👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பெரியார் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட எடப்பாடி, அரூர், பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம் உள்ளிட்ட நான்கு உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டுள்ளதாக, உள்ளாட்சி தணிக்கை அறிக்கையில் (2016-17) ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் போதிய ஆவணங்கள் உள்ளாட்சி தணிக்கைத் துறையிடம் வழங்கப்பட்டு விட்டதாகவும், ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் ஆட்சேபணை விலக்கிக் கொள்ளப்படும் என பல்கலை. துணைவேந்தர் பதில் அளித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக் கழகம் கடந்த 1997-இல் ஆரம்பிக்கப்பட்டது. இப் பல்கலைக்கழகத்தின் கீழ் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 6 உறுப்பு கல்லூரிகள் உள்பட மொத்தம் 106 இணைவு பெற்ற கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பெரியார் பல்கலைக் கழகத்தில் சுமார் 28 துறைகள் உள்ளன.
பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை (செனட்) கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற்றது. இதில் 2016-17 ஆம் ஆண்டுக்கான பல்கலைக் கழகத்தின் தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது. உள்ளாட்சி தணிக்கைத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் பல்வேறு ஆட்சேபணைகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக எடப்பாடி, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட நான்கு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். எடப்பாடி, பென்னாகரம் உறுப்புக் கல்லூரிகளுக்கு 2014-15 ஆண்டிலும், அரூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டி உறுப்புக் கல்லூரிகளுக்கு 2016-17 ஆம் ஆண்டிலும் முதல்வர்கள் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுமார் 171 பக்கங்களைக் கொண்ட உள்ளாட்சி தணிக்கை அறிக்கையில் பென்னாகரம், அரூர், எடப்பாடி, பாப்பிரெட்டிபட்டி ஆகிய நான்கு உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் நியமனத்தில் தணிக்கை அறிக்கையில் (பக்கம் 49, 50, 51, 52) ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு, மறுசீராய்வு செய்திட கோரியிருப்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரியார் பல்கலைக்கழகத்தின் எடப்பாடி உறுப்புக் கல்லூரி முதல்வராக ஆர். வெங்கடேஷ்வரன் கடந்த 2014 அக்டோபர் 18 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) விதிகளின்படி முதல்வர் பதவிக்கு நியமனம் செய்யப்படுவோர் இணை பேராசிரியர் அல்லது பேராசிரியராகவோ சுமார் 15 ஆண்டுகள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், உயர்கல்வித் துறையில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி, ஆசிரியர், நிர்வாகத்தில் பணியாற்றிருக்க வேண்டும்.
ஆனால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் இதர அரசு கல்வி நிறுவனங்களில் பணிபுரியாத நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தனியார் கல்வியியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய நேரத்தில், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்குப் புறம்பாக எடப்பாடி உறுப்புக் கல்லூரி முதல்வராக ஆர்.வெங்கடேஷ்வரன் நியமிக்கப்பட்டிருப்பதாக, உள்ளாட்சி தணிக்கை அறிக்கை ஆட்சேபணை தெரிவித்துள்ளது.
மேலும், தகுதியில்லாத முதல்வர் நியமனம் குறித்து அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவை மறுசீராய்வு செய்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அதுபோல பல்கலைக்கழக பென்னாகரம் உறுப்புக் கல்லூரி முதல்வர் கே. செல்வவிநாயகம், அரூர் உறுப்புக் கல்லூரி முதல்வர் ஜி. வெங்கடேஷன், பாப்பிரெட்டிபட்டி உறுப்புக் கல்லூரி முதல்வர் பி. கார்த்திகேயன் ஆகிய முதல்வர்களின் நியமனம் பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்குப் புறம்பாக உள்ளதாக, உள்ளாட்சி தணிக்கைத் துறை ஆட்சேபணையுடன் சுட்டிக் காட்டியுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என். பசுபதி கூறியதாவது: பெரியார் பல்கலைக்கழகத்தின் பணி நியமனம் மற்றும் டெண்டர் உள்ளிட்டவைகளில் முறைகேடு நடந்திருப்பதாக ஏற்கெனவே கடந்த ஓராண்டாக புகார் தெரிவித்து வந்தோம். தற்போது அதை நிரூபிக்கும் வகையில் பெரியார் பல்கலைக்கழகப் பணி நியமனம் குறித்து உள்ளாட்சி தணிக்கை அறிக்கையில் ஆதாரப் பூர்வமாக ஆட்சேபணைதெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நியமனத்தின்போது பொறுப்பில் இருந்த துணை வேந்தர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக, பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ. குழந்தைவேல் கூறியது:
உள்ளாட்சி தணிக்கை அறிக்கையில் சுமார் 600 ஆட்சேபணைகள் இருந்தன. கூட்டுக் கூட்டத்தின் மூலம் தற்போது 200 ஆட்சேபனைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது. பல்கலைக்கழகத்தின் கணக்கு விவரங்கள் ரூ.40 கோடிக்கு மேல் ஆட்சேபணை இருந்ததை, தற்போது ரூ.28 கோடியாக குறைத்துள்ளோம். உள்ளாட்சி தணிக்கை அறிக்கையை வெளிப்படைத் தன்மையாக வெளியிட்டு வருகிறோம்.
உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் நியமனம் குறித்த ஆட்சேபணைகளுக்குப் போதிய ஆவணங்கள், உள்ளாட்சி தணிக்கை துறையிடம் வழங்கப்பட்டுவிட்டது. ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், தணிக்கை குறித்த ஆட்சேபணை விலக்கிக் கொள்ளப்படும் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U