தொடர் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் நாளை திறப்பு
தொடர் விடுப்பு முடிந்து பள்ளி, கல்லூரிகள் நாளை (டிச.11) முதல் திறக்கப்பட உள்ள நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் வளாக பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு டிச. 4-ம் தேதி முதல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. நீண்ட விடுமுறைக்கு முடிந்து அனைத்து விதமான பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் (டிச.11) திறக்கப்படவுள்ளன. அதற்கேற்ப பள்ளி, கல்லூரிகள் திறக்கப் படுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென தமிழக அரசு உத்தர விட்டிருந்தது.
இதையடுத்து வளாகங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநரகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு; தொடர் விடுமுறை முடிந்து மாணவர்கள் வருகையில் வளாகத்தில் பாதுகாப்பான சூழல் உருவாக்கி தரப்பட வேண்டும். வளாகத்தை முழுமையாக தூய்மை செய்ய வேண்டும். தொடர் மழையால் சுற்றுச் சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச் சுவரில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோல், மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை பூட்டி வைப்பதுடன், வளாகத்திலுள்ள உடைந்த பொருட்கள், கட்டிட இடிபாடுகளை அகற்ற வேண்டும்.
சேதமடைந்த கதவு, ஜன்னல்,பெஞ்ச், டெஸ்க் ஆகியவற்றை வர்ணம் பூச வேண்டும். குறைந்த பட்சம் பூஞ்சைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மின் இணைப்பு சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து, கட்டிடங்களின் மேற்கூரைகளில் சுத்தம் செய்யப்பட்டு மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
அதை பின்பற்றி சென்னை உட்பட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவற்றை கண்காணிப்பதற்காக உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பாக ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு கல்வி நிறுவனங்களின் நிலையை நேரில் பார்வையிட்டு பராமரிப்புக்கு தேவையான ஏற் பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர். அந்த வகையில் பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடர்ந்து 2-வது நாளாக சென்னையில் போரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையே மழை பாதிப்பில் பள்ளி மாணவர்கள் பலரின் புத்தகங்கள் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி கூறும் போது,‘‘மழையால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்த மாணவர்களுக்கு தேவைப்படும் பாடநூல், சீருடைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு விரைந்து புதிய பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங் கப்படும்’’ என்று தெரிவித்தார். மேலும், பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் நாளை (டிச. 11) தொடங்கி நடைபெற உள்ளன.
தகுதித் தேர்வு ஒத்திவைப்பு: இந்நிலையில், முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத் தின் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று (டிச.10) நடத்தப்பட இருந்தது. மழை பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த தேர்வுடிச.17-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.