் உடலை மீட்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பிரேத பரிசோதனை
இதனையடுத்து சுஜித்தின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக இடுக்கி போன்ற கருவி தயார் செய்யப்பட்டது. பேரிடர் மீட்புக்குழுவினர் 88 அடி ஆழத்தில் குழந்தை சுஜித்தின் உடலை மீட்டனர். அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குழந்தை சுஜித் உயிர் பிழைக்க தமிழகமே பிரார்த்தனை செய்த நிலையில், சுஜித் உயிரிழந்தது தமிழகத்தை, சோக கடலில் மூழ்கச் செய்துள்ளது.
இறுதிச்சடங்கு
பிரேத பரிசோதனைக்கு பின்னர், சுஜித் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, உறவினர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை நடந்தது.
ஆழ்துளை கிணறுகள் மூடப்படும்
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தை சுஜித் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. சிறப்பு கருவிகள் மூலம் அவனது உடல் வெளியே எடுக்கப்பட்டது. சுஜித் எப்போது உயிரிழந்தான் என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும். இங்கிருக்கும் இரண்டு ஆழ்துளை கிணறுகளும் சிமெண்ட் கான்கிரீட் கொண்டு மூடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 5 நாள் 'உயிர்' போராட்டம் திருச்சி, மணப்பாறை அருகே, வேங்கைக்குறிச்சி நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி. இவர்களின் 2 வயது மகன் சுஜித் வில்சன், தன் வீட்டின் அருகில் பயனில்லாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் அக்.,25ம் தேதி மாலை 5.30 மணியளவில் விழுந்தான். தகவலறிந்து மணப்பாறை போலீசார், தீயணைப்பு துறையினர் வந்தனர். சுஜித், சுமார் 20 அடி ஆழத்தில் இருப்பது தெரியவந்ததை அடுத்து, பல்வேறு மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.
குழந்தை சுவாசிப்பதற்கு ஏற்றார் போல், தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வந்தது. ஆழ்துளை கிணற்றின் அருகே குழி தோண்டும் பணியும் தொடங்கப்பட்டது. ஆனால், கடினமான பாறைகள் இருந்ததால் அதிலும் சிக்கல் ஏற்பட்டது. குழந்தை பயப்படாமல் இருக்க, குழிக்குள் விளக்கும், கண்காணிப்பதற்கு கேமராவும் பொருத்தப்பட்டது. ஒவ்வொரு முயற்சியின் போதும் தோல்வியுற்று, குழந்தை சில அடிகள் கீழிறங்கியதால், 20 அடியில் சிக்கிய குழந்தை 88 அடிக்கும் கீழ் சென்றான்.
பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிய, இறுதி முயற்சியாக ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் அதிநவீன 'ரிக்' இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சியும், கடின பாறைகளால் தாமதமானது. இறுதியில் 80 மணி நேர மீட்புப்பணி பலனளிக்காமல், குழந்தை சுஜித் உயிரிழந்தான்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.