உடல் நலக்குறைவால் தேர்வில் தோல்வி 11ம் வகுப்பு மாணவிக்கு ஐகோர்ட் மறு வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 22, 2018

Comments:0

உடல் நலக்குறைவால் தேர்வில் தோல்வி 11ம் வகுப்பு மாணவிக்கு ஐகோர்ட் மறு வாய்ப்பு



உடல் நலக்குறைவால் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை சரியாக எழுத தவறிய மாணவிக்கு மறு வாய்ப்பு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஷரோன் நிவேதா என்ற மாணவி 11ம் வகுப்பு அறிவியல் பிரிவில் படித்து வந்தார். அவருக்கு தேர்வு நடந்த தருணத்தில் திடீரென உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால், ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தேர்வை சரியாக எழுதாமல் மூன்று பாடத்தில் தோல்வியடைந்துள்ளார். பள்ளி நிர்வாகம் மாணவியை வணிகவியல் பிரிவில் 11ம் வகுப்பு படிக்க வேண்டும். இல்லையென்றால் மாற்றுச் சான்றிதழ் பெற்று கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.   

இந்நிலையில், உடல் நலக்குறைவால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக தேர்வு சரியாக எழுத முடியவில்லை, எனவே,  மூன்று பாடங்களில் மறு தேர்வு எழுதி அந்த பள்ளியில் படிப்பை தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரை போல பல்வேறு மாணவர்கள் தோல்வியடைந்ததால் அவர்களுக்கு  மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் பள்ளியில் படிக்க வேண்டும் என மனுதாரர் நிர்ப்பந்திக்காவிட்டால் மறுதேர்வுக்கு அனுமதிப்பதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை மாணவி தரப்பில் ஏற்றுக்கொண்டனர். 

இதையடுத்து, நீதிபதி (மே 21) நேற்று, 23, 25 ஆகிய தேதிகளில், இயற்பியல், வேதியியல், கணித தேர்வுகளை மீண்டும் எழுத அனுமதியளித்தார். மேலும், இந்த தேர்வில் மாணவி வெற்றி பெற்றால் 12ம் வகுப்பை படிப்பதற்கு சான்று வழங்க வேண்டும். தோல்வியடைந்தால், 11ம் வகுப்பில் மாணவி தேர்ச்சி பெறவில்லை எனக் குறிப்பிட்டு மாற்றுச் சான்று வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews