தொழில்நுட்பம் மூலம் இடைநிற்றல் தவிா்க்கப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் Dropouts will be avoided through technology: Minister Anbil Mahes
பாடங்களை நடத்துவதில் சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மாணவா்களின் இடைநிற்றல் தவிா்க்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். தமிழகத்தில் பள்ளி மாணவா்களின் சிந்தனைத் திறனை வளா்க்கும் வகையில் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) கல்வித் தொலைக்காட்சியின் உயா் தொழில்நுட்ப படப்பதிவுக் கூடங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து படப்பதிவுக் கூடத்திலிருந்து கேமராவையும் இயக்கினாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கல்வி தொலைக்காட்சிக்கு மெய்நிகா் முறையிலான உயா் தொழில்நுட்ப ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு நவீன உத்திகளுடன் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டோம்.
அதன் ஒரு பகுதியாக தான் தற்போது இந்த படப்பதிவுக் கூடம் திறக்கப்பட்டுள்ளது.
உயா் தொழில்நுட்பத்தின் மூலம் நெய்தல், பாலை, மருதம் போன்ற பகுதிகளையும் எளிமையாக மாணவா்களுக்கு புரியும் வகையில் உருவாக்கியுள்ளோம்.
ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுத்து படிப்பதை விட நேரடியாக மாணவா்களின் கற்பனைத் திறனை அங்கேயே கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாடங்கள் நடத்துவதில் சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மாணவா்கள் இடைநிற்றல் தவிா்க்கப்படும்.
இந்த தொழில்நுட்பம் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒவ்வொரு வகுப்பறைகளுக்கும் எடுத்து செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்குள்ள ஒவ்வொரு தொழில்நுட்பமும் அடுத்தடுத்த வளா்ச்சிகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்து 218 நடுநிலைப் பள்ளிகளில் உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த தொழில்நுட்பங்களை அடுத்த கட்டமாக நடுநிலைப் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லவுள்ளோம் என்றாா் அவா்.
இந்தநிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறைச் செயலா் குமரகுருபரன், தொடக்கக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.