சிவில் சர்வீசஸ் தேர்வு: நம்மவர்களுக்கு சவால் எது? - Civil Services Exam: What is the challenge for us?
கட்டுரையாளர், கோவை அரசு கலைக்கல்லூரி, அரசியல் அறிவியல் துறை தலைவர். கடந்த 16, ஆண்டுகளாக இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் நடத்தி வருகிறார். தற்போது, 400 மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
குடிமைப்பணி தேர்வு முடிவுகளை, சமீபத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டது. இதில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி எண்ணிக்கை குறைவாக இருக்க, ஏன் குறைந்தது; எப்படி அதிகரிக்க வேண்டும் என்கிற விவாதம் எழுந்துள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக வரலாற்றில் இரண்டு பொற்காலங்கள். முதலாவது பொற்காலம், 1970, 80களில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர், இத்தேர்வுகளில் வெற்றிபெற்று, நாடு முழுவதும் சேவை புரிந்தனர்.
கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் டில்லியை ஆண்டது மதராசிஸ்(தமிழகத்தை சேர்ந்தவர்கள்) என்பார்கள். தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள்தான் டில்லியில் உயர்பதவியில் எல்லா இடத்திலும் இருந்தனர். இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் இருந்து தேர்ச்சிபெறும் மாணவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இதுகுறித்து, தமிழக அரசும் கவனம் செலுத்த,அண்ணா நகர், அடையாரில் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டன.
தமிழகத்துக்கு பொற்காலம் திரும்ப ஆரம்பித்தது, 21ம் நுாற்றாண்டு ஆரம்பத்தில்தான். இது இரண்டாவது பொற்காலம். குறிப்பாக, 2,000 முதல் 2015ம் ஆண்டுவரை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் அதிக ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை உருவாக்கியது தமிழகம்தான். உதாரணத்துக்கு, உத்தரகாண்டில் பெரிய வெள்ளம், பேரிடர் ஏற்பட்ட சமயத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த கலெக்டர் முருகேசனை கவுரவித்தனர். இந்தியாவில் உள்ள ஏறக்குறைய, 700 மாவட்டங்களில், 150 மாவட்டங்களின் கலெக்டர்கள், எஸ்.பி.,கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர் என்று, ஐந்தாண்டுகளுக்கு முன்பு கூறுவர்.
சிறப்பாக செயல்படும் கலெக்டர்களின் பெயர்கள் பெரும்பாலும் தமிழில்தான் இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் பங்களிப்பு குறைந்து வருகிறது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி; சமூக மற்றும் தேசங்களின் வாழ்க்கையிலும் சரி, தோல்வி மேலாண்மை மற்றும் இன்னல் மேலாண்மை மிக முக்கியம். சிக்கலை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் வருங்கால வெற்றி இருக்கிறது. தற்போது, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பாடத்திட்டம் ஓடுகின்ற நதியை போல மாறிக்கொண்டே இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாடத்திட்டம் இன்று கிடையாது. முன் இரண்டு விருப்ப பாடங்கள் இருந்தன; இன்று ஒன்று மட்டுமே உள்ளது. அன்று 'ஆப்டிடியூட் டெஸ்ட்' உண்டு; இன்று இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் சில மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அடிப்படை மாற்றங்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில், இருக்கும் தாள்கள் அப்படியேதான் இருக்கின்றன. கேள்விகளின் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது. அந்த மாற்றத்தை தமிழக மாணவர்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
'சி-சாட்' தாள் எனப்படும் தகுதிகாண் தேர்வு, 12 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. இது, 200 மதிப்பெண்களுடைய 'பிரிலிமினரி' டெஸ்டில் இடம்பெற்றிருக்கும். இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 'ஜெனரல் ஸ்டடீஸ்' எடுத்துக்கொள்வர்.
இந்த தகுதிகாண் தாள், முன்னர் மிகவும் எளிதாக இருந்தது. இன்று இந்த தாளின் தரத்தை உயர்த்தியுள்ளதால், தகுதிகாண் தேர்விலேயே தோல்வியுறும் சூழ்நிலை மாணவர்களிடம் காணப்படுகிறது. பொதுவாகவே, ஐ.ஏ.எஸ்., தேர்வில் கணிதம் வராது என ஒதுக்கி விடுகிறோம். தற்போது, கணிதமும் ஓர் அங்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. இன்ஜினியரிங் கல்லுாரிகளில் கணிதத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், கலை, அறிவியல் கல்லுாரிகளில் கணிதத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை.
நம் மாணவர்கள் பின்தங்குவது பொது ஆங்கில தாளில்தான். ஆங்கிலத்தை பொறுத்தவரை மொழி மட்டுமே கிடையாது; வாய்ப்புகளின் ஜன்னல். கல்லுாரி, பள்ளி மாணவர்களுக்கு 'கம்யூனிகேஷன் இங்கிலீஷ்' குறித்து அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
ஆங்கிலத்தை ஒரு திறமையாக, சக்தியாக கருத வேண்டும். அப்படி கருதினால்தான் தமிழக மாணவர்கள் ஜெயிக்க முடியும். தமிழக மாணவர்களிடம் படிப்பில் எந்த குறையும் கிடையாது; போதிய அறிவு, ஆற்றல், ஞானம் இருக்கிறது.
ஆனால், தன்னம்பிக்கை, 'பாடி லாங்குவேஜ்' குறைவாக இருப்பது பலரிடம் உரையாடலின்போது தெரியவருகிறது. தமிழ், ஆங்கில மொழியுடன், கம்ப்யூட்டர் மற்றும் 'பாடி லாங்குவேஜ்' கற்றுத்தர வேண்டும். 'மென்டல் எபிலிட்டீஸ்' வளர்க்க வேண்டும். தைரியமாக, துணிந்து பேசக்கூடிய ஆற்றல், அணுகுமுறையை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
இரண்டு, மூன்று முறை முயற்சித்தவர்கள், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு திசை மாறுகின்றனர். அன்று, வீழ்ந்தவர்கள் எழுந்துநின்று ஜெயித்துக்காட்டினர்; இன்று தோல்வியுற்றால் திசையை மாற்றிக்கொள்கின்றனர்.
தோல்விக்கான காரணத்தை கண்டறிய வேண்டும். ஒவ்வொரு அரசு கல்லுாரியிலும் போட்டி தேர்வுக்கான மையத்தை உருவாக்க வேண்டும். அதற்கு நிபுணர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்துவது மிக முக்கியம். போட்டித் தேர்வுகளையும் ஒரு துறையாக, முறையாக ஒவ்வொரு கல்லுாரியிலும் அரசு உருவாக்க வேண்டும்.
புரொபஷனல் பயிற்சி மையத்தில் இருப்பவர்கள் தங்களது நிபுணத்துவத்தையும் பெருக்கிக்கொண்டு, மாணவர்களுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுக்க வேண்டும்.
குடிமைப்பணி தேர்வில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., என, 24 வகையான பணிகள் உள்ளன. நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் சக்தி இத்தேர்வு மூலம் கிடைக்கிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.