பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின், காலாண்டு தேர்வு மதிப்பெண்களை ஆய்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், பிளஸ் 1 தேர்வுக்கான மதிப்பெண், உயர்கல்விக்கான கணக்கில் எடுக்கப்படாது என, அரசு அறிவித்துள்ளது. அதனால், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டியுள்ளது.எனவே, துவக்கம் முதலே மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, தனியார் பள்ளிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதை பின்பற்றி, 'அரசு பள்ளி மாணவர்களும், அதிக மதிப்பெண் பெற வேண்டும்; தேர்வு எழுதும் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும்' என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.இதனால், நடந்து முடிந்த காலாண்டு தேர்வு மதிப்பெண்ணை கணக்கிட்டு, அதன்படி மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெறுவோர், தனியாக பிரிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு, பள்ளியின் வழக்கமான நேரம் போக, கூடுதலாக, காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதோடு, தினமும், காலையில் சிறு தேர்வுகள் நடத்தி, தேர்வு பயத்தை போக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது