அகில இந்திய மேல்நிலைக் கல்வி ஆய்வறிக்கை All India Survey of Higher Education (AISHE) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 15, 2024

Comments:0

அகில இந்திய மேல்நிலைக் கல்வி ஆய்வறிக்கை All India Survey of Higher Education (AISHE)

அண்ணாமலை பகல் கனவு காண்பது போல் மும்மொழிக் கொள்கை ஒருபோதும் உருவாக வாய்ப்பில்லை: தமிழக அரசு

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும், மும்மொழிக் கொள்கை ஒருபோதும் வாய்ப்பில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை ஊட்டுவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது தமிழ்நாடு அரசு. அதன்படி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிப்பதற்காக மைக்ரோசாஃப்ட் TEALS திட்டம் என்னும் ஒரு திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாகக் கொண்டு வந்திருக்கிறது.

இது குறித்து பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில் இது தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் என்று தெரிவித்திருந்தார். மேலும் வெகு விரைவில் முன்மொழிக் கொள்கையையும் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ திரிக்கவோ முயலக்கூடாது. தமிழ்நாடு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டுக்கென்று வரலாறும் பாரம்பரியமும் உண்டு. 1920 ஜூலை 16ஆம் தேதி அன்றைய கிண்டி பொறியியல் கல்லூரியில் (இன்றைய அண்ணா பல்கலைக்கழகம்) நடந்த தமிழ் மன்ற விழாவில் தந்தை பெரியார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அங்கு சென்ற தந்தை பெரியாரிடம் கல்லூரிக்கு என புதிய கம்ப்யூட்டரை வாங்கி இருப்பதாக அங்கு இருக்கும் பேராசிரியர்கள் தெரிவிக்க அதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பிக் கேட்டார் பெரியார் படியேறிச்செல்ல முடியாத முதுமையில் இருந்தாலும், முதல் மாடிக்கு தன்னை தூக்கிச் செல்லுமாறு வேண்டி, அங்கு சென்று அந்த கம்ப்யூட்டரைப் பார்த்தார். அப்போது அதற்கு கணினி என்கிற பெயர் வைக்கப்படவில்லை.

ஐ.பி.எம் கம்ப்யூட்டர் 1620 மாடல் கணினி அது. எந்த தேதியைச் சொன்னாலும் அதன் கிழமையை மிகச் சரியாக அக்கணினி சொல்லி விடும் என்கிற செய்தியை அங்குள்ள பேராசிரியர்கள் சொல்ல பெரியார் சில தேதிகளை சொல்லி, கிழமை சரியாக வருகிறதா என்று பார்த்தார். தன்னுடைய பிறந்த நாளையும் அவர் சொல்ல சரியாக சனிக்கிழமை என்று கூறியது அந்தக் கணினி. அவரிடம் இந்த கணினி பற்றி கூறியது அன்றைய பேராசிரியரும் பின்னாளில் துணைவேந்தரும் ஆன வா.செ குழந்தைசாமி.

வருங்காலத்தில் ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒரு தகவல் தொடர்பு கருவி இருக்கும் என்று இன்றைய செல்போன் குறித்து அன்றே கணித்து சொன்னவர் பெரியார். இதன் தொடர்ச்சியாக 1997 லேயே அன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து தமிழ்நாட்டுக்கென தனியே தகவல் தொழில்நுட்பத்துறைக்கான கொள்கை ஒன்றை உருவாக்கி, தனியாக ஒரு துறையை உருவாக்கி அதற்கென ஒரு அமைச்சரை நியமித்தார். தகவல் தொழில்நுட்பத் துறை பற்றி நாட்டின் பிற மாநிலங்கள் இது குறித்து பெரிதும் விழிப்புணர்வு அடையாத காலகட்டத்திலேயே தொலைநோக்குப் பார்வையோடு கருணாநிதி சிந்தித்து இதற்கான திட்டங்களைத் திட்டினார். டைடல் பார்க் போன்ற கட்டமைப்புகளை மாநிலத்தில் உருவாக்கி உலக நிறுவனங்களின் முதலீட்டு மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டினார். இதன் மூலம் சென்னை ஒரு ஐ.டி ஹப் ஆக மாறியது இன்றைக்கு பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் காணப்படும் ஐ.டி நிறுவனங்கள் அனைத்திற்கும் அன்றே வித்திட்டது அன்று கருணாநிதி உருவாக்கிய தனி கொள்கைதான்.

இதையடுத்து அரசுத் துறைகளை கணினிமயமாக்கியது கருணாநிதி செய்த தகவல் தொழில்நுட்பப் புரட்சி. E-governance எனப்படும் மின் நிர்வாக முறையை முதன்முதலில் திருவாரூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாகவே குக்கிராமங்கள் தொடங்கி தலைநகரம் வரை படிப்படியாக ஒவ்வொரு துறையும் கணினி மயமாகி ஊழியர்களின் பணிச்சுமையை குறைத்தது. தகவல் சேமிப்பும் எளிதாகி இருக்கிறது. இந்த தொடர் ஓட்டத்தின் தொடர்ச்சியாக செயற்கை நுண்ணறிவுக்கென தனியே ஒரு கொள்கை தமிழ்நாட்டில் 2020ல் உருவாக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை என்கிற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடந்தன. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் அதில் மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்குகள் என்று சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்துவிட்டது. எடுத்துக்காட்டாக தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 % ஆக ஆக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது.

ஆனால் அகில இந்திய மேல்நிலைக் கல்வி ஆய்வறிக்கையின் படி (All India Survey of Higher Education (AISHE) தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 சதிவிகிதத்தை 2019-20 கல்வியாண்டிலேயே எட்டிவிட்டது. 2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவிகிதத்தை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது தேசிய கல்விக் கொள்கை. ஆனால் தமிழ்நாடு 100 சதவீதத்தையே 2035ல் எட்டிவிடும். தமிழ்நாடு அரசு செய்ததை, செய்துகொண்டிருப்பதை தேசிய கல்விக் கொள்கையில் இணைத்துவிட்டு தேசிய கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என்று சொல்வது நகைப்புக்குரியது. குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை . நாட்டின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு எப்பொழுதும் தொழில்நுட்பத் துறையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவர்.

முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்றவற்றில் வருங்காலத்தில் மிகத் தீவிரமாக பயிற்சிகள் அளிக்கப்படும். ஏனெனில் செயற்கை நுண்ணறிவை கையிலெடுக்கும் மாநிலமே இன்னும் பத்தாண்டுகளில் முன்னணி மாநிலமாக இருக்கப்போகிறது.

பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும். அண்ணாமலை பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக்க வாய்ப்பு இல்லை; இருமொழிக் கொள்கையே தொடரும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84634530