இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். கட்டணம் பலமடங்கு உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 25, 2018

Comments:0

இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். கட்டணம் பலமடங்கு உயர்வு


புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டதால் பெற்றோர்கள், மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியை 2008-09ஆம் கல்வியாண்டில் புதுவை அரசு தொடங்கியது.
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கூடுதல் பயன் கிடைக்கும் என்ற அடிப்படையில் இது அரசுக் கல்லூரியாக இல்லாமல் கூட்டுறவுக் கல்லூரியாக இயங்கி வருகிறது.

இதில் 150 இளநிலை மருத்துவ இடங்கள் (எம்.பி.பி.எஸ்.) இடங்கள் உள்ளன. இதில் 23 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், 22 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியருக்கும், 105 இடங்கள் புதுவை மாநில மாணவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வந்தன.

காங்கிரஸ் ஆட்சி முடிந்து என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி வந்தபோது, என்.ஆர்.ஐ. இடங்களில் பல்வேறு புகார்கள் வந்ததால் 2013-14 முதல் 127 இடங்கள் புதுவை மாணவர்களுக்கு கிடைத்தது.
புதுவை மாணவர்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் பல்கலைக்கழக கட்டணம், பதிவுக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டது.

தொடக்க காலத்தில் ரூ.17,000 மட்டுமே இருந்தது. இதில் இருப்புத்தொகை ரூ.5000 ஆகும். காலப்போக்கில் படிப்படியாக உயர்ந்து ரூ.60,000 ஆக மட்டுமே இருந்தது. தற்போது, இருப்புத்தொகை ரூ.50,000 ஆக மாற்றப்பட்டதுடன், ஆண்டுக் கட்டணம் ரூ.1.37 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கூட்டுறவுக் கல்லூரி வருவாய் இல்லை என்பதால் மாணவர்களிடம் கட்டாய வசூலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், மாணவர்களும், பெற்றோர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்னனர்.

இதுகுறித்து, புதுவை மாநில பெற்றோர்கள், மாணவர்கள் நலச் சங்கத் தலைவர் ராஜ்பவன் பாலா கூறியதாவது:

தமிழகத்தில் அரசுக் கல்லூரியில் ரூ.24,000, புதுவை ஜிப்மரில் ரூ.10,000, மத்திய அரசு நிறுவனங்களான இ.எஸ்.ஐ. கல்லூரியில் ரூ.17,000 மட்டுமே எம்.பி.பி.எஸ். பயிலும் மாணவர்களிடம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

புதுவையை பொருத்தவரை இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, புதுவை பொறியியல் கல்லூரி, பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி, ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி, மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிர்ணயிப்பதில்லை.
மாறாக அதற்கான கூடுதல் நிதியை பெற என்.ஆர்.ஐ. இடம் மூலம் கூடுதல் கட்டணம் வசூல் செய்து சரிசெய்வது வழக்காக இருந்து வருகிறது. இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு 23 என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் 15 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இந்தக் கல்லூரிக்கு புதுவை அரசு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி என்ன ஆனது என்று விசாரிக்க வேண்டும். அதிக மதிப்பெண் எடுத்த புதுவை ஏழை மாணவ, மாணவிகள் மட்டுமே இங்கு சேர்ந்து படிக்கின்றனர்.

அகில இந்திய ஒதுக்கீடு நல்ல மதிப்பெண் எடுத்தவர்களும் இங்கு சேர்கின்றனர். இதுபோல இந்த ஆண்டு சேரும் மாணவர்கள் கல்விக்கட்டணம் இதர கட்டணம், சீருடை, ரூ.2 லட்சத்துக்கும் மேல் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

அதேநேரத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் தனியார் கல்லூரியில் ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை செலுத்தி சேர்கின்றனர். ஆனால், சென்டாக் மூலம் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2.25 லட்சம் கல்வி உதவித்தொகை கிடைக்கிறது. இதன் மூலம் இந்த நிதியை கழித்தால் தனியார் கல்லூரி, இந்திரா காந்தி கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் கட்டணத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. இந்திரா காந்தி கல்லூரியை அரசே ஏற்று நேரடியாக நடத்த வேண்டும் என்றார் பாலா.

இதுகுறித்து, புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள், பெற்றோர்கள் நலச் சங்கத் தலைவர் மு.நாராயணசாமி, பொருளாளர் வி.சி.சி.நாகராஜன் ஆகியோர் கூறியதாவது:
புதுவை அரசு கடந்த கல்வியாண்டில் ரூ.32 ஆயிரமாக இருந்த கல்விக் கட்டணத்தை மாற்றி, ரூ. 1 லட்சத்து 37 ஆயிரம் என திடீரென உயர்த்தியுள்ளது.

இந்தக் கல்விக் கட்டண உயர்வு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாகவும், அவர்கள் கல்விக் கட்டணத்தை உயர்த்தவும் வழிவகை அமைக்கும். எனவே, புதுவை அரசு உடனடியாக உயர்த்திய கட்டணத்தை திரும்பப் பெற்று இலவச மருத்துவக் கல்வியை தரவேண்டும் அல்லது பழைய கட்டணத்திலேயே படிக்க உதவ வேண்டும்.

மாணவர்கள் நலன் கருதி புதுவை அரசு, அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அளிப்பது போன்று கல்வி உதவித் தொகையான 2 லட்சத்து 25 ஆயிரத்தை ஒதுக்கி இலவசமாக மருத்துவக் கல்வியை வழங்க வேண்டும் என்றனர்.

முதல்வர் விளக்கம்:

இந்தக் கட்டண உயர்வு குறித்து முதல்வர் வே.நாராயணசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:


இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியை நிர்வகிக்க ஆண்டுக்கு ரூ.80 கோடி செலவாகிறது. அங்குள்ள உபகரணங்கள், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கான கட்டணத்துக்கு அதிக செலவு ஏற்படுகிறது. இதற்கான நிதியை புதுவை அரசுதான் ஆண்டுதோறும் வழங்க வேண்டிய நிலையில் உள்ளது. புதுவை அரசு ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருக்கிறது. எனவே, கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது. பொதுமக்கள், மாணவர்கள் அரசின் நிதி நிலையை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews