‘விஜய் சினிமாவில் மனிதன் என்றால் பொது வாழ்க்கையில் மாமனிதன்!’ - ஆசிரியர் போராட்டத்தில் தவெக ஆதரவு குரல்கள் ‘If Vijay is a man in cinema, he is a man in public life!’ - Voices of support for Thaveka in the teachers’ protest
அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினால் திமுக தலைவர்கள் ஆதரவளித்து வீராவேசமாக பேசுவதும், அதேபோல், திமுக ஆட்சி நடந்தால் அதிமுக தலைவர்கள் ஆதரவளித்து வீராவேசமாக பேசுவதும் கடந்த கால வரலாறு. இப்போது கூடுதலாக தவெக-வும் களத்துக்கு வந்து போராட்டக் களத்தில் இருப்பவர்களுக்காக வசனம் பேச ஆரம்பித்திருக்கிறது. பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரைக்கும் திறமையான ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை (டெட்) கொண்டு வந்தது மத்திய அரசு. இந்நிலையில், 2018-ம் ஆண்டு அதிமுக அரசு, டெட் தேர்வு மட்டும் போதாது, மறு நியமன போட்டித் தேர்வும் எழுத வேண்டும் என அரசாணை 149-ஐ பிறப்பித்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த அரசாணையை ரத்து செய்வது குறித்து யோசிக்கவே இல்லை ஸ்டாலின். மாறாக, கடந்த ஆண்டு திமுக அரசும் ஆசிரியர் மறு நியமன போட்டித் தேர்வை நடத்தியது. இந்நிலையில், ‘2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்’ சார்பில், அரசாணை 149-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் ம.இளங்கோவன், “ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1-ம் தேதி ஆசிரியர்களை முட்டாளாக்கிய தினம். மொத்தத்தில் எதுவும் செய்யாத முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எங்கள் ரத்தத்தால் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்” என ஆவேசமாகக் கூறி, ரத்தத்தால் ‘ஹேப்பி பர்த்டே ஸ்டாலின் சார், மறு நியமனத் தேர்வை ரத்து செய்திடு, நாங்கள் மாண்டு போகவா நீ மீண்டும் ஆட்சிக்கு வந்தாய்’ என எழுதப்பட்டிருந்த பதாகையை உயர்த்திக் காட்டினார். தவெக நிர்வாகியான கே.எம்.கார்த்திக் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு ஆதரவாக பேசியது பலரையும் வியக்க வைத்தது. போராட்டத்தில் பங்கெடுத்த சங்கத்தின் தேனி மாவட்ட மகளிரணி செயலாளர் சத்தியவாணி, “நான் 16 வயதிலிருந்து விஜய் ரசிகை. அவர் சினிமாவில் மனிதன் என்றால், பொதுவாழ்க்கையில் மாமனிதன். நிச்சயம் அவரால் நமக்கு நல்லது நடக்கும்” என்று பேசி கைதட்டுகளை அள்ளினார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் ம.இளங்கோவன், “நான் மதுரை பழங்காநத்தம் திமுக மாணவரணி துணை அமைப்பாளராக 8 ஆண்டுகாலம் இருந்துள்ளேன். இருந்தும் என்ன பயன்? இந்த ஆட்சியைக் கொண்டுவர நாங்கள் பக்கபலமாக இருந்துள்ளோம்.
ஆனால், திமுக ஒன்றிரண்டு பொய்களை சொல்லி ஆட்சிக்கு வரவில்லை. சொன்னது எல்லாமே பொய் தான். நடப்பது கலைஞர் ஆட்சியே இல்லை. தவெக தலைவர் விஜய் எங்களுக்கு ஆதரவளித்தால் நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதில் தவறில்லை. அதிமுக ஆட்சியில் 28 போராட்டங்களை நடத்திய நாங்கள், திமுக ஆட்சியில் 52 போராட்டங்களை நடத்தி உள்ளோம். ‘திமுக-காரனைத் தவிர்த்து வேறு யாராலும் எங்களை வீழ்த்த முடியாது’ என ஸ்டாலின் கூறுவர். இப்போது போராடி வரும் நாங்கள் அனைவரும் ஒரு காலத்தில் திமுக-காரர்கள் தான் என்பதை அவர் உணர வேண்டும்” என்றார்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.