பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நிம்மதி : உயர்கல்விக்கு 2ம் ஆண்டு மதிப்பெண் போதும்... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 16, 2018

Comments:0

பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நிம்மதி : உயர்கல்விக்கு 2ம் ஆண்டு மதிப்பெண் போதும்...


பிளஸ் 2 மாணவர்கள் நிம்மதி அடையும் விதமான, புதிய அறிவிப்பை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார். ''உயர் கல்வி படிப்புகளில் சேர, பிளஸ் 2 மதிப்பெண்களே போதும்; பிளஸ் 1 மார்க், கணக்கில் எடுக்கப்படாது,'' என, அவர் அறிவித்துள்ளார். பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், முதல் முறையாக, பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலான மாணவர்கள், குறைந்த மதிப்பெண்களே பெற்றனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 என தொடர்ச்சியாக, மூன்று ஆண்டுகளுக்கு, அரசு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டி இருப்பதால், மாணவர்கள், கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 

600 மதிப்பெண்கள் : எனவே, பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்துவதை, மறுபரிசீலனை செய்யக்கோரி, அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு மனுக்கள் வந்தன. அதேபோல, 'பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கினால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.'அவர்களின் உயர் கல்வி துவங்கி, வேலைவாய்ப்பு வரை, அதன் தாக்கம் நீடிக்கும்' என்றும், முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கைகள் வந்தன.இதையடுத்து, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், சில திருத்தங்கள் செய்து, புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது, பிளஸ் 2 மாணவர்களுக்கு, நிம்மதி அளித்து உள்ளது. இது தொடர்பாக, சென்னை, தலைமை செயலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: மேல்நிலை வகுப்பு மாணவர்களின், எதிர்காலம் கருதி, பிளஸ் 2 மாணவர்கள், 1,200க்கு பதிலாக, 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுவர்; அதில், எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில், உயர் கல்விக்கு செல்ல, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்பிற்கு, பொதுத்தேர்வு நடக்கும். அதில், மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் தேர்வு எழுத, வாய்ப்பு அளிக்கப்படும்; தேர்வில் மாற்றம் இல்லை. ஆனால், பிளஸ் 1 மதிப்பெண்களுடன், பிளஸ் 2 மதிப்பெண்கள் இணைத்து வழங்கப்படாது. தனித்தனியே சான்றிதழ் வழங்கப்படும். உயர் கல்விக்கு செல்ல, பிளஸ் 2 மதிப்பெண்களே போதுமானது. 

413 மையங்கள் : பள்ளிக் கல்வித்துறை சார்பில், இந்த ஆண்டு, 'நீட்' உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, 413 மையங்களை துவக்கி உள்ளோம். அந்த மையங்களில், 'ஸ்பீடு' நிறுவனத்தின் உதவியுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4,130 ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். 'நீட்' நுழைவுத்தேர்வு பயிற்சிக்கு, தலைமை ஆசிரியர்களைக் கொண்டு, மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில், தேர்வு செய்து, பயிற்சி அளிக்கிறோம்.இந்த ஆண்டு, 'நீட்' தேர்வில் குளறுபடிகள் ஏற்படுவதை தவிர்க்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளிமாநிலங்களுக்கு சென்று, தேர்வு எழுதும் நிலை ஏற்படாது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இன்று முதல், மாணவர்கள், 'பாலித்தீன்' பைகளை பயன்படுத்தக் கூடாது. இது தொடர்பாக, அனைத்து பள்ளிகளுக்கும், ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 10 மாணவர்களுக்கு குறைவாக படிக்கும், 1,125 பள்ளிகள் உள்ளன. அவற்றில், கூடுதல் மாணவர்களை சேர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.



No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews