கல்வி தொலைக்காட்சிக்கு புதிய படப்பதிவு கூடம் திறப்பு; நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளிலும் அடுத்த கட்டமாக உயர் தொழில்நுட்ப ஆய்வகம் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் பள்ளிக்கல்வி துறை அலுவலக வளாகத்தில் (டிபிஐ) கல்வி தொலைக்காட்சி உயர் தொழில்நுட்ப படப்பதிவு கூடங்களை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று திறந்து வைத்து, அங்கு இருந்த கேமராவை இயக்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கல்வி தொலைக்காட்சிக்கு படப்பதிவு கூடங்கள் (ஸ்டுடியோ), உயர் தொழில்நுட்ப ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டுடியோக்களை உலக தரத்தில் கொண்டுவர வேண்டும் என்ற முதல்வரின் ஆசை நிறைவேறியுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புதுப்புது உத்திகளோடு மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரவேண்டும் என்று விரும்பினோம். அதன் ஒரு பகுதியாக தற்போது ஸ்டுடியோ திறக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில், நெய்தல், பாலை, மருதம் போன்ற நிலப் பகுதிகளையும் உயர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியுள்ளோம். சொல்லிக் கொடுத்து படிப்பதைவிட, நேரடியாக மாணவர்களின் கற்பனை திறனை அங்கேயே கொண்டு செல்லும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை அனைத்து பாடங்களுக்கும் பயன்படுத்த வேண்டும். 1-ம் வகுப்பு குழந்தைக்கு ரைம்ஸ், கதைகள் சொல்லித் தருவதில் தொடங்கி, 12-ம் வகுப்பு மாணவர்கள் வரை இந்த தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல உள்ளோம். பாடம் நடத்துவதில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், மாணவர்களின் இடைநிற்றலும் தவிர்க்கப்படுகிறது. தமிழகத்தில் 6,218 பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகம் உருவாக்கி வலுப்படுத்தி உள்ளோம், அடுத்த கட்டமாக நடுநிலைப் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல உள்ளோம்,
மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம், வழிகாட்டுதல் தேவைப்பட்டால் ‘14417’ என்ற தொலைபேசி எண் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2023 மார்ச் முதல் கடந்த ஜனவரி வரை 2.96 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், துறை செயலர் ஜெ.குமரகுருபரன், பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.