அரசுப் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கநாணயமும், பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் பணமும் தந்து அசத்தியுள்ளனர் ஒரு கிராமத்தினர். அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது மிகவும் குறைந்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்ப்பதையே விரும்புகிறார்கள். அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.
பல கிராமங்களில் பொதுமக்களும் அரசுப் பள்ளிகளுக்கு தேவையான பொருள்களை வாங்கித் தருவதுடன், மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்காக விழாவும் எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி துலுக்கவிடுதி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்கநாணயமும், பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் பணமும் தந்து அசத்தியிருக்கின்றனர் கிராம மக்கள்.
அவர்களிடம் பேசினோம், `இந்த அரசுப் பள்ளியில் முன்பெல்லாம் ஏராளமான மாணவர்கள் படிப்பார்கள். தனியார் பள்ளியின் ஆதிக்கத்தால் இங்கு மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காகப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்யப்பட்டது.
1ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம்,பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி புதிதாக சேர்ந்த 15 மாணவ, மாணவிகளுக்குத் தங்க நாணயம், ஆயிரம் ரூபாய் பணம் விழா நடத்திக் கொடுக்கப்பட்டது.
இதை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று, கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் போது 50க்கும் மேற்பட்ட குழந்தைகளை சேர்க்க வைப்பதற்கு எண்ணியுள்ளோம். அவர்களுக்கும் இதே போல் பரிசுகள் கொடுக்கப்படும். இதற்காக எங்க கிராமத்தைச் சேர்ந்த பலர் பண உதவி செய்கிறார்கள்’ என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.