மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை பாதிக்கும் செல்போன் - மாணவர்களுக்கான விழிப்புணர்வு பகுதி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 06, 2018

மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை பாதிக்கும் செல்போன் - மாணவர்களுக்கான விழிப்புணர்வு பகுதி!



தகவல் தொழில் நுட்ப உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இருந்த இடத்தில் இருந்தே உலகத்தின் மூலை முடுக்குகளில் நடக்கும் சம்பவங்களை நம்மால் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இன்று நாம் போகவேண்டிய இடத்துக்கு கூட யாரையும் கேட்க வேண்டியதில்லை. அந்த அளவு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு தகவல் தொழில் நுட்பம் என்பது தேவை தான். ஆனால் இந்த தகவல் தொழில் நுட்பத்தால் இன்று இளைய சமுதாயம் சீர்கெட்டு வருகிறது. செல்போனில் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் அதிநவீன வசதிகளும் உள்ளன.
ஒரு வீட்டில் 5 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் 5 பேருக்கும் செல்போன்கள் உள்ளன. இது தவிர சிலர் 2 செல்போன்கள் கூட பயன்படுத்துகிறார்கள்.
ஆக எந்த நேரமும் செல்போனில் தான் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள். இரவு தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் செல்போனை நோண்டாமல் இருக்க முடியாத நிலைக்கு அதற்கு அடிமையாகி விட்டார்கள்.
முன்பெல்லாம் பயணத்தின் போது நாளிதழ்கள், நல்ல கதை புத்தகங்களை தேர்ந்து எடுத்து படிப்பது உண்டு. இப்போது அப்படி படிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஒரு நாளிதழை அருகில் பயணிப்பவர்கள் என அனைவரும் படித்து முடித்து விடுவார்கள். அதில் நல்ல விஷயங்களையும், அரிய பல தகவல்களையும் தெரிந்து கொண்டு ஞானம் பெற்றார்கள். இன்று அந்த காட்சிகளை எல்லாம் நமது பயணத்தில் காண முடியவில்லை. Kaninikkalvi.blogspot.com
மாறாக, அனைவரும் பேசுவதை கூட குறைத்துக் கொண்டு செல்போன்களில் மூழ்கி இருக்கும் காட்சியைத்தான் பார்க்கிறோம். வயது வித்தியாசமின்றி இப்போது செல்போன்களை பயன்படுத்துகிறோம். அதில் நமது பொன்னான நேரத்தையும் வீணடிக்கிறோம்.செல்போன்களில் இப்போது வாட்ஸ்-அப் பார்த்து அதில் நேரத்தை செலவிடும் முதியோர்களும் இதில் அடங்குவர்.
செல்போனை 20 நிமிடத்துக்கு மேல் பயன்படுத்தினால் அதில் உள்ள கதிர்வீச்சுக்கள் உடலுக்கும், மூளைக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதன் பாதிப்புகள் குறித்து பக்கம், பக்கமாக எழுதினாலும் அதை எல்லாம் படித்து தங்களை மாற்றிக்கொள்ளாமல் வீணடித்து வருகிறார்கள். என்று செல்போன் பயன்பாடு அதிகரித்ததோ அன்று முதல் வாசிப்பு பழக்கத்தை பெரும்பாலானோர் கைவிட்டு விட்டனர்.
வாசிப்பு பழக்கம் தான் மனிதனை அறிவுள்ளவனாக மாற்றக்கூடிய ஆயுதம். அத்தகைய அறிவாற்றலை புறந்தள்ளி விட்டு இப்போது செல்போன் உலகத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் இன்றைய மாணவ சமுதாயம் புத்தகத்தை புரட்டுவதில் கூட சங்கடப்படுகிறார்கள். வாசிப்பு பழக்கத்தை மாற்றி விட்ட செல்போன் ஒவ்வொரு மனிதர்களிடமும் அட்டை போன்று ஒட்டிக்கொண்டு இருக்கிறது. வாசிப்பை நேசிக்க வேண்டும். அப்போது தான் அறிவு படைத்தவர்களாவோம். இந்த சமுதாயமும் நல்ல சமுதாயமாக மாறும். ஆனால் அதை விடுத்து வாசிப்புக்கு விடை கொடுத்தோம் என்றால் இனி வருங்கால சந்ததிகளை கூட நம்மால் காப்பாற்ற முடியாது.
செல்போன் பயன்பாட்டால் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஒவ்வொரு மனிதர்களும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதில் முதன் முதலில் இருப்பது கண் தான். இன்று கண் மருத்துவமனைகளில் அதிக அளவு நோயாளிகள் கூட்டம் இருக்கிறது. பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி கண் பாதிப்பினால் வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அதிர்ச்சியாகிவிடுவீர்கள். டாக்டர் கூறிய பின்னர் தான் ஞானம் வந்ததை போன்று வருந்துகிறார்கள்.
உள்ளே நுழைந்ததும் கண் டாக்டர் கேட்கும் முதல் கேள்வி என்ன வென்றால் நீங்கள் செல்போனில் வாட்ஸ்-அப் பார்க்கிறீர்களா? என்பது தான். இந்த கேள்விக்கும் அங்கு வரும் பெரும்பாலான நோயாளிகள் ஆமாம் என்கிறார்கள். இப்படி ஒட்டு மொத்த சமுதாயமும் அதன் பாதிப்பு தெரியாமல் உள்ளதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. கண்ணையும், மூளையும், உடலையும் பாதுகாக்க நல்ல சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக்கொண்டாலும் செல்போன் பயன்பாட்டை நிறுத்தாமல் தொடர்ந்தீர்கள் என்றால் அந்த சத்துள்ள உணவின் பயன்பாடு கிடைக்காமலே போய்விடும்.
புத்தகத்தை படி அறிவை வளர்த்துக்கொள், நீ படித்ததை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள். அப்போது தான் நல்ல விஷயங்கள் உன் மூலமாக இந்த சமுதாயத்தில் ஊடுருவி பாயும் என்று சொன்னது எல்லாம் அந்தக்காலம். இப்போது வாட்ஸ்அப்பில் வரும் உப்பு சப்பில்லாத கமெண்ட்டுகளை தான் பலர் ஷேர் செய்து கொண்டு இருக்கிறார்கள். பார்வையற்றவன் குருடன் அல்ல, கல்வி கற்காதவனும் பார்வையற்றவனுக்கு சமம் என்று போதனை செய்ததை இன்றைய சமுதாயம் மறந்து விட்டது. படித்தால் தான் அறிவு வளரும். எனவே வாசிப்பை பாதிக்கும் செல்போன் பயன்பாட்டை குறைப்போம். வாசிக்க தொடங்குவோம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here

Total Pageviews