‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவை கைவிடுக! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 18, 2019

‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவை கைவிடுக!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம், 1956 இல் மாற்றம் கொண்டுவந்து, ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் சட்ட முன்வடிவு 2017 இல், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எம்.பி.பி.எஸ்., படிப்பு முடித்தவர்கள் மருத்துவர்களாக பணியாற்ற உரிமம் பெறுவதற்கு தேசிய அளவிலான தேர்வு எழுத வேண்டும் என்று இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததால், சட்ட முன்வடிவு நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, 16 ஆவது மக்களவையுடன் காலாவதி ஆகிவிட்டதால், புதிய மக்களவையில் இச்சட்ட முன்வடிவை தாக்கல் செய்திட மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதில் திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் அலுவலகம் வலியுறுத்தி இருக்கிறது.
இதன்படி எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த மாணவர்கள் எம்.டி., எம்.எஸ்., போன்ற மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர, எம்.பி.பி.எஸ், இறுதித் தேர்வு, தேசிய வெளியேறும் தேர்வு (நெக்ஸ்ட்) என்ற பெயரில் (National Exit Test) நாடு முழுவதும் பொதுத் தேர்வாக நடத்தப்படும். இந்த இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தனியாக நுழைவுத் தேர்வு ‘நீட்’ எழுத வேண்டிய கட்டாயம் இல்லை என்று புதிய சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டப்படி, பல்கலைக் கழகங்களை உருவாக்கவோ, நிர்வகிக்கவோ மத்திய அரக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட இந்த உரிமையைப் பறிக்கும் வகையில்தான் ‘நிதி ஆயோக்’ பரிந்துரையின்படி பா.ஜ.க. அரசு, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க ஜூலை 17 இல் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானித்து உள்ளது. ‘நெக்ஸ்ட்’ தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் பயிற்சி மருத்துவராக முடியாது. 6 மாதம் அல்லது ஒரு வருடம் காத்திருந்து தேர்வுக்குத் தயாராக வேண்டும். நீட் பயிற்சி மையங்கள் போல இதற்கான பயிற்சி மையங்களும் புற்றீசலாகக் கிளம்பி கொள்ளை அடிப்பதற்கு வழி வகுக்கும். ஏழை எளிய, சாதாரண கிராமப்புற மாணவர்கள், ‘நீட்’ தேர்வை எதிர்கொண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்தாலும், இறுதித் தேர்வான ‘நெக்ஸ்ட்’இல் வடிகட்டப்படும் சூழ்ச்சி இதில் ஒளிந்து இருக்கிறது. பா.ஜ.க. அரசு கொண்டுவரத் துடிக்கும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’ என்பது அரசியல் சாசனத்துக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது ஆகும். 25 பேரை உறுப்பினராகக் கொண்ட தேசிய மருத்துவ ஆணையத்தில் 5 பேர் மட்டுமே மருத்துவர்களாக தேர்வு செய்யப்படுவர். மற்ற 20 பேரும் நியமன உறுப்பினர்கள் ஆவர். ஒரு மாநிலத்துக்குத் தலா ஒரு நியமன உறுப்பினர் வீதம் 29 மாநிலங்கள் மற்றும் 6 ஒன்றியப் பிரதேசங்களிலிருந்து மருத்துவ ஆலோசனைக் குழுவுக்கு நியமிக்கப்படுவார்கள். இக்குழுவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
இந்த ஆலோசனைக் குழுவிலிருந்து சுழற்சி முறையில் 6 பேர் தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். மருத்துவக் கல்லூரிகள் அதிகமுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு 10 முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினராகும் வாய்ப்புக் கிடைக்கும். எனவே மாநிலங்கள் தம் தேவைகள் குறித்தும், நடைமுறைச் சிக்கல்கள் பற்றியும் தேசிய மருத்துவ ஆணையத்தில் விவாதிக்கும் வாய்ப்பே கிடைக்காது. மேலும், இந்த ஆணையத்தின் சார்பில் நியமன உறுப்பினர்களைக் கொண்ட நான்கு வாரியங்கள் செயல்படும். இதில் ஒரு வாரியம், மருத்துவக் கல்வியின் தரத்தை மதிப்பீடு செய்யும். தனியார் ‘மதிப்பீட்டு (Rating)’ நிறுவனங்களைக் கொண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளும். அதில் குறைபாடுகள் கண்டறிந்தால், கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும். இதனால் 24 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட தமிழ்நாடு, மற்ற மாநிலங்களைவிட அதிகத் தொகையை அபராதமாகக் கட்ட வேண்டிய நிலை உருவாகலாம்.
மேலும், மாநில அரசுகள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவே தயங்கும் சூழல் ஏற்பட்டுவிடும். தேசிய மருத்துவ ஆணையத்தின் செயல்பாட்டில் தலையிடவும், முடிவுகளை மாற்றவும், நிராகரிக்கவும் மத்திய அரசுக்கு மித மிஞ்சிய அதிகாரம் வழங்கப்படுகிறது. ஆணையத்தைக் கலைக்கவும், மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் தரப்படுகிறது. இந்திய மருத்துவக் கவுன்சிலைச் சீரமைத்து, சீரிய முறையில் இயங்கிட முயற்சிக்காமல், அதனை ஒரேயடியாக ஒழித்துவிட்டு, மத்திய அரசின் ஏதேச்சாதிகாரத்தை நிலைநாட்ட ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவு கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது. மருத்துவப் படிப்புகளை முழுதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும், ‘நெக்ஸ்ட்’ எனப்படும் ‘தேசிய வெளியேறும் தேர்வை’ கட்டாயமாக்கவும் வழிவகை செய்யும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews