அன்று: பள்ளிக் கட்டணம் கட்ட முடியாதவர் இன்று: இண்டர்நேஷனல் பள்ளிகளின் தலைவர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 25, 2019

Comments:0

அன்று: பள்ளிக் கட்டணம் கட்ட முடியாதவர் இன்று: இண்டர்நேஷனல் பள்ளிகளின் தலைவர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்த உலக வாழ்க்கையில் அவரவர் சந்திக்கும் சூழ்நிலைகளைப் பொறுத்து மனதில் ஒரு குறிக்கோள், லட்சியம் தோன்றும். அப்படி ஒரு நிகழ்வைச் சந்திக்கும்போதுதான் நாம் தெளிவான சிந்தனையோடு செயல்பட்டு வாழ்வில் முன்னேறுகிறோம். குறிக்கோளை அடைய நாம் பலவிதமான வழிகளில் முயற்சி செய்கிறோம். விடாமுயற்சியோடு தங்கள் லட்சியங்களைத் தொடர்கிறவர்கள் வெற்றிபெறுகிறார்கள். அப்படி தன் சிறுவயதில் படிப்பதற்கே வசதியின்றித் தவித்த ஏழைச் சிறுவனான கிருஷ்ணமூர்த்தி இன்று பல்லாயிரம் மாணவர்கள் பயிலும் கிருஷ் இண்டர்நேஷனல் ஸ்கூல்களின் தலைவர். இனி அவரின் வெற்றிக்கதையைப் பற்றி தெரிந்துகொள்வோம். ‘‘பழைய தென்னாற்காடு மாவட்டம் தற்போதைய கடலூர் மாவட்டத்திலுள்ள மலையனூர் என்ற சிறிய கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். விவசாயம்தான் அப்பா-அம்மாவுக்குத் தொழில். ஏழ்மையான குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தேன். எங்கள் ஊரின் அருகே உள்ள சிறுப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் பி.எஸ்சி., பிசிக்ஸ் படித்தேன். அடுத்து மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் உயர்கல்வியான பி.எட். படித்தேன். தொடர்ந்து அண்ணாமலை யுனிவர்சிட்டியில் தொலைதூரக் கல்வியில் மெடிக்கல் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ ஆகிய படிப்புகளைப் படித்தேன். ஆரம்பக் காலகட்டத்தில் நான் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புகளை அரசு விடுதியில் தங்கித்தான் படித்தேன். அன்றைய காலகட்டத்தில் கல்லூரிக் கட்டணம் மிகமிகச் சிறிய தொகைதான், அதைக்கூட கட்டமுடியாமல் இருந்ததால்தான் அரசு விடுதிகளில் தங்கிப் படித்தேன். கல்லூரியில் படிக்கும்போது அங்கு என்னோடு படித்த நண்பர்கள்தான் எனது சாப்பாட்டுச் செலவுகளுக்குக்கூட உதவி செய்தனர்.
எனக்கு மனதில் ஒரு ஓரத்தில் மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பிளஸ்2 வில் அதிக அளவு மதிப்பெண் பெற்றிருந்ததால் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் மருத்துவம் படிக்க இடமும் கிடைத்தது. ஆனால், அந்தச் சீட்டுக்கான தொகையை என்னால் கட்டமுடியவில்லை என்பதாலேயே மருத்துவம் படிக்க முடியாமல் போய்விட்டது.’’ என்று சோகத்துடன் தெரிவித்தார். ‘‘இளநிலைப் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலைக்குச் சென்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சாதாரண தொழிலாளியாகச் சேர்ந்தேன். அங்கிருந்த ஊழியர் மூலமாக அந்த கம்பெனியிலிருந்து ஒரு பார்மஸி கம்பெனியில் நானூறு ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த வேலையில் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு படிப்படியாக மேனேஜர் பதவிக்கு உயர்ந்தேன். அதன்பிறகு ஒரு மூன்று ஆண்டுகள் ஹைதராபாத்தில் வேலை செய்துவிட்டு பார்மா தொழில் வர்த்தகத்தை தொடங்கினேன். ஓரளவு வருமானம் வந்தது, சேமிக்க தொடங்கினேன். இந்தச் சூழலில்தான் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் பார்மா வர்த்தகத்தோடு தயாரிப்பு தொழிலைத் தொடங்கினேன். 2001 முதல் 2011 வரை தொழில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் சிறுவயதில் பள்ளிக் கட்டணம் கட்ட முடியாமல் நான் படிக்க முடியாத சூழல் உள்ளிட்டவற்றை மனதில் இருத்தி எப்படியாவது ஒரு பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்று யோசித்தேன். நடுத்தர மக்களுக்குத் தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும் என மனதிலிருந்த கனவுக்கு விதைபோடும் விதமாக பள்ளிக்கூடம் தொடங்க சென்னை போரூர் அடுத்த கோவூரில் நிலம் வாங்கினேன்.
கட்டடங்கள் அமைத்து ஸ்ரீகிருஷ் இண்டர்நேஷனல் ஸ்கூல் என்ற பெயரில் பள்ளியை ஆரம்பித்தேன்” என்று வெற்றிப்புன்னகையோடு தெரிவித்தார் கிருஷ்ணமூர்த்தி.தங்கள் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து கூறும்போது, ‘‘ஒரு பள்ளி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முறையில் உள்கட்டமைப்பு வசதிகளோடு தரமான கல்வி, அதாவது ஆங்கிலம் மற்றும் இன்னபிற திறமைகளை வளர்க்க யோகா, ஓவியம், நடனம், சிலம்பம், செஸ் என எல்லாவிதமான கலைகளையும் கற்றுக்கொடுக்கிறோம். குறிப்பாக மாரல் எஜுகேஷன், அதாவது அந்தக் காலங்களில் நம் வீடுகளில் கூட்டுக்குடும்பமாக இருந்தார்கள். குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி தாலாட்டுப் பாடுவது, கதைகள் சொல்வதைக் கேட்கும்போது அதுவே அவர்களுக்கு ஒரு நீதிபோதனையாக அமைந்துவிடும். எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது அப்போதே நம் மனதில் பதிந்துவிடும். பெரியவர்கள் என்ன பேசுகிறார்களோ அதைத்தான்குழந்தை களும் திரும்பப் பேசும். இன்றைய நடைமுறையில் உள்ள குடும்பங்களைப் பார்த்தோமானால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எல்லோருமே தனிதனித் தீவுகள்போல் பிரிந்து வாழ்கிறார்கள். கிராமம் மற்றும் நகரம் என அனைத்து இடங்களிலும் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து குடும்பமாக பேசுவதற்கோ கதைகளைச் சொல்வதற்கோ வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த நவீன உலகத்தில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டிவி என வந்துவிட்டதால் எல்லோரும் அதில் மூழ்கிப் போய்விடுகிறார்களே தவிர, குழந்தை என்ன செய்கிறது அவர்களுக்கு என்ன தேவையிருக்கிறது எனக் கேட்பதற்கே நேரமில்லாமல் போய்விடுகிறது. அதனால் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மூலம் மாரல் வேல்யூஸ் சொல்லி அந்தச் சூழலை குழந்தைகளுக்கு நாங்கள் அமைத்துக் கொடுக்கிறோம். இதனால் மாணவர்கள் மனஅழுத்தமின்றி புத்துணர்வோடு கல்வி பயில்கிறார்கள்.
பொருளாதாரத் தேடல் மூலமாக நம்மால் கொடுக்க முடியாத நீதிபோதனை மற்றும் மனஅழுத்தத்தைப் போக்கும் கலந்துரையாடல் ஆகியவற்றைப் பள்ளியிலேயே கொடுக்கிறார்கள் என்று பெற்றோர்கள் இந்தக் கல்விமுறையை அதிகமாகவே விரும்புகிறார்கள். அடுத்து அனைத்து வகுப்பறைகளிலும் ஸ்மார்ட் போர்டு வைத்துள்ளோம். டான்ஸ், ஆர்ட், சிலம்பம், செஸ் என எல்லா வகுப்பறைகளிலும் இந்த ஸ்மார்ட் போர்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் போர்டில் கூகுளிலிருந்து தரவுகளை எடுத்து டிஜிட்டலைசேஷன் செய்து விஷுவலேஷனுக்கு கொண்டுபோகும்போது மாணவர்களுக்கு எளிதாகக் கல்வியும் தொழில்நுட்பமும் புரிகிறது. எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஒரு மாணவன் பதிலளிக்குமாறு பொதுஅறிவை வளர்க்கக்கூடிய ஒலிம்பியாட் தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளோம். அடுத்து சர்வதேச அளவிலான ஒலிம்பியாட் எடுத்துள்ளோம். அதனால் இந்தப் பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவில் சாதனை படைத்து வருகிறார்கள்.’’ என்று பெருமிதத்தோடு கூறுகிறார். ‘‘நடுத்தர மக்களுக்கு நல்லதொரு தரமான கல்வியை கொடுக்க நினைத்து சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இண்டர்நேஷனல் ஸ்கூலில் இன்றைக்கு நான்காயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். கோவூர் மற்றும் ரத்தினமங்களம் ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றது. ஒன்று நம் மனதில் தோன்றிவிட்டால் அதை நிறைவேற்ற விடாமுயற்சி மேற்கொண்டால் எதுவும் சாத்தியமாகும்’’ என்ற தன்னம்பிக்கை வரிகளுடன் முடித்தார் கிருஷ்ணமூர்த்தி.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews