அண்ணாமலைப் பல்கலை.யில் விலையில்லா இணைய வசதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 16, 2018

Comments:0

அண்ணாமலைப் பல்கலை.யில் விலையில்லா இணைய வசதி


தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களில் முதலாவதாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் விலையில்லா அருகலை (ரண்-ஊண்) இணைய வசதி தொடங்கப்பட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக விலையில்லா அதிவேக இணைய வசதியை ஸ்வயம் திட்டம் மூலம் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. இந் நிலையில், தமிழ்நாட்டிலேயே அரசு பல்கலைக்கழகங்களில் முதலாவதாக, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் விலையில்லா அருகலை (ரண்-ஊண்) இணைய வசதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் 10.3.2018 அன்று நிறைவேறியது. இதையடுத்து, இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் முதல் கட்ட தொடக்க விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்க வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் செ. மணியன் பங்கேற்று, விலையில்லா இணைய வசதியை தொடங்கி வைத்தார். பதிவாளர் கே.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். விழாவில் அனைத்துப் புல முதல்வர்கள், அதிகாரிகள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், சிதம்பரம் ரிலையன்ஸ் ஜியோ மேலாளர் ஆர்.தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்கலைக்கழகத்தின் கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட 10 புலங்கள் (பரங்கிப்பேட்டையில் உள்ள கடல் அறிவியல் புலமும் அடக்கம்) , தொலைதூரக் கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து அலுவலகங்களுக்கும் விலையில்லா அருகலை இணைய வசதி ஏற்படுத்தப்படுகிறது. இந்த வசதி பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பேருதவியாக அமையும் என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்தான் இந்த வசதி முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர். விழாவுக்கான ஏற்பாடுகளை இன்னோவேஷன் மைய இணை இயக்குநர் என்.கருணாகரன், உதவி இயக்குநர் சி.எஸ்.ரத்தினசபாபதி ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews