உலகில் உள்ள தானங்களில் எல்லாம் சிறந்தது அன்னதானம் என்பார்கள். ஆனால், அதைக் காட்டிலும் சிறந்தது கல்வியறிவு வழங்குதல், கல்வி கற்றால் சம்பாதித்து, சொந்த காசில் சாப்பிடலாம். எனவேதான், ஏழைக்கு எழுத்தறிவித்தல் கோடி புண்ணியத்துக்கு சமம் என்றார் பாரதி.
இதை அடிப்படையாகக் கொண்டு, சேலத்தில் பார்வையற்ற குழந்தைகளுக்கு 70 ஆண்டுகளாக கல்வி வழங்கி வருகிறது பார்வையற்றோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி.
சேலத்தில் பரபரப்பு மிகுந்த செவ்வாய்ப்பேட்டையில், மரங்கள் சூழ்ந்த வளாகத்தில் செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளி. 1949-ல் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, 1984-ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் பார்வையற்ற மாணவர்களுக்காக தருமபுரி, கோவை, கடலூர் உள்பட 4 இடங்களில் தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சேலம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய 3 இடங்களில் பார்வையற்ற மாணவர்களுக்கான அரசு நடுநிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. திருச்சி, தஞ்சாவூர், பூந்தமல்லியில் பார்வையற்றோர் அரசு மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
கல்விச் சேவையில் 70-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இப்பள்ளியில் தற்போது 54 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு தொடங்கி, எட்டாம் வகுப்பு வரை கொண்ட இந்தப் பள்ளியில் ஆண், பெண் இருபாலருக்கும் கல்வி, தங்கும் வசதி என அனைத்தும் கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
மேலும், மாணவர்களின் கலைத் திறனை வெளிப்படுத்த இசை, விளையாட்டு, கணினிப் பயிற்சி போன்றவையும் வழங்கப்படுகிறது. சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை என சுற்றுவட்டார மாவட்டங்களில் பார்வையற்ற மாணவர்களுக்கான நடுநிலைப் பள்ளி இல்லாத நிலையில், சேலம் பள்ளியில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் சேர்ந்து, கல்வி பெறுகின்றனர். தமிழகத்தின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இங்கு கல்வி பயில முடியும்.
பள்ளியின் செயல்பாடு குறித்து முதல்வர் மதீனா கூறும்போது, “சேலம் நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வரும் பார்வையற்றோர் நடுநிலைப் பள்ளி 70-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது எங்களுக்கு பெருமையளிக்கிறது. இங்கு மாணவ, மாணவிகளுக்கு தனிக்கவனம் செலுத்தி பாடங்களைப் போதித்து வருகிறோம். அவர்களது உடல் வலிமையை மேம்படுத்த, கிரிக்கெட், த்ரோபால் உள்ளிட்ட விளையாட்டுகள், சதுரங்கம், இசைப் பயிற்சி போன்றவற்றையும் வழங்குகிறோம்.
இங்கு பயின்ற மாணவ, மாணவிகளில் பலர் உயர் கல்வி வரை படித்து, மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணியாற்றி வருகின்றனர். எங்கள் பள்ளியில் பயின்ற, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த பெருமாள், திரையுலகின் மூலம் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். ஆட்டோகிராப் திரைப்படத்தில், ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...என்று பாடி அனைவரையும் கவர்ந்தவர்.
இப்படி, எங்கள் பள்ளி மாணவர்கள் பலர் தனித் திறமையுடன் இருந்து வருகின்றனர். பெற்றோர் தங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்த்து, அவர்கள் தன்னம்பிக்கையுடனும், கல்வி அறிவுடனும் வளர ஊக்கப்படுத்த வேண்டும்” என்றார்.
பள்ளி முதல்வர் மதீனாவும், இதே பள்ளியின் மாணவி என்பது பள்ளிக்கு கிடைத்துள்ள கூடுதல் சிறப்பு.
மாணவர்களின் பெற்றோர் கூறும்போது, “70-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செவ்வாய்ப்பேட்டை பார்வையற்றோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது சேலம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. எட்டாம் வகுப்பு வரை இங்கு பயிலும் மாணவர்கள், உயர் கல்விக்காக திருச்சி, சென்னை என தொலைதூரம் செல்ல வேண்டியுள்ளது.
இங்கு அறிமுகமான மாணவர்கள், ஆசிரியர்கள், பழகிய கல்விச் சூழல் என நன்கு படித்து வரும் மாணவர்கள், உயர் கல்விக்காக வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும் என்பதால், கல்வியை பாதியில் கைவிடும் நிலை ஏற்படுகிறது. எனவே, சேலத்தில் செயல்படும் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதால், சேலம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பயன் கிடைக்கும். பெற்றோரின் சிரமும் தவிர்க்கப்படும்.
தவிர, இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும், பொழுதுபோக்கு விளையாட்டுச் சாதனங்கள் போன்றவை பழுதடைந்துள்ளன.
பார்வையற்ற மாணவர்களுக்காக ஒரு சில பள்ளிகளே இருக்கும் நிலையில், இவற்றை மேம்படுத்தி, நவீனப் பள்ளிகளாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக கல்வித் துறையும் முன்வர வேண்டுமென்பதே எங்களது வேண்டுகோள்” என்றனர்.
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்..:
சாதனை புரிய உடல் தகுதியோ, வயதோ, வசதியோ தடையில்லை என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், பார்வையற்ற மாணவர்களும் வாழ்வில் சாதனைபுரியலாம் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, மாற்றுத் திறனாளிகள் வாழ்வை மேம்படுத்துகிறது சேலம் செவ்வாய்ப்பேட்டை பார்வையற்றோர் அரசு நடுநிலைப் பள்ளி. “இந்தப் பள்ளியில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. மாணவர்களை வரவேற்க பள்ளி நிர்வாகம் அன்புடன் காத்துக் கொண்டிருக்கிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை அறிய 0427-2213188 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்கிறார் பள்ளி தலைமை ஆசிரியர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U