19 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடம் 2026 ஜனவரிக்குள் நிரப்பப்படுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 18, 2025

Comments:0

19 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடம் 2026 ஜனவரிக்குள் நிரப்பப்படுமா?



19 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடம் 2026 ஜனவரிக்குள் நிரப்பப்படுமா?

தமிழகத்தில் 2026 ஜனவரிக்குள் 19 ஆயிரத்து 260 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் 2012ல் 11 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இத்தேர்வுக்கு 2 ஆண்டுகள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் எழுதலாம். 2013ல் சீனியாரிட்டி முறையை ரத்து செய்து விட்டு வெயிட்டேஜ் முறைப்படி பணியிடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி மதிப்பெண்களை வெயிட்டேஜ்ஜில் கருத்தில் கொண்டனர்.

அடுத்தடுத்து 2013, 2017, 2019, 2022 ஆண்டு களில் தேர்வு நடத்தினாலும் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை அதிகரித்ததால் இதில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 2024 ஜூலை 21ல் நியமன தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. இத்தேர்வுக்கு 2768 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு நிரப்பப்பட்டது.

2025 மே மாதம் அதிகளவில் தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளது. அதே நேரம் அரசோ பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து வருகிறது. நடந்து முடிந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான நியமன தேர்வில் 2768 பணியிடங்களுக்கு 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தகுதியான அதிக மதிப்பெண் பெற்ற பலரும் பணி வாய்ப்பை இழந்துள்ளனர்.

இதுகுறித்து இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர் கூறியதாவது: தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஜூலை தான் இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் அதற்கான பணியிடங்களோ குறைவாக 2400 மட்டுமே அறிவிக்கப்பட்டது. 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அமைச்சர்களே கூறும் நிலையில் கடந்தாண்டு நியமன தேர்வு எழுதியோரை கூடுதல் பணியிடங்கள் ஒதுக்கி நிரப்ப வேண்டும். பலருக்கு வயதாகி விட்டதால் அரசு கருணை காட்ட வேண்டும். கடந்தாண்டு 110 விதியின் கீழ் 2026 ஜன.,க்குள் 19 ஆயிரத்து 260 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இன்னும் இரு மாதங்களே உள்ளதால் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews