"வகுப்புக்கு ஒரு ஆசிரியர்" என்ற ஒரு உத்தரவு மட்டுமே அரசுப்பள்ளிகளை காப்பாற்ற முடியும்!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 18, 2019

"வகுப்புக்கு ஒரு ஆசிரியர்" என்ற ஒரு உத்தரவு மட்டுமே அரசுப்பள்ளிகளை காப்பாற்ற முடியும்!!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
"ஒரு லட்சம் மாணவர்கள் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ப்பு" "1315 அரசுப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவன் கூட சேரவில்லை " "16000 ஆசிரியர்கள் உபரி " "அங்கன்வாடிகளில் பணியாற்றுவது கௌரவக்குறைச்சலா?" இந்த 4 செய்திகளும் கடந்த சில நாட்களில் தனித்தனியாக நாளிதழ்களில் இடம் பிடித்தவை. ஆனால் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஆசிரியர் கலந்தாய்வுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இறுதித்தீர்ப்பு வரும்வரை உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் என்ற நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டு தான் இருப்பார்கள். உபரி ஆசிரியர்கள் என்றால் யார்? தமிழக அரசின் கல்வித்துறை நிர்ணயித்திருக்கும் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30. ஈராசிரியர் பள்ளிகளுக்கு மாணவர்கள் எண்ணிக்கையை பற்றி பிரச்சினை இல்லை. அதற்கு மேல் கூடுதல் ஒவ்வொரு ஆசிரியர் பணியிடத்துக்கும் 30 மாணவர்கள் வீதம் தேவை. இந்த விகிதத்தை விட மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் உபரியாக கருதப்படுவர்.
வகுப்புக்கு ஒரு ஆசிரியர் ஏன் அவசியம்? மிகக்குறைவான எண்ணிக்கை உள்ள ஒரு பள்ளியை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். 10 மாணவர்கள் 2 ஆசிரியர்கள் உள்ள பள்ளி. 1 முதல் 5 வகுப்பு வரை வகுப்புக்கு 2 மாணவர்கள் என மொத்தம் 10 மாணவர்கள். 1 மற்றும் 2 ஆகிய வகுப்புகளுக்கு தலா 4 பாடங்கள். 3 முதல் 5 வரையிலான வகுப்புகளில் தலா 5 பாடங்கள். ஈராசிரியர் பள்ளி என்றால் ஒரு ஆசிரியருக்கு குறைந்தது 11 பாடங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு பருவத்திற்கு குறைந்த பட்சம் 55 பக்கங்களைக்கொணட பாடநூல்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் யாராலும் எந்த வகுப்பிற்கும் முழுமையாக பாடம் கற்றுக் கொடுக்க முடியாது. எப்படி கல்வித்தரம் உயரும்? ஐந்தாம் வகுப்பு பயில்கின்ற ஒரு மாணவன் மூன்றாம் வகுப்பு மாணவனோடு ஒன்றாக அமர்ந்து பயில வேண்டும் என்பது கல்வி உரிமைக்கு எதிரானது. ஐந்து வகுப்புகளுக்கு இரண்டு ஆசிரியர்கள் இருக்கின்ற பள்ளிகளில் எந்த பொது அறிவு உள்ள பெற்றோரும் தங்கள் குழந்தைகளை சேர்க்க மாட்டார்கள். ஏன் உபரி ஆசிரியர்களை நிரவல் செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஆண்டும் தணிக்கைத்துறை கீழ்க்கண்டவாறு கண்டனம் தெரிவிக்கிறது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை விட தமிழகத்தில் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் தேவையின்றி வழங்கப்படுகிறது. எனவே அவர்களை வேறு பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யப்பட வேண்டும். நியாயம் தான். வரவு செலவு கணக்கு பார்த்து தணிக்கை செய்ய கல்வி லாபம் தரும் தொழில் கிடையாது. எனவே ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் செலவு கிடையாது. எதிர்கால மனித வளத்தை கட்டமைப்பதற்கான முதலீடு. இதை உணரும் அரசு மட்டுமே எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் அரசாகும்..
அரசின் கொள்கைபடி ஆசிரியர் மாணவர் விகிதம் இல்லாததால் தணிக்கைத்துறை கண்டனம் தெரிவிக்கிறது. வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்று அரசுக்கொள்கையை மாற்றி அமைத்து விட்டால் இந்தப்பிரச்சனை தீர்ந்து விடும். இதில் ஏதும் தடை இருப்பதாக தெரியவில்லை. சட்டச் சிக்கல் ஏதும் இருந்தால் விவரமறிந்தவர்கள் கூறலாம். உண்மையில் உபரி ஆசிரியர் என்பதே கிடையாது. அவர்களை உரிய முறையில் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமாக வேலை வாங்க முடியாதது தான் பிரச்சினை. அது யாருடைய தவறு என்று நாம் ஆராய வேண்டாம். என்ன செய்யலாம்? தீர்வு 1 # மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் தொடக்கப்பள்ளிக்கு குறைந்த பட்சம் 5 ஆசிரியர்கள் , நடுநிலைப்பள்ளிக்கு குறைந்தபட்சம் 8 ஆசிரியர்கள் என்ற கணக்கில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என அரசு அறிவிக்கவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட 5 சதவீதமாவது அதிகமாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் ஒரு விதியாக வைக்கலாம்‌. .இப்படி கணக்கிட்டால் உபரி இருக்காது. மாறாக வேலை வாய்ப்பு உருவாகும். பொதுமக்கள் மத்தியில் அரசுப்பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் உள்ளனர் என்ற மதிப்பும் உண்டாகும். இதனால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். தீர்வு 2 # ஆசிரியர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு ,பணியிடை பயிற்சி, கணக்கெடுப்பு பணி, தலைமை ஆசிரியர் கூட்டங்கள் ஆகியவற்றிற்காக பள்ளியை விட்டு செல்லும் போது மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் உபரி ஆசிரியர்களை கொண்ட ஒரு "பதிலி" ஆசிரியர் குழுவை உருவாக்க வேண்டும் .எந்த பள்ளி ஆசிரியர் விடுப்பில் சென்றாலும் உடனே பதிலி ஆசிரியர் அப்பள்ளிக்கு சென்று கற்பித்தல் பணியை தடங்கலின்றி ஆற்றலாம்.
அரசு பேருந்துகள், தொடர்வண்டி , அஞ்சல் துறை, மருத்துவமனைகள் ஆகிய சேவைகளில் உள்ள பணியாளர்கள் விடுப்பில் சென்றால் பதிலி நியமிப்பது வழக்கமே‌. இல்லாவிட்டால் இந்த சேவைகள் பாதிக்கப்படும். இதற்கு இணையான சேவை கல்விச்சேவை. மாணவர் நலனும் பாதுகாப்பும் சம்பந்தப்பட்ட இவ்விஷயத்தில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு நாள் தேர்தல் பணிக்கே ரிசர்வில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இருக்கும் போது முக்கியத்துவம் வாய்ந்த கல்விப் பணிக்கு உபரி ஆசிரியர்களைக் கொண்ட " ரிசர்வ் " அணியை அமைக்கலாம். தீர்வு 3 # தொடக்கப்பள்ளிகளில் ஓவிய ஆசிரியர்கள் , உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் கிடையாது. ஒவியம், விளையாட்டு, இசை உள்ளிட்ட திறன்கள் இளம் வயதிலேயே அவசியம் முறைப்படி கற்பிக்கப்பட வேண்டியவை. இத்திறன்களில் ஆர்வமுடைய உபரி ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து தக்க பயிற்சி அளித்து அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் பணியமர்த்தலாம். தீர்வு 4 # பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு முட்டி மோதும் தனியார் பள்ளிகளுக்கு அருகில் அரசே அனைத்து வசதிகளுடன் கூடிய "மாதிரி பள்ளிகளை " அமைத்து அப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை நியமிக்கலாம்.
தீர்வு 5# வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்று நியமிக்கும் போது ஆசிரியர் தேவை ஏற்பட்டால் ஆசிரியர் தகுதி பெற்று பள்ளியின் கணக்கெடுப்பு பகுதியில் உள்ளவர்களை குறைந்த தொகுப்பூதியத்தில் உதாரணமாக ₹ 10000 க்கு தற்காலிகமாக நியமிக்கலாம். இரண்டு ஆண்டுகள் அவருடைய முயற்சியில் தொடர்ந்து 30 மாணவர்களை பள்ளியில் சேர்த்தால் அவரது பணியை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கலாம். எடுத்துக்காட்டாக மேலே சொன்ன 5 தீர்வுகள் பல ஆசிரியர்கள் மனதில் நெடுநாட்களாக உள்ள தீர்வுகள். களத்தில் உள்ள ஆசிரியர்களிடம் விவாதித்தால் மேலும் பல தீர்வுகள் கிடைக்கும். கல்வித்துறை ஆய்வுக்கூட்டங்கள் பெரும்பாலும் விவாதங்களாக இல்லாமல் ஒருவழிப்பாதையாக உத்தரவுகளை பிறப்பிக்கும் கூட்டமாக அமைந்துவிடுகிறது. களத்தில் உள்ள ஆசிரியர்களின் கருத்துக்கள் கேட்கப்படுவதே இல்லை. " தனியார் பள்ளிகளுக்கு இணையாக" என்ற தொடரை அடிக்கடி பயன்படுத்தும் கல்வியாளர்கள் தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியம் அளித்தாலும் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை சுலபமாக மறந்து விடுகிறார்கள். இது தான் அடிப்படை என்று தனியார் பள்ளி அதிபர்களுக்கு தெரிந்திருக்கிறது. அரசுப்பள்ளிகளை காப்பாற்றி மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றால் மேற்சொன்னதை போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews