பள்ளி நிகழ்ச்சிகளுக்கு புதிய வழிமுறைகள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 06, 2024

Comments:0

பள்ளி நிகழ்ச்சிகளுக்கு புதிய வழிமுறைகள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு



பள்ளி நிகழ்ச்சிகளுக்கு புதிய வழிமுறைகள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை சமூகவலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ள முதல்வர் “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி. தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.

எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன்.

அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி.” எனக் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சையும், போராட்டமும்: முன்னதாக, சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் பிரபல பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழிவும், அதன் நிமித்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.

இந்நிலையில் இன்று (செப்.6) காலை சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அப்பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறவிருப்பதால் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில் முதல்வர் ஸ்டாலினின் இந்த ட்வீட் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews