விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு உகந்த பலகாரங்களை வைத்துப் படைப்பார்கள். அப்படி கார வகைகளில் உப்பு உருண்டை, சுண்டல், கார அவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கொண்டைக் கடலை சுண்டல் :
தேவையான பொருட்கள் கொண்டைக் கடலை - ஒரு கப்
தேங்காய் - கால் கப்
எண்ணெய் - 1 ஸ்பூன்.
கருவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை : கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் கழுவி குக்கரில் போட்டு போதுமான நீர் மற்றும் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக விடவும். வெந்ததும் தண்ணீரை இறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொறிந்ததும், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து வதக்கி அதை கொண்டைக் கடலையில் சேர்த்து பிரட்டினால் சுண்டல் தயார். கார அவல் :
தேவையான பொருட்கள்
அவல் - ஒரு கப்
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் - கால் கப்
செய்முறை :
அவலை 10 நிமிடம் ஊற வைக்கவும். ஊறியதும் அதை தண்ணீரிலிருந்து பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொறிக்கவும். அடுத்ததாக காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
தற்போது அவலை சேர்த்து கிளறவும். அதோடு தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கிளறி இறக்கி விடவும்.
கார அவல் தயார். உப்பு உருண்டை :
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - ஒரு கப்
தேங்காய் - அரை கப்
கடுகு - கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
செய்முறை :
பச்சரிசி மாவை உப்பு சேர்த்து தளதளவென பிசைந்துகொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அதோடு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு , நறுக்கிய தேங்காய் சேர்த்து வதக்கி பிசைந்த மாவில் கொட்டி மீண்டும் பிசையவும்.
இறுதியாக அவற்றை உருண்டைகளாகப் பிசைந்து இட்லி குக்கரில் 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.
உப்பு உருண்டை தயார்.