இன்ஜினியரிங் தரவரிசை பட்டியலில், 1.04 லட்சம் பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளதால், 250க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், 10 மாணவர்களை விட குறைவானவர்களே சேரும் நிலைமை உருவாகியுள்ளது
அதனால், கல்லுாரிகளை மூடும் அபாயம் தவிர்க்க, பல்வேறு வழிகளில் மாணவர்களை இழுக்கும் முயற்சிகளில், கல்லுாரி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கு, இந்த ஆண்டு, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், 1.04 லட்சம் பேர் மட்டும், கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் அவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
விண்ணப்பம் குறைவு
தரவரிசையில் இடம் பெற்றவர்களுக்கு, ஜூலை மூன்றாம் வாரத்தில் கவுன்சிலிங் துவங்கும்
இதற்காக, 509 இன்ஜி., கல்லுாரிகளின், ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 865 இடங்கள் தயாராக உள்ளன. இவற்றில், 22 கல்லுாரிகள் தங்களின், 18 ஆயிரத்து, 771 நிர்வாக இடங்களையும் சேர்த்து, கவுன்சிலிங்குக்கு வழங்கியுள்ளன. கல்லுாரிகளில் உள்ள இடங்களை விட, மாணவர்கள் எண்ணிக்கை, 41 சதவீதம் குறைவாக உள்ளது
விண்ணப்பித்தவர்களிலும், தங்களுக்கு விருப்பமான கல்லுாரியும், பாடப்பிரிவும் கிடைக்காதவர்கள், கவுன்சிலிங்கில் இடங்களை தேர்வு செய்யாமல், புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது. அந்த அடிப்படையில் பார்த்தால், அதிகபட்சம், 95 ஆயிரம் இடங்கள் மட்டுமே, கவுன்சிலிங்கில் நிரம்பும்
அபாயம்
அண்ணா பல்கலையின் தேர்வு தரவரிசையில், முதல், 100 இடங்களில் இடம் பெறும் கல்லுாரிகளில், பெரும்பாலான பாடப்பிரிவுகள், கவுன்சிலிங்கில் நிரம்பி விடும்.
ஒரு கல்லுாரிக்கு, குறைந்த பட்சம், 400 இடங்கள் வீதம், 100 கல்லுாரிகளில், 40 ஆயிரம் இடங்கள் நிரம்பும். மீதமுள்ள, 50 ஆயிரம் மாணவர்கள், அடுத்த, 150 கல்லுாரிகளில், இடங்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
இதனால், தரவரிசையில், 250க்கு அடுத்த இடங்களை பெற்றுள்ள, 250க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், 10 மாணவர்களாவது சேர்வாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சேராவிட்டால், கல்லுாரிகளை மூட வேண்டிய அபாயம் ஏற்படும்.
தவிர்க்க முயற்சி
எனவே, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, கல்லுாரிகள் பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளன.
கலை, அறிவியல் கல்லுாரிகளில் படிப்பில் சேர்ந்தவர்கள், பாலிடெக்னிக் படித்து முடித்தவர்கள் மற்றும் கவுன்சிலிங் உதவி மையங்களுக்கு வரும் மாணவர்களை இழுக்கும் பணியில், தனியார் கல்லுாரி ஏஜென்டுகள் ஈடுபட்டுள்ளனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் பட்டியலை பள்ளிகளில் பெற்று, அவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மற்றும், இ - மெயில் அனுப்பியும், இலவச கருத்தரங்கு நடத்தியும், மாணவர்களை கவர, முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.