பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவன வளாகங்களில் பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்து பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
உலக சுற்றுப்புற சூழல் தினம் வரும் 5ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஐக்கிய நாடுகள் சபை சார்பில் `பிளாஸ்டிக் மாசுவை அகற்றுவோம்’ என்ற கருத்தை முன்னிறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட உள்ளன.
இதை தொடர்ந்து இந்தியாவில் பல்கலைக்கழக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக யுஜிசி அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பிளாஸ்டிக் டீக்கப்கள், உணவு எடுத்துச்செல்லும பிளாஸ்டிக் கப்கள், கேரி பேக்குகள், டிஸ்போசபிள் உணவு பரிமாறும் கப்கள், பிளாஸ்டிக் ஸ்டிராக்கள், உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
இது தவிர ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
இது தவிர பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மெகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யவேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைக்க இது நல்ல சந்தர்ப்பம்.
மாணவர்கள் தங்களது அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் விரும்புகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கவும் பள்ளி நிர்வாகங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.