அரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், வகுப்பெடுக்க போதிய கணினி ஆசிரியர் இன்றி மாணவர்கள் பாதிக்கின்றனர் என, ஆசிரியர் சங்கங்கள் புகார் கூறுகிறது. தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வால் பள்ளிக் கல்வியில் சில மாற்றம் கொண்டு வரப்பட்டது. இவ்வாண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வானது. நுழைவுத் தேர்வுகளை அரசுபள்ளி மாணவர்களுக்கு எதிர்கொள்ளும் நோக்கில் 11-ம் வகுப்பு பாடத்திட்டமும் மாற்றப்பட்டது. புத்தகங்களை முழுமையாக படித்து தேர்வெழுத ஒவ்வொரு பாடத்திற்கும் 800 முதல் 1500 பக்கங்கள் அடங்கிய புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.குறித்த நாளுக்குள் யூனிட் அடிப்படையில் கற்பிப்பதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு சில மாவட்டத்தில் 11-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு இன்னும் கிடைக்காத சூழல் உள்ளது என, புகார் எழுந்துள்ளது. அதிக பக்கங்களை படித்தாலும் நீட் தேர்வால் மருத்துவ கனவை எட்டமுடியுமா என்ற தயக்கத்தில் அரசு பள்ளிகளில் கலைப் பாடப்பிரிவில் சேர ஆர்வம் காட்டிஉள்ளனர்.
மேல்நிலை கல்வியில் அறிவியல் பிரிவில் மட்டும் இருந்த கணினி வகுப்பு இம்முறை அனைத்துப் பிரிவிலும் கணினி பாடத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான கணினி ஆசிரியர்களை நியமிக்கவில்லை என, ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சிவகங்கை இளங்கோவன் கூறியது:
“அரசு பள்ளிக் கல்வியில் சீர்த்திருத்தங்களை வரவேற்கிறோம். புதிய பாடத்திட்டத்தின்படி, 11-ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் 1000 முதல் 1500 பக்கங்கள் இடம் பெறுகின்றன. இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும். இதை அவர்களிடம் திணிப்பதால் கல்வித்தரம் உயர்வு, மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆய்வு செய்தால் விவரம் தெரியும்.இவ்வாண்டு 11 ஆம் வகுப்பில் குரூப்-1, பயோ சயின்ஸ் பிரிவுகளில் சேர்க்கை குறைந்துள்ளது.
கலைப் பிரிவுகளில் அதிகம் சேர்ந்துள்ளனர். பத்தாம் தேர்ச்சி பெற்றவர்கள் 20 சதவீதம் பேர் 11-ம் வகுப்பில் சேர தயங்கி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டைவிட 30 சதவீத மாணவர்கள் கலைப்பாட பிரிவுகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.அதிக பக்கங்களை படிப்பது, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்வது என்ற தயக்கம் உள்ளது.
ஒருவேளை நீட் தேர்விலும் தோல்வியை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் மாணவர், பெற்றோர் மத்தியில் உள்ளது. அறிவியல் பாடங்களில் 70 மதிப் பெண்ணுக்கு 1200 பக்கமும், கணிதம் 90 மதிப்பெண்ணுக்கு 2 வால்யூம் கொண்ட800 பக்கங்களை படிக்க வேண்டும்.முதல் வகுப்பில் இருத்தே மாணவர்களை தயார்படுத்தி இருந்தால் சாத்தியம். இதுபோன்ற சூழலில் அரசு பள்ளியில்மாணவர் சேர்க்கை குறைவை காரணம் காட்டி, உபரி என, ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு மாற்ற கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிடுகின்றனர்.கணினி ஆசிரியர்களுக்கு பணிமாறுதலான காலியிடத்திற்கு பதில் ஆசிரியர்கள் நியமிக்கமில்லை. மாநிலம் முழுவதும் 2,570 மேல்நிலைப் பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மாற்று ஏற்பாட்டில் இருந்த கணினி ஆசிரியர்களை நிறுத்திவிட்டனர். மேல்நிலை கல்வியில் அனைத்துப் பாடப்பிரிவிலும் கணினி வகுப்பு கட்டாயம் என, அறிவித்துவிட்டு, அதற்கான ஆசிரியர்கள் நியமனமின்றி எப்படி வகுப்பெடுக்க முடியும்.
இதை அறிந்த பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். தரமான கல்வி என்ற உத்தரவு இருந்தும், புதிய பாடப் புத்தகங்கள் சப்ளை இன்றி, எப்படி பாடம் நடத்துவது என்ற கேள்வி எழுகிறது. சரியான திட்டமிடல் இன்றி, ஆசிரியர்கள் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது பள்ளிக் கல்வித்துறை.பயோ மெட்ரிக் வருகைப் பதிவு என, அறிவித்துவிட்டு தயக்கம் ஏன்? புளூபிரண்ட் இன்றி புத்தகத்திற்குள் இருந்து மட்டுமே வினாக்களுக்கு பதிலளிக்கும் முறை கிராமப்புற மாணவர்களை மறைமுகமாக தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் செயல்” என்றார்.கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பள்ளிகள் துவங்கிய 2 வாரம் மட்டும் 11-ம் வகுப்பு புத்தகம் வர தாமதம் இருந்தது. ஆன்லைனில் அதற்கான பாடத்திட்டத்தை பார்த்து பாடமெடுக்க அறிவுறுத்தப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் புதிய பாடப்புத்தகங்கள் கிடைத்துள்ளது. கணினி வகுப்பெடுக்க தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.