கும்மியடிக்கும் தாத்தா!-`வள்ளி ஒயில் கும்மி’ ஆசிரியர்... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 12, 2019

கும்மியடிக்கும் தாத்தா!-`வள்ளி ஒயில் கும்மி’ ஆசிரியர்...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தன்னன்னா...னானேனே... தன்னன்னானானானா... குளங்குட்டை ஆறு எல்லாம் வத்தித்தானே போச்சு, குழாயடி சண்டை எல்லாம் தெருவில் கூடிப் போச்சு; காடு எல்லாம் வீடு ஆகும் காலம் ஆகிப் போச்சு, கொட்டும் மழை மேகம் எல்லாம் கானல் நீரா ஆச்சு” இப்படி பாடிக்கொண்டு, வள்ளி ஒயில் கும்மி என்னும் நாட்டுப்புறக் கலையை ஆடிக் கொண்டிருக்கும் பத்திரப்பன் தாத்தாவுக்கு வயது 84. பாடி, ஆடுவது மட்டுமல்ல, அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இந்தக் கலையை இலவசமாக கற்றுக் கொடுக்கிறார் இவர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தோழர் வெள்ளியங்கிரியை சந்திக்கச் சென்ற போது, “கொஞ்ச தூரத்துல 84 வயசு முதியவர், குழந்தைகளுக்கு கும்மியாட்டம் சொல்லிக் கொடுக்கிறார். சந்திக்க விருப்பமா?” என்று கேட்டார். உடனே சம்மதித்து, அவருடன் தாசம்பாளையம் பகுதிக்குச் சென்றோம். சாலையோரம் துப்பாக்கியுடன் வேட்டைக்காரர் சிலை ஒன்று இருந்தது. “நாம பாக்கப் போறவறோட அப்பா இது” என்றார் வெள்ளியங்கிரி. வேட்டைக்காரர் மகன், ஆட்டக் கலைஞரா? வியப்பு மேலிட, சாலையோர பள்ளத்தைக் கடந்து, ஒரு சிறிய மேட்டில், தோட்டத்தை ஒட்டியிருந்த வீட்டுக்குச் சென்றோம். திண்ணையுடன் கூடிய ஓட்டு வீடு. காரல் மார்க்ஸ், பாரதியார் படங்களுடன், அண்மையில் இறந்த பத்திரப்பனின் மனைவி படம். ஓரத்தில் தூசி படிந்துகிடந்த கோப்பைகள், விருதுகள். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். “அப்பா மாரண்ண கவுடர், விவசாயம், வைத்தியம்னு பல வேலை செஞ்சாரு. ஆனா, எல்லாத்தையும்விட வேட்டைதான் அவருக்கு உசுரு. குறிபாத்து சுடறதுல ஜில்லாவுலேயே முதல் ஆளா இருந்தாரு. மான், காட்டெருமைனு நிறைய வேட்டியாடினாரு. ஆனா, அதே வேட்டையே அவரோட உசுருக்கு எமனா மாறிடிச்சு.
வேட்டையில செத்த அப்பா...: 1947 ஜனவரி 1-ம் தேதி கும்பலா வேட்டைக்குப் போயிருக்காங்க. நைட்டு காட்டெருமையை தேடிக்கிட்டுப் போனப்ப, தெரியாம இன்னொருத்தர் சுட்ட குண்டு அப்பா மேல பாய்ஞ்சு, அந்த இடத்திலேயே செத்துட்டாரு. அம்மா கஷ்டப்பட்டு, 5 குழந்தைகளையும் வளர்த்தாங்க. மேட்டுப்பாளையம் மகாஜன பள்ளிக்கூடத்துல 10-வது வரைக்கும் படிச்சேன். அப்புறம் விவசாய தோட்ட வேலைக்கு வந்துட்டேன். எங்க சொந்தக்காரர் தொட்டண்ண கவுடர், அரிச்சந்திர கும்மி ஆடுவாரு. அப்ப அவருக்கு 85 வயசு. நானும், இன்னும் கொஞ்சம் பேரும் அவர்கிட்ட கும்மியாட்டம் கத்துக்கிட்டோம். அதுக்கப்புறம் மோத்தேபாளையம் திருமப்ப கவுடர் கிட்ட, `வள்ளி ஒயில் கும்மி’யாட்டம் கத்துக்கிட்டோம். பாட்டு பாடி, அதுக்கு ஏத்த மாதிரி ஆடுறதுதான் இந்த கும்மியாட்டம். எந்த இசைக் கருவியும் தேவைப்படாத, பாரம்பரிய நடனக் கலைதான் இந்த வள்ளி ஒயில் கும்மி. வள்ளித் திருமணம், பாரதியார் வாழ்க்கை வரலாறு, சுற்றுச்சூழல் பாதுகாப்புனு நாட்டுப்புறப் பாடல்களை பாடிக்கிட்டே, கும்மி நடனம் ஆடணும்.
கோயம்புத்தூர் மாவட்டம் முழுக்க போய், திருவிழாக்கள்ல கும்மியாட்டம் ஆடுவோம். ஊருக்கு ஒருத்தர், ரெண்டு பேர்தான் இந்த ஆட்டம் ஆடுவாங்க. அவங்களை ஒருங்கிணைச்சு, திருவிழாவுக்கு கூட்டிட்டுப்போவேன். இடையில, கொஞ்சம் முரண்பாடு வந்து, பலர் பிரிஞ்சிப் போயிட்டாங்க. அதனால் 1990-ல் தனிக் குழுவை ஆரம்பிச்சேன். அதுல 10, 15 பேர் இருந்தாங்க. அப்புறம் மத்தவங்களுக்கும் இந்தக் கலையைக் கத்துக்கொடுத்தேன். ஆரம்பத்துல ஆண்கள் மட்டும்தான் ஆடினாங்க. அதுக்கப்புறம் பெண்களும் ஆட வந்தாங்க. ஒரு கட்டத்துக்குப் பிறகு குழந்தைகளுக்கு இதை சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். கடந்த 20 வருஷத்துல மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதை சொல்லிக்கொடுத்திருக்கேன். இப்பவும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வள்ளி ஒயில் கும்மி ஆட்டத்தை இலவசமாக கத்துக்கொடுக்கறேன். தினமும் ஒரு மணியில இருந்து ஒன்றரை மணி வரை வகுப்பு நடத்துவேன். பள்ளிக்கூடம் லீவுங்கறதால குழந்தைகள் கத்துக்க வர்றாங்க.
பெரும்பாலும் அடித்தட்டு பெண் குழந்தைகள்தான் இந்த ஆட்டத்தைக் கத்துக்கறாங்க. ஒரு கட்டத்துக்கு அப்புறம் பயிற்சிக்கு குழந்தைங்க வர்றதில்லை. மனித இனத்தை பண்பாடு ரீதியாக வளர்த்ததுல இதுமாதிரியான நாட்டுப்புறக் கலைகளுக்கு முக்கியப் பங்கு இருக்குது. முதல்ல எல்லாம் இலவசமாகத்தான் நிகழ்ச்சி நடத்திக்கிட்டிருந்தோம். அதுக்கப்புறம் போக்குவரத்து, சாப்பாடுனு செலவாச்சு. அதுமட்டுமில்ல, விவசாயக் கூலிகள்தான் இந்த ஆட்டத்துக்கு வர்றாங்க. வேலையை விட்டுட்டு வர்றவங்களுக்கு ரூ.200, ரூ.300 கொடுக்க வேண்டியிருந்தது. அதனால், கொஞ்சம் காசு வாங்கிக்கிட்டு, நடன நிகழ்ச்சி நடத்தினோம். ஆனா, சினிமா, டிவி கலைஞர்களுக்கு ஆயிரக்கணக்குல அள்ளிக் கொடுக்கறவங்க, எங்களுக்கு ரூ.2000, ரூ.3000 கொடுக்கறதுக்கே அலுத்துக்குவாங்க. அதுமட்டுமில்ல, வாய்ப்பும் கொடுக்க மாட்டாங்க. நாட்டுப்புறக் கலைகளை காப்பாத்துங்க...
திருவிழாக்கள்ல போய் வாய்ப்பு கேட்டா, இப்பெல்லாம் யாருங்க நாட்டுப்புறக் கலைகளைப் பார்க்கிறாங்கனு சொல்லி, திருப்பி அனுப்பிடுவாங்க. ஒருகாலத்துல கிராமங்கள்ல நூத்துக்கணக்கான நாட்டுப்புறக் கலைகள் இருந்தது. இப்பவெல்லாம் 95 சதவீதம் அழிஞ்சிபோயிடுச்சி. தமிழ்நாட்டுல ஆயிரக்கணக்கான கோயில்கள்ல, ஏராளமான திருவிழாக்கள் நடக்குது. அங்கெல்லாம் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கணும். நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயிக்கவும். சுற்றுலாத் துறை சார்பாகவும் வாய்ப்பு கொடுக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்துலேயும் இருக்கற நாட்டுப்புறக் கலைஞர்கள் பத்தின கணக்கெடுப்பு நடத்தி, அவங்களோட வாழ்வாதாரத்துக்கு அரசு உதவணும். 2000-ம் ஆண்டுல கலை, பண்பாட்டு மையம் சார்புல கலைமுதுமணி விருது வழங்கினாங்க. அதேபோல, தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்புல 3 ஆண்டுகள் விருது கொடுத்தாங்க. பாரதியார் பல்கலைக்கழகம், வேளாண்மைப் பல்கலைக்கழகம் மட்டுமில்லாம, நிறைய அமைப்புகள் விருது கொடுத்தாங்க. எனக்கு ஒரு பையன், பொண்ணு. மனைவி மாதம்மாள், மார்ச் மாசம் இறந்துட்டாங்க. நான் கலைஞனாக இருந்ததுக்கே, அவங்கதான் காரணம். இப்ப நான் நடமாடிக்கிட்டிருக்கேன். ஒருவேளை படுக்கையில விழுந்துட்டா, என்னவாகும்னு தெரியலை. ஆனா, என் உடம்பு ஒத்துழைக்கும் வரை ஆடிக்கிட்டும், சொல்லிக் கொடுத்துக்கிட்டும்தான் இருப்பேன்.
இந்த தலைமுறை உண்மையைத் தேடிப் போறதில்லை. காட்சிக்கு அடிமையாகிட்டாங்க. அதுதான் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யற அளவுக்கு மாறிட்டாங்க. ஆனா, நம்ம மண்ணோட பாரம்பரியமும், கலாச்சாரமும் நாட்டுப்புறக் கலைஞர்கள்கிட்டதான் இருக்கு. அவங்களை ஆதரிக்க வேணுமுன்னு ஒவ்வொருத்தரும் நினைக்கணும். அப்பதான், கொஞ்சமாவது மிச்சமிருக்கற நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்க முடியும்” என்று நெகிழ்ச்சியுடன் கூறி விடைகொடுத்தார் பத்திரப்பன். அவரது பாடல் இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. “ஆறு செல்லும் பாதை எல்லாம் கழிவு நீரா ஆச்சு, பேரு சொல்லும் பூமி எல்லாம் தரிசாகப் போச்சு; குடிக்கறதுக்கு நீரு கேட்டால் மோரு தந்த காலம், பாட்டில் நீரு பத்து ரூபா விக்குது இந்த காலம்; போருக்குள்ள போரு போட்டால் பூமி என்ன ஆகும், பூமிக்குள்ள நீர் வறண்டு நிலநடக்கும் தோன்றும்; கூறுபோட்டு விக்குதம்மா விவசாய பூமி, வருங்காலம் போகுதம்மா பட்டினியை நோக்கி; விவசாய மாப்பிள்ளையே வேண்டாம் என்ற பேச்சு, பெண்களுக்குள் பரவிவரும் வேதாந்தம் ஆச்சு; தன்னன்னா,தானேனா...
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews