மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 14, 2019

மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459

மாதா,பிதா,குரு,தெய்வம் என்ற வரிசையில் ஆசிரியரும் சிறப்பிடம் பெறுகிறார்கள்.பெரும்பாலும் மாணவர்கள் தங்களது ரோல்மாடலாக பள்ளி ஆசிரியரையே எடுத்துக் கொள்வார்கள்.இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களில் ஒரு சிலர்  சமூக பணியிலும் ஈடுபடுகின்றனர்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள க.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியை ஜெயமேரி பேச்சாளராக,எழுத்தாளராக திகழ்கிறார்.தனது சொந்த செலவில் பள்ளிக்கு தேவையான மைக்,ஸ்பீக்கர்  உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி வருகிறார்.இவர் நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகளுக்கு கிடைக்கும் வெகுமதியை தனி உண்டியலில் இட்டு அதை மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்து வருகிறார்.










இது குறித்து ஆசிரியை ஜெயமேரி கூறியதாவது: நீ எதை எண்ணுகிறாயோ அதாகவே ஆகிறாய்... என்ற வாக்கு  பலித்தது என் வாழ்க்கையில். முதன் முதலில்  19.10.2004  அன்று ஆசிரியப் பணியில்  சிவகங்கை மாவட்டத்தில் சேர்ந்தேன்.பின்னர் சிங்கம்புணரி ஒன்றியம் உலகினிப் பட்டியில்  சில காலம் பணிபுரிந்தேன். அதன் பின் அருப்புக்கோட்டை ஒன்றியத்திலும் பணிபுரிந்தேன் .பின்னர் சூலக்கரை பள்ளிக்கு பணி மாறுதல் பெற்று  அங்கிருந்து 2012 ல் பணி மாறுதலில் ஊ.ஒ.தொ.பள்ளி, க.மடத்துப்பட்டி
பள்ளியின் இரண்டாம் வகுப்பு ஆசிரியராக என் பணியை தொடர்ந்து வருகிறேன்.தொடர்ந்து என் பணியில் ஒவ்வொரு நாளும், புதிய புதிய அனுபவங்கள்.குழந்தைகள் பட்டாம் பூச்சிகளாய் ,என்னை பரவசப் படுத்தினார்கள்.

வாழ்க்கையில் ஏதோ ஒரு திருப்பு முனை ஒவ்வொருவருக்கும் நிகழும் அல்லவா? எனக்கும் கூட அந்த வாய்ப்பு வந்தது. தின மலரில் என் பார்வை பகுதிக்கு ஒரு கட்டுரை எழுதினேன். ஒரு மாதம் கழித்து என் கட்டுரை வந்து இருந்தது. வாழ்வின் ஆகப் பெரிய சந்தோசம்.
கரும்பு தின்னக் கூலி போல சன்மானமாக பரிசுத் தொகையும் கூடவே.முதன் முதலான நிகழ்வை எப்போதும் மறக்காத வண்ணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்.கல்லூரிக்கு சேர்வதற்கு கட்டணம் தேவைப்பட்ட மாணவிக்கு அந்த தொகையை கொடுத்தேன்.அவள் கண்களில் தெரிந்த ஒளி என்னை நிச்சயமாக ஏதோ செய்தது. தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணமும்,அதன் மூலமாக கிடைக்கும் சன்மானத்தை இந்த சமூகத்திற்கு ஏதாவது பண்ண வேண்டும் என்ற இலட்சியம் ஏற்பட்டது.

 தினமலர் உண்டியல் என்று   போட்டு வைத்தேன்.சன்மானங்களை அதில் போட்டு வைத்தேன்.
 ஒவ்வொரு மாதமும்  ஏதேனும் ஒரு அறம் செய்ய வேண்டும் என்ற  இலக்கினை நிர்ணயித்துக் கொண்டேன்.என் வகுப்பறைக்கு வேண்டிய தேவைகளையும் என்னால் நிறைவு செய்ய முடிந்தது.பள்ளியின்  தண்டவாள பெல்லை மாற்றணும் என்ற சிந்தனை மின்சார மணியாக உருவெடுத்தது. அடுத்த மாதம் என் பள்ளிக்கு அருகில் உள்ள நூலகத்திற்கு புரவலராக என்னை இணைத்துக் கொண்டேன்.எழுதாத கரும் பலகைகளுக்கு வண்ணமடிக்க, வீட்டுப் பாட நோட்டுகள் வாங்கிக் கொடுக்க, எழுது பொருட்கள் என பள்ளியின் தேவைகள்,மாணவர்களின்  தேவைகளை  என் எழுத்துகளால் நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது.


உண்டு உறைவிடப் பள்ளி பயிற்சி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கச் சென்ற போது அந்த ஆசிரியர்கள்தாய்,தந்தை இல்லாத குழந்தைகள் பற்றி சொன்ன தகவல்கள்  இதயத்தைப் பிசைந்த து.கூடுதலாக இன்னும் சில பத்திரிகைகள், புத்தகங்கள் எழுத ஆரம்பித்தேன்.அடுத்த மாதம் அருகே உள்ள உண்டு உறைவிடப் பள்ளி க்கு சென்ற போது அந்த மழலைகளின் சந்தோசத்தைப் பார்க்கும் போது மனம் நெகிழ்ந்தேன்.

தொடர்ந்து 5வருடங்களாக ஒன்றிய அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சி யில் முதலிடம் என் பள்ளி குழந்தைகள், சர்வ சிக்சா அபியான்  நடத்தும் ஓவிய ,பேச்சு போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம், சுட்டி விகடன், செல்லமே இதழ்களில் என் பிள்ளைகளின் படைப்புகள் என கலக்கல்கள்.எப்போது நம் பணியை அங்கீகாரத்தை எதிர் நோக்காமல் ,மன நிறைவுடன் செய்கிறோமோ அப்போது அது அழகாகிறது என்பதை உணரத் தொடங்கினேன்.
ஆசிரியப்பணி பிழைப்பு அல்ல.இறைவனின் அழைப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இயலாக் குழந்தைகளும், மெல்ல மலரும் மொட்டுகளுமே என்னைக் கவர்ந்தார்கள்.மாதம் ஒரு பழம் திட்டம் படி, பழங்களோடு பாசத்தையும் பகிர்ந்து கொள்வோம் வகுப்பறைகளில்.
கணக்கு தெரியலேன்னா பயப்படாதடா ..டீச்சர்கிட்ட நிறைய தடவை கேக்கலாம்.சொல்லி தருவாங்க என்ற என் செல்லங்களின் உரையாடல்கள்,அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை உணர்த்துவதாக நினைத்துக் கொள்வேன்.ஊக்குவிக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர், என் சக ஆசிரியர்கள் இவர்கள் அனைவருமே எனக்கான கூடுதல் பலமென நம்புகிறேன். வீட்டுச் சூழலும் எனக்கான மற்றுமொரு பலமாக.இந்த அனைவரின்  ஆதரவோடு

தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருதும், பத்தாயிரம் ரூபாயும் கிடைத்தது.பள்ளியின் வழிபாட்டு கூட்டத்தில் திருக்குறள், பொன் மொழி, செய்திகள் வாசிக்க, விழாக்கள் கொண்டாட மைக் வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தது. கடையில் விசாரித்த போது
மைக் ,ஆம்ப்ளிபயர்,ஸ்பீக்கர்ஸ் என மதிப்பீட்டுத் தொகை பதினெட்டாயிரம்  மதிப்பீடு ஆனது.
கனவு ஆசிரியர் தொகைபத்தாயிரமும், தினமலர் உண்டியல் தொகையும்  கை கொடுத்தது.
கனவு ஆசிரியர் விருதுகளை வழங்கி விட்டு கல்வி அமைச்சர் மேடையை விட்டு இறங்க, சார் ஒரு நிமிடம் என்ற என்னை, சொல்லுங்கம்மா என்றதும்,

காலை உணவுத் திட்டம் அரசுப் பள்ளி களில் கொண்டு வர ஆவன செய்ய வேண்டும்.என்  பிள்ளைகள் காலையில் சாப்பிட்டு வருவதில்லை என்று கூறவும், நிச்சயமாக மா...என்று கூறிச் சென்ற போது, பசித்த என் பிள்ளைகள் வயிறு நிரம்பும் இனி காலையிலும் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது.
அது வரை வகுப்பறையில் காலையில் பிஸ்கட்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.எதுவும் எளிதல்ல.ஆனால் எல்லாமே சாத்தியம் தான்.
நவம்பர் மாத கஜா புயலுக்கு நிவாரணப் பணிக்கு ஈத்துவக்கும் இன்பம்  கட்டுரை கரம் கொடுத்தது.

பரதம், பாட்டு பயிற்சி வகுப்புகள், ஓவிய வகுப்புகள் , கணினி வகுப்பறை , புதிய கற்றல் கற்பித்தல் முறைகளின் மாதிரிப் பள்ளியாக  திகழ்கிறது எங்கள் பள்ளி.
இந்தக் காட்டில் எல்லா மூங்கில்களும் புல்லாங் குழல்களே...
அரசுப் பள்ளிகளை அசத்தும் பள்ளிகளாக மாற்ற இயலும்.நிச்சயமாக அனைவரும் மனது வைத்தால் என்றார் புன்முறுவலோடு.



இவர் பெற்ற பெற்ற விருதுகள்:

2017ல் திருநெல்வேலி லயன்ஸ் கிளப் விருது,
சிவகாசி லயன்ஸ் கிளப் விருது,
கல்வியாளர் சங்கமம் வழங்கிய அசத்தல் ஆசிரியர் விருது.
2018 ஜீலை கனவு ஆசிரியர் விருது.
 தினமலர் லட்சிய ஆசிரியர் விருது.
எட்டயபுர பாரதி பிறந்த நாள் விழாவில் இளந்தமிழர் பேரவை சார்பாக இளம் பேச்சாளர் விருது.


 இவர் புதிய பாடத் திட்ட பயிற்சி மாநில கருத்தாளராகவும்
விருது நகர் மாவட்ட கருத்தாளராகவும்
ஒன்றியக் கருத்தாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
மேலும் தின மலர் நடத்திய ஜெயித்துக்  காட்டுவோம் நிகழ்வில் தன்னம்பிக்கை பேச்சாளராகவும்,
குழந்தைகளுக்கான பத்திரிகை ஒன்றில் எழுத்தாளராகவும்
மதுரைப் பண்பலை வானொலியில் தன்னம்பிக்கை உரை,
பட்டி மன்ற பேச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார்..இத்தகைய பன்முகத் திறன் கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியை ஜெயமேரியை கல்வி அதிகாரிகள்,சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews