அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலி - கல்வித் தரம் குறித்து அச்சம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 17, 2023

Comments:0

அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலி - கல்வித் தரம் குறித்து அச்சம்

அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலி - கல்வித் தரம் குறித்து அச்சம் - Govt schools headmaster posts vacant - fears over education quality

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 138 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 64 பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்களின் கல்வித்தரம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 71 அரசு மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 138 பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மே மாதம் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை நடைபெற்றது. இதில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மாவட்டத்திற்குள் பணி மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் பெற்றுச்சென்றனர். இப்பணி மாறுதல் கலந்தாய்வுக்கு பின் மாவட்டத்தில் 42 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், 22 அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாகின.

இதற்கு காரணம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய வெளிமாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் அவர்களது சொந்த மாவட்டம் அல்லது அருகிலுள்ள மாவட்டங்களுக்கு பணி மாறுதலில் சென்றுவிட்டனர். தற்போது 64 பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இன்றி அப்பள்ளிகளின் மூத்த ஆசிரியர் தலைமையாசிரியராக பொறுப்பு வகிக்கின்றனர். ஆசிரியர்கள் கலந்தாய்வில் நீதிமன்ற உத்தரவால் எந்த பணியிடத்திலும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவில்லை. பணி மாறுதல் கலந்தாய்வு மட்டும் நடைபெற்றதால், ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் பதவி உயர்வு கிடைக்கவில்லை. அதனால் தலைமையாசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை.

நிரந்தர தலைமையாசிரியர் இன்றி பள்ளிகள் நடைபெற்றால் நிர்வாகம் திறம்பட செயல்பட முடியாது. மேலும் தலைமையாசிரியரின் பணியை மற்றொரு ஆசிரியர் பொறுப்பு வகிப்பதால் அவரும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படுவதற்குள் காலியாக உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடந்துமுடிந்த பிளஸ் 2 அரசு பொதுதேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 96.3 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 12-ம் இடம் பிடித்தது. ஆனால் கடந்த 2022-ம் ஆண்டில் மாநிலத்தில் 3-ம் இடம் பிடித்திருந்த நிலையில் 12-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 93.86 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 12-ம் இடம் பிடித்தது.

கடந்த 2022-ம் ஆண்டில் 5-ம் இடம் பிடித்திருந்த நிலையில் 12-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மாணவர்கள் தேர்ச்சியில் இந்தாண்டு பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில், தற்போது 64 பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லாமல் செயல்படுவது மேலும் கல்வித்தரம் குறைய வாய்ப்புள்ளது என ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews