கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை. இது கல்வி அதிகாரிகளுக்கும் பெற்றோர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கல்வி மாவட்டத்தில் மத்திகிரி என்ற இடத்தின் அருகில் உள்ளது மாசிநாயக்கனபள்ளி. இங்குள்ள அரசு தெலுங்கு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ வகுப்புகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
தெலுங்கு மொழியில்தான் பாடங்கள் நடத்தப்படும். இந்தக் கல்வி ஆண்டில் ப்ளஸ் டூ வகுப்பில் 30 மாணவ, மாணவிகள் பயின்றனர். அவர்களில் 29 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய ஒட்டுமொத்த மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை. இது கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, நேற்று சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தார். எதற்காக ஒட்டுமொத்த மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை என்று விசாரித்தார். தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கியுள்ளார்.
இதுகுறித்து மகேஸ்வரியிடம் பேசினோம். 'ஓசூர் கல்வி மாவட்டத்தில் மட்டும் தெலுங்கு மொழியில் கற்றுக்கொடுக்கப்படும் நான்கு அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் மற்ற மூன்று பள்ளிகளில் நல்ல ரிசல்ட் வந்துள்ளது. மாசிநாயக்கனபள்ளி அரசு தெலுங்கு மேல்நிலைப்பள்ளியில் மட்டும்தான் ப்ளஸ் டூ தேர்வு எழுதியவர்களில் ஒருத்தர்கூட தேர்ச்சி பெறவில்லை.
இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளேன். குறிப்பாக கணிதம், இயற்பியல் பாடங்களில்தான் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். இதனால், அந்தப் பாடப்பிரிவு ஆசிரியர்களிடமும் தலைமை ஆசிரியரிடமும் விசாரணை நடத்தியுள்ளேன். அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து மாணவிகளிடமும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தினேன். இந்தப்பள்ளி கடந்த கல்வி ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், ப்ளஸ் டூ தேர்வில் மட்டும் ஏன் இந்த நிலைமை என்று விசாரிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ப்ளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள், விரைவில் நடைபெற உள்ள சிறப்புத் தேர்வை எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளைத் தேர்வுக்குத் தயார்படுத்த சிறப்பு வகுப்புகள் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம். இதனால் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.
இதுகுறித்து பள்ளி வட்டாரங்கள் கூறுகையில், 'ப்ளஸ் டூ தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் இயற்பியல் பாடத்தில் ஐந்து பேரும், உயிரியல் பாடத்தில் இரண்டு பேரும் ஆங்கிலப் பாடத்தில் 18 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாகத்தான் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். கடந்த கல்வி ஆண்டில் ப்ளஸ் டூ தேர்வில் இந்தப்பள்ளி 33 சதவிகிதம் தேர்ச்சி பெற்றது. இந்தமுறைதான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது" என்றனர்.
ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் தெலுங்கு மொழியில் பாடங்களைக் கற்பிக்க தகுதியான ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்துவருகிறது. நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்காமல் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு ப்ளஸ் டூ மாணவ, மாணவிகளுக்கு பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுதான் மாணவ, மாணவிகள் பாடங்களில் தோல்வியடைந்ததற்கு முழு காரணம் என்கின்றனர் உள்விவர வட்டாரங்கள். சம்பந்தப்பட்ட மாசிநாயக்கனபள்ளி அரசு தெலுங்கு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் நலன்கருதி ப்ளஸ் ஒன் பாடப்பிரிவை மாற்றவும் கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், உயிரியல் பாடப்பிரிவுகளுக்குப் பதிலாக வரலாறு பாடப்பிரிவைக் கொண்டுவரும் ஆலோசனையில் கல்வி அதிகாரிகள் உள்ளனர். இதனால், அடுத்தக் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.