தகுதித்தேர்வு கட்டாயம்: தமிழகத்தில் 1½ லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 02, 2025

Comments:0

தகுதித்தேர்வு கட்டாயம்: தமிழகத்தில் 1½ லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்



தகுதித்தேர்வு கட்டாயம்: தமிழகத்தில் 1½ லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் கூறியதாவது:- மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம் என்பது 1 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தில் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பணியில் சேரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம் என்று உள்ளது. ஆனால் சட்டத்தில் இல்லாத ஒரு அம்சத்தை இணைத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தங்களது 142-வது சிறப்பு பிரிவை பயன்படுத்தி தீர்ப்பு தந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

அதாவது சட்டம் அமலாவதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கும் இந்த தகுதி தேர்வு கட்டாயம் என்று சொல்வது ஏற்புடையது அல்ல. எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அதேபோல் இந்த சட்டம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொருந்தாது. ஏனென்றால் அவர்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள். இந்த கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அவர்கள் வரமாட்டார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை அரசு தொடக்கப்பள்ளிகளில் 62,979 ஆசிரியர்களும், நடுநிலைப்பள்ளிகளில் 49 ஆயிரத்து 547 ஆசிரியர்களும், உயர்நிலைப்பள்ளிகளில் 31 ஆயிரத்து 531 ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் 82,033 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். மொத்தமாக அரசு பள்ளிகளில் 2,28,990 ஆசிரியர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 76 ஆயிரத்து 360 ஆசிரியர்களும் என மொத்தமாக 3 லட்சத்து 5 ஆயிரத்து 350 அரசு ஆசிரியர்கள் உள்ளனர். அதில் 75 ஆயிரம் பேர் முதுநிலை ஆசிரியர்கள். 5 ஆண்டுகளுக்குள் ஒய்வு பெறுபவர்கள் 50 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மேலும் 35 ஆயிரம் பேர் ஏற்கனவே தகுதித்தேர்வு எழுதி பணியில் சேர்ந்து இருக்கிறார்கள். எனவே இவர்கள் 3 பிரிவினரையும் கழித்தால் சுமார் 1.45 லட்சம் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தகுதி தேர்வு கட்டாயம் எழுத வேண்டும்.

அதேபோல் தனியார் பள்ளிகளில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் தகுதித்தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் என 30 சதவீதம் கழித்தால் 1.57 லட்சம் பேர் தகுதித்தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews