தேசிய மருத்துவ ஆணைய மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்: நடப்பு கூட்டத் தொடரில் அறிமுகமாகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 18, 2019

தேசிய மருத்துவ ஆணைய மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்: நடப்பு கூட்டத் தொடரில் அறிமுகமாகிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ கல்வித் துறையில் மிகப் பெரிய சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா, நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. முன்னதாக, தேசிய மருத்துவ ஆணைய மசோதா கடந்த 2017, டிசம்பரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், 16-ஆவது மக்களவை கலைக்கப்பட்டதையடுத்து, இந்த மசோதாவும் காலாவதி ஆனது. இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 1956ஆம் ஆண்டைய மருத்துவ கவுன்சில் சட்டத்துக்கு மாற்றான இந்த மசோதா, மருத்துவக் கல்வியை அனைத்து அம்சங்களிலும் ஒழுங்குபடுத்தவும், மேம்படுத்தவும் வழிவகை செய்கிறது. இதன்படி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையத்துக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக மருத்துவ ஆலோசனை குழுவும் அமைக்கப்படும். இந்த மசோதாவில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, எம்பிபிஎஸ் படிப்பின் இறுதி ஆண்டில் பொதுவான தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்) என்ற பெயரிலான அந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும். எனவே, எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த பின்னர், முதுநிலை படிப்புகளுக்காக தனியாக நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இருக்காது. அத்துடன், மருத்துவராக பணியாற்றுவதற்கு உரிமம் பெறுவதற்கான தேர்வாகவும் இது இருக்கும்.
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், கல்விக் கட்டணங்களை குறைக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்: தொழில் செய்வதை மேலும் எளிமையாக்க வகை செய்யும் நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதுதொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்துக்கு மாற்றாக இந்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தொழில் செய்வதை மேலும் எளிமையாக்குவதுடன், தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயம் மற்றும் சிறப்பு நீதிமன்றங்களின் பளுவை குறைப்பதற்காக கடந்த 2013ஆம் ஆண்டைய நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வகை செய்யும் மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சட்ட விதிகளை முறையாக பின்பற்றும் நிறுவனங்களுக்கு இந்த மசோதா மிகவும் பலனளிக்கும். அத்துடன், சட்ட விதிகளை நிறுவனங்கள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. கம்பெனி நிர்வாகம், விதிமுறைகள் கடைப்பிடிப்பு உள்ளிட்ட விவகாரங்களில், கடந்த 2013-ஆம் ஆண்டைய நிறுவனங்கள் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை போக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், "தேசிய வடிவமைப்பு நிறுவனங்கள் சட்டம்-2014'இல் திருத்தங்கள் செய்வதற்கான மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. அமராவதி, போபால், ஜோர்ஹட், குருஷேத்திரம் ஆகிய இடங்களில் புதிதாக தொடங்கப்பட்ட தேசிய வடிவமைப்பு நிறுவனங்களை, இந்த சட்ட வரம்புக்குள் கொண்டுவருவதற்கும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்ற அந்தஸ்தை அவற்றுக்கு வழங்கவும் இந்த மசோதா வழிவகுக்கும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews