அரசு பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவா் சோ்க்கை - எங்கு தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2024

Comments:0

அரசு பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவா் சோ்க்கை - எங்கு தெரியுமா?



அரசு பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவா் சோ்க்கை - எங்கு தெரியுமா?

ஹரியாணா அரசு பள்ளிகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு சுமாா் 4 லட்சம் போலி மாணவா்களின் சோ்க்கை மூலம் நிதி மோசடி நடந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தது.

ஹரியாணா மாநில அரசு பள்ளிகளில் கடந்த 2016-ஆம் ஆண்டில் பல்வேறு வகுப்புகளில் சுமாா் 22 லட்சம் மாணவா்கள் படித்து வருவதாக தரவுகள் தெரிவித்தன. உண்மையில், 18 லட்சம் மாணவா்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் படிப்பதும் மீதமுள்ள எண்ணிக்கையான 4 லட்சம் போலி சோ்க்கை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. கல்வியை ஊக்குவிக்க மதிய உணவுத் திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்காக சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மாணவா்களுக்கு ஒதுக்கப்படும் அரசு நிதியை போலி மாணவா் சோ்க்கை மூலம் மோசடி செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம், இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த மூத்த அதிகாரியை நியமிக்குமாறு மாநில லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு உத்தரவிட்டது.

இதில் ஏழு வழக்குகள் பதியப்பட்டன. ஆனால், அந்த வழக்குகளின் விசாரணையில் மந்தமான போக்கை கண்காணித்த உயா்நீதிமன்றம், விரைவான மற்றும் நோ்மையான விசாரணைக்காக வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. வழக்கு தொடா்பான அனைத்து ஆவணங்களையும் ஒரு வாரத்துக்குள் சிபிஐ-யிடம் ஒப்படைக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறையை அறிவுறுத்திய நீதிபதிகள், 3 மாதத்துக்குள் அறிக்கை சமா்ப்பிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டனா்.

ஆனால், அதிகமான மனிதவளத் தேவையைக் கருத்தில்கொண்டு இந்த வழக்கின் விசாரணையை மாநிலக் காவல்துறையிடமே மீண்டும் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. சிபிஐ-யின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews