"அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ஆசிரியர்கள் களமிறங்க வேண்டும்" - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 01, 2018

"அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ஆசிரியர்கள் களமிறங்க வேண்டும்"



 

 தருமபுரி மாவட்டத்தில் பின்தங்கியுள்ள, மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஆசிரியர்களும், செயற்பாட்டாளர்களும் களமிறங்க வேண்டும் என பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் செயலர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டார். தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த இயக்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளைக் கண்டறிய வேண்டும். அந்தப் பகுதிகளில் உள்ள சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவர்களையும் ஒருங்கிணைத்து வலுவான மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டும். அரசுப் பள்ளிகள் தரமானவை என்ற நம்பிக்கை மக்களுக்கு உருவாக்க வேண்டும். அந்தந்தப் பகுதி மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கான பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும். பணிகளின் போது நமக்கு முதலில் வரும் சிக்கல், பள்ளிகளின் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்பதாக இருக்கும். எனவே, பள்ளி மேலாண்மைக் குழு, கிராமசபைக் கூட்டங்களை இதற்காக நாம் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை, கழிப்பறை பராமரிப்பு இல்லை போன்ற பிரச்னைகள்தான் உள்ளன. இவற்றை சரி செய்வதற்கு கிராமசபைக் கூட்டங்களில் வலியுறுத்துவதும், பள்ளி மேலாண்மைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றச் செய்து அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதும் முக்கியமான பணிகள். நாட்டின் விடுதலைக்குப் பிறகு கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்வதில் ஏராளமான சமூக அமைப்புகள் கல்வி நிறுவனங்களைத் தொடங்கின. ஆனால், இப்போது பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சாதாரண மக்களின் கல்வியிலும், சுகாதாரத்திலும் பணம் கொள்ளையடிக்கப்படுவது நல்லதல்ல. இதைத் தடுக்க வேண்டும். இதற்காக நாம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். வரும் நவம்பர் 18ஆம் தேதி பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் ஓராண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெறவுள்ளது. கல்வியாளர்கள் பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். அதில் தருமபுரி மாவட்ட அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றார் கிருஷ்ணமூர்த்தி. கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. அன்பழகன் தலைமை வகித்தார். உதவி ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன், வட்டார ஒருங்கிணைப்பாளர் கவிதா, அரசுப் பள்ளி ஆசிரியர் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி, இயற்கைப் பாதுகாப்புச் சங்க நிர்வாகி தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Total Pageviews